‘ஸ்வச்ச் சர்வேக்ஷன்’ (Swachh Survekshan) இந்தியாவில் ஆண்டுதோறும் நகரங்களின் ‘சுத்தம் மற்றும் சுகாதாரம்’ ஆகிய அடிப்படைகளில் தரவரிசைப்படுத்தி ஒரு பட்டியலை வெளியிடுகிறது.
2025 ஆம் ஆண்டு ஆய்வில் “மிகவும் அசுத்தமான நகரம்” என மதுரை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் கழிவு மேலாண்மை குறைபாடுகளை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும் அரசியல் கட்சிகளின் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மதுரையின் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
திரும்பும் பக்கமெல்லாம் ஃபயர் விட்டார்கள் அரசியல்வாதிகள் பலர்.
நேற்று ‘ஸ்வச்ச் சர்வேக்ஷன்’ அமைப்பு ‘இந்தியாவின் சுத்தமான நகரம்’ என்று அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரின் பாக்ரத்புரா பகுதியில், கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் பலத்த வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கிய இந்த பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதைப் பற்றி அங்கே ஆட்சியில் உள்ள பா.ஜ.க. தலைவர்களையோ அல்லது ஒன்றிய அமைச்சர்களையோ கேள்வி கேட்க இந்தியாவின் பத்திரிகையாளர்களுக்கு முதுகெலும்பில்லை. அப்படி நேற்று கேள்வி கேட்ட வட இந்தியாவின் ஒற்றை பத்திரிகையாளரைப் பார்த்து ஓடியுள்ளார் ஒரு ஒன்றிய அமைச்சர்.
ஒருவர் பட்டியலை வெளியிட்டால், அதை யார் வெளியிடுகிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். ‘ஸ்வச்ச் சர்வேக்ஷன்’ என்பது ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்தியாவின் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) நடத்தும் ஆண்டு தோறும் நடைபெறும் ஆய்வு. இது ஸ்வச்ச் பாரத் மிஷன் – அர்பன் (SBM-U) திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது என்றாலே, இதில் எவ்வளவு அரசியல் இருக்கும் என்பதை அடிப்படையிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
2014க்குப் பிறகு இந்தியாவின் நிறுவனங்கள் எவ்வாறு பிரச்சாரக் கருவிகளாக மாறினவோ, அதுவே இந்த விஷயத்திலும் நடந்துள்ளது. இந்தப் பட்டியலே முழுமையான அரசியல்தான்! இவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்ற நகரத்தின் “அழகை” இந்த மரணங்களின் வழியே அல்ல; நீங்கள் ஒருமுறை சென்று பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
என் பயண அனுபவத்தில் சொல்கிறேன்—இந்தியாவை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்தால், கண்களை மூடிக்கொண்டு தெற்கில் உள்ள நகரங்கள் எதுவும் வடக்கில் உள்ள நகரங்களுடன் ஒப்பிடும் அடிப்படைத் தகுதியே அற்றவை என்பதை நீங்கள் உணர முடியும்.
வட இந்தியா முழுவதுமே பான்பராக் போன்ற காவி நிறத்தில் மூழ்கியிருக்கிறது என்பதை, நீங்கள் அங்கே ஒரு பயணம் மேற்கொண்டால் புரிந்து கொள்ளலாம். மெட்ரோக்கள் முதல் விமான நிலையங்கள் வரை எல்லாமே எச்சில் காவி நிறம்.
கடந்த ஒரு வாரமாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்தில் இருந்து விட்டு திரும்பியிருக்கிறேன். அந்த நகரத்தின் அசுத்தம் பற்றி இப்போது விரிவாகப் பேசப் போவதில்லை. ஆனால் அங்கே உள்ள சில அரண்மனைகளுக்குச் சென்றால், அதன் அழகிய சுவர்கள் அனைத்துமே Acrylic Sheets-ஆல் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
ஓர் அரண்மனையின் சுவர்களை ஏன் இப்படிச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய, தரையில் இருந்து மூன்று அடி உயரம் வரை பார்த்தால் போதும். அதில் ஒரு “நவீன ஓவியம்” தென்படும்—அவை முழுவதும் இவர்களின் காவி எச்சில் நிரம்பி நாற்றமடித்து கிடக்கிறது.
ஹவா மஹால் என்கிற அரண்மனையின் முகப்பு சுவற்றில் ஏராளமான சிறிய பார்க்கும் இடைவெளிகள் உள்ளன. மன்னர் குடும்பத்து பெண்கள் அந்தச் சிறிய ஜன்னல் போன்ற இடைவெளிகளின் வழியே மறைவில் இருந்து நகரத்தில் நடக்கும் ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்த்திருக்கிறார்கள்.
இன்றோ, ஆயிரக்கணக்கான மக்கள் அந்த அரண்மனையின் ஒவ்வொரு மாடிக்கும் சென்று, அந்த முகப்பு இடைவெளிகளின் வழியே நகரத்தின் தெருக்களைப் பார்ப்பது வழக்கம். ஆனால் அங்கே சென்று பார்த்தால், அந்தச் சிறிய இடைவெளிகள் முழுவதும் காவி எச்சில் வழிந்து ஓடுகிறது.
மதுரையை இன்னும் மேம்படுத்த வேண்டும், இன்னும் சுத்தம் செய்ய வேண்டும் என்பது எல்லாம் வட இந்தியாவுடன் ஒப்பிட்டு அல்ல; இன்னும் முன்னேறிய நகரங்களுடன் ஒப்பிட்டுத்தான் செய்ய வேண்டும் என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு பட்டியல் வெளியானவுடன், அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் ஃபயர் விட்ட மதுரைக்காரர்கள் ஒவ்வொருவரையும் நினைத்தால் குபீர் சிரிப்புதான் வருகிறது.
சிரித்தபடியே 2026க்குள் நுழைவோம்… வாங்க.
– அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர்
