தஞ்சாவூர், ஜன.1– வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தஞ்சாவூர் நோவா மருத்துவமனையின் மருத்துவக் குழு கலந்து கொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இக்கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 27.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை, இக்கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் நோவா மருத்துவமனையின் மருத்துவர் வி.ஆர்.விக்னேஷ் தனது மருத்துவமனை குழுவுடன் இப்பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்து மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரத்த பரிசோதனை (Blood Test), எலும்பு பரிசோதனை (Screening for Bone), முதுகெலும்பு (Spine) மற்றும் இணைப்பு மூட்டுக்கள் சோதனை (Joints) ஆகிய மருத்தவ பரிசோதனைகள் முடிவுகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நோவா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் வி.ஆர்.விக்னேஷ் பணியாளர்களுக்கிடையே எலும்பியல் மற்றும் முடநீக்கியல் சம்மந்தமான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளையும் மிகவும் எளிமையாக விளக்கினார். இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பணியாளர்கள் பலர் பயனுள்ள மருத்துவம் சார்ந்த கேள்விகள் மூலம் மருத்துவரிடம் விளக்கம் பெற்று பயன் அடைந்தனர். இம்மருத்துவ முகாமில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 75 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இறுதியாக மருத்துவர் குழுவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் க.ரோஜா கல்லூரியின் சார்பில் நன்றியை தெரிவித்தார். இம்மருத்துவ முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜீ.செங்கொடி, ஆர்.நடராஜன் மற்றும் பி.மாதவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
