சென்னை, ஜன.1 தமிழ்நாடு காவல் துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேருக்கு பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்தார்.
அதன்படி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல், பொரு ளாதாரக் குற்றப்பிரிவு பாலநாக தேவி ஆகியோர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பிரிவுகளில் டிஜிபி-யாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தென் மண்டல அய்ஜி-யாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபி-யாகப் பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மண்டல அய்ஜி-யாகச் சென்னை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், கோவை காவல் ஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் புதிய இடங்களில் பணியை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
