திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு
அ. ஆறுமுகனார் அவர்கள் (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று பிற்பகல் (31.12.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவர் தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்றவர் ஆவார். திருமழப்பாடியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படக் காரணமாக இருந்தவர்.
இவருக்கு மகன் திருவள்ளுவன் (சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர், ஓய்வு) உட்பட அய்ந்து மகன்களும், அல்லி என்ற மகளும் (ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்) உள்ளனர்.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி செயங்கொண்டத்திற்கு நான் சென்றிருந்தபோது ஆறுமுகனாரின் வாழ்விணையர் சாரதம்மாள், மகள் அல்லி ஆகியோர் என்னைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு நிதியும் அளித்தனர். பேராசிரியர் ஆறுமுகனார் மறைவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தமிழ் அன்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.1.2026
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுமுகனார் மகள் அல்லியிடம் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
தொடர்புக்கு: 9843626058
