அத்துணை பேருக்கும் எமது அன்பு பொங்கும் நன்றி!
எம்மை மேலும் மேலும் உழைக்க – இளமையாக்கியது இப்பயணம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள நன்றி அறிக்கை
‘குலத்தொழில் திணிப்பு – மனுதர்ம யோஜனா எதிர்ப்புத் தொடர் பரப்புரை பயணம்’ ஒன்றிய அரசின் சூழ்ச்சித் திரையைக் கிழித்து – மக்களுக்கு உண்மை வெளிச்சத்தைப் பரப்பியது! அத்துணை பேருக்கும் எமது அன்பு பொங்கும் நன்றி! எம்மை மேலும் உழைக்க – இளமையாக்கியது இப்பயணம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள நன்றி அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கட்சியான பா.ஜ.க.வின் ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று, இறுதிக் கட்டத்தை அடையும் நிலையில், ஒடுக்கப்பட்டோரை நிரந்தர மாகவே படிப்பறிவற்ற நிர் மூட அடிமைப் படுகுழியில் தள்ளுவதற்குத் திட்டமிட்டே, 18 வயதான பிள்ளை களும் குலத்தொழிலையே செய்யவேண்டும்; கல்லூரி – பல்கலைக் கழகப் படிப்புகளைப்பற்றி நினைக்கவே கூடாது என்பதற்கான சூழ்ச்சித் திட்டத்தை ‘‘பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்” என்ற பெயரால் தீட்டியுள்ளனர்.
அதன்மூலம் விஷ உருண்டையில் தேனைத் தடவி, குலத்தொழில் சகதியிலேயே உழன்று கிடக்கு மாறு செய்வதை அறி யாமல் – புரியாமல் இருக் கவே 5 சதவிகித குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி என்று 18 ஜாதிகளைத் தேர்வு செய்துள்ள சூழ்ச் சியை விளக்கி, கடந்த 25.10.2023 அன்று நாகப் பட்டினத்தில் தொடங்கி, நவம்பர் 5 ஆம் தேதி மதுரை மாநகரில் பரப் புரையை வெற்றிகரமாக முடித்துள்ளோம்!
இது தொடர் மழைப் பருவம் என்று அறிந்த போதிலும்கூட!
பொதுத் தொண்டுக்கு காலநேரம் பார்க்கக் கூடாது என்றார் தந்தை பெரியார்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் 1028)
என்ற வள்ளுவரின் கூற்றைத் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டி, பொதுத் தொண் டுக்கு காலநேரம் – பருவம் பார்க்காது, கொட்டும் மழையோ, கொளுத்தும் வெயிலோ, சுழன்றடிக்கும் சூறாவளியோ என்றெல்லாம் பார்க்காது, மான அவமானமும் பார்க்காது – கருமமே கண்ணாயினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் பணிகள் அமையவேண்டும் என்று அறிவுறுத்தி, அறிவு கொளுத்தியுள்ளார்கள்.
பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்டு பணி செய்வது எமது கடமை என்பதால், இந்த ஆபத்தினை மக்களுக்குப் புரிய வைக்கும் பரப்புரைப் பயணமாக இப்பயணம் தொடங்கியது.
ஆச்சாரியாரின் குலதர்மக் கல்வி 1952-1953 ஆம் ஆண்டுகளில் திணிக்கப்பட்டதை எதிர்த்து திராவிடர் கழகம் பரப்புரை நடைப்பயணத்தைத் தொடங்கியது. அதுபோல, காலத்தின் முக்கியத்துவம் கருதி, உடனடியாக இப்பயணத்தைத் தொடங்கினோம்!
‘‘மனுதர்ம யோஜனா”வின் சூழ்ச்சித் திரையைக் கிழித்து, மக்களுக்கு உண்மை வெளிச்சமாகப் பரவியது!
என்னுடன் இரு முக்கிய சொற்பொழிவாளர்கள் (மாற்றி மாற்றி) மற்றும் 20 தோழர்களுடன் புறப்பட்டு, கீழ்க்காணும் சிற்றூர், பேரூர், நகரம், மாநகரம், பட்டிதொட்டிகள் எல்லாம் மழையில் பேசியது குறைவு; மக்கள் வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்ததே அதிகம் என்று மேற்கொண்ட ‘‘மனுதர்ம யோஜனா” எதிர்ப்புப் பயணம் ஒன்றிய அரசின் சூழ்ச்சித் திரை யைக் கிழித்து, மக்களுக்கு உண்மை வெளிச்சத்தைப் பரப்பியது.
காலைச் சிற்றுண்டி ஓர் ஊரில்
மதிய உணவு மற்றோர் ஊரில்
இரவு உணவு வேறோர் ஊரில் (பல நேரங்களில் சாலையோரங்களில்)
மறுநாள் காலை இன்னோர் ஊரில் என்று நாம் பயணித்தோம்.
எங்களது ‘பேட்டரி’ மக்களால்
சரியாக சார்ஜ் செய்யப்பட்டது
கீழ்க்கண்டவகையில் சுற்றுப்பயணம் மக்களுக்குக் கற்றுப் பயணமாக அமைந்தது; அது வெற்றுப் பயண மாக அமையவில்லை. கைமேல் பலன் கண்ணெதிரே தெரிந்தது; கை, கால், உடல்வலி, களைப்பெல்லாம் நமக்கு, நம் குழுத் தோழர்களுக்குக் காணாமற்போயின; எங்களது ‘பேட்டரி’ மக்களால் சரியாக சார்ஜ் செய்யப்பட்டது.
சலிப்போ, சங்கடமோ சிறிதும் இல்லாமல் கழகப் பொறுப்பாளர்களும், தி.மு.க. இரட்டைக் குழலும், கூட்டணித் தோழமையினரும், கட்சி சாரா சான்றோர் பெருமக்களும், இளைஞர் பட்டாளமும் இன்முகத் தோடு கொடுத்த வரவேற்பு – மக்களுக்கு, எதிர்பார்த்த தைவிட அதிகமாகவே புரிதலை – விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயணம் அமைந்ததை எடுத்துக்காட்டியது.
அடைமழை கொட்டியபோதும், மக்கள் கையில் குடையோடும், நனைந்த உடையோடும் ஆர்வம் குன்றாது, ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்திக் கேட்க ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 35, 40, சில இடங்களில் 50 மணித்துளிகளைத் தாண்டியும் உரையாற்றினோம்.
உடனே அடுத்த ஊருக்கு அவசரப் பயணம்; முதற்கூட்டம் 5 மணிமுதல் 7 மணிவரை; இரண்டாவது கூட்டம் நகரில், மாநகரில், பெருநகரில் எப்படி இருந் தாலும் இரவு 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் முடியும். அதுவரை மக்கள் கூட்டமும் – பல கட்சியினரும் கலையாமல் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினரின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக அமைந்தது – நமது நன்றிக்குரியது!
பங்கேற்ற கூட்டங்கள்பற்றிய விவரங்கள் தனியே காண்க:
தேர்தல் பிரச்சாரமாகவும்
இயல்பாகவே அமைந்துவிட்டது!
அக்கூட்ட நிகழ்வுகள்பற்றிய விவரங்களும் ஊடகங்களில் செய்திகளும் வெளிவந்தது ஓரளவு மன நிறைவுடன் அமைந்திருந்தது! தேர்தல் பிரச்சாரமாகவும் இயல்பாகவே அமைந்துவிட்டது!
காலைமுதல் மாலை கூட்டத்திற்குப் புறப்படும்வரை – பகல் 11 மணி முதல் 12 மணி, ஒரு மணிவரை – மாலை 4 முதல் 5 மணிவரை தங்குமிடத்தில் தோழர்கள் தனித் தனியே அன்புடன் சந்தித்து மகிழ்ந்து, உற்சாகப்படுத்திய, ஜாதி, மத, கட்சி வேறுபாடற்ற ஆர்வம் நாம் களைப் பறியாது கடமை ஆற்றப் பெருந்துணையாக நின்றது! அக்கூட்டமே ஒவ்வொரு நாளும் 200 முதல் 300 பேருக்குமேல்!
நமது உயிர் காக்கும் ஓட்டுநர் தோழர்களும், அமைப்பாளர்களுமான தோழர்களும், புத்தகம் பரப்பும் சுறுசுறுப்புத் ‘தேனீக்களும்’ போட்டி போட்டுக் கொண்டு கடுமையாக உழைத்தனர்.
பரப்புரை பயணத்திற்குச் சரியான
‘‘பாராமீட்டர்” அளவீடு!
20 ரூபாய், 50 ரூபாய் புத்தகங்களாக மட்டுமே நேற்றுவரை 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் தொகைக்குப் பரப்பியுள்ளனர் என்பது பரப்புரை பயணத்திற்குச் சரியான ‘‘பாராமீட்டர்” அளவீடு அல்லவா?
உபசரிப்பதில் போட்டி போட்டனர்; நம் உடல் சில நாள்கள் ஒத்துழைக்க மறுத்து, சண்டித்தனம் செய் தாலும், மக்களைப் பார்த்தபோது, அதுவே மருந்தாய், விருந்தாய் அமைந்தது.
முழு விவரங்கள் இன்னொரு நாள்.
எம்மை மேலும் உழைக்க,
இளமையாக்கியது இப்பயணம்!
அத்துணை பேருக்கும் எமது அன்பு பொங்கும் நன்றி!
எம்மை மேலும் மேலும் உழைக்கும் வகையில், இளமை யாக்கியது – இப்பயண மும், தோழர்களின், மக்களின் இணையற்ற ஒத்துழைப்பும், தந்த உற்சாகமும்!
இலட்சியப் பய ணங்கள் முடிவதில்லை –
பெரியாரின் கொள்கைகள் என்றுமே தோற் பதில்லை!
நன்றி! நன்றி!! நன்றி!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.11.2023