சென்னை, ஜன.1 ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில், 2025-ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
குண்டர் சட்டத்தில் 190 பேர் கைது
இது குறித்து ஆவடி காவல் ஆணை யரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவடி காவல் ஆணையரக எல்லைகளில் ரவுடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதன் காரணமாக, கொலை வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளன.
கொலை வழக்குகள் ஒப்பீடு 2023-ஆம் ஆண்டு: 59 2024-ஆம் ஆண்டு: 48 2025-ஆம் ஆண்டு: 38 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-இல் கொலை வழக்குகள் 35 சதவீதம் குறைந்துள்ளன. மேலும், 2025-ஆம் ஆண்டில் மட்டும் 190 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், நடப்பாண்டில் கொலை முயற்சி வழக்குகள், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள், வீடு புகுந்து திருடுதல், சங்கிலி மற்றும் அலைபேசி பறிப்புச் சம்பவங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, 2025-ஆம் ஆண்டில் 736 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1,800 கிலோ கஞ்சாவும், 18,900 கிலோ புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த புகையிலை பறிமுதல் அளவானது, மாநிலத்திலேயே ஒரு காவல் ஆணையரகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச அளவாகும். புகையிலை விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் சிலரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விபத்து உயிரிழப்புகள்: சாலை விபத்து உயிரிழப்பு வழக்குகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
2023-ஆம் ஆண்டு: 420 2024ஆம் ஆண்டு: 424 2025-ஆம் ஆண்டு: 290 இதன் மூலம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பி டுகையில், 2025-ஆம் ஆண்டில் உயிரிழப்பு வழக்குகள் 32 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
