2025ஆம் ஆண்டின் நிகழ்வுகள்

13 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜனவரி 2025

ஜன.1: போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு 377 டன் நச்சுக்கழிவுகள் அகற்றம்.

ஜன.6: சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஜன.7: இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரியைச் சேர்ந்த நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். ஜன.14இல்அவர் பதவியேற்றார்.

ஜன.9: துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் புதிய நெறிமுறைகளை திரும்பப் பெறக்கோரி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜன.20: நெல்லையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய கேரள நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக கேரள அரசு தகவல்.

ஜன.29: இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி.எப்.15 விண்ணல் சீறிப் பாய்ந்தது.

பிப்ரவரி 2025

பிப்.3: “கேரளாவில் இருந்து தமிழ்நாடு பகுதிகளில் மருத்துவ கழிவுகளை வாகனங்கள் கொட்டிச் சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடுங்கள்” என உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான எலும்பு முனைக் கருவி கண்டெடுக்கப்பட்டது.

பிப்.6: தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்களுக்கு 3 ஆண்டுகளாக பதில் அளிக்காதது ஏன் என்று தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

பிப்.9: திருச்சியில் ரூ.18.63 கோடியில் அமைக்கப்பட்ட பறவைகள் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பிப்.12: லண்டன் சிறுவர் பூங்காவில் 170க்கும் மேற்பட்ட 2ஆம் உலகப் போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

பிப்.14: 108 ஆம்புலன்ஸ் வருகையை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Avasaram 108 Tamilnadu’ (அவசரம் 108 தமிழ்நாடு) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

பிப்.24: தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பிப்.25: சென்னையில் ரூ.8 கோடி குத்துச்சண்டை அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பிப்.26: கரூர் மற்றும் பெரம்பலூரில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடியில் காலணி தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிப்.27: ஒன்றிய ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மார்ச் 2025

மார்ச்.10: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சர்ச்சைப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, டில்லியல் தமிழ்நாடு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாநிலங்களவையில், அவர் மன்னிப்புக் கேட்டார்.

மார்ச்.12: மியான்மர் – தாய்லாந்து எல்லையில் மோசடி நிறுவனங்களில் சிக்கித்தவித்த 549 இந்தியர்கள் மீட்பு.

மார்ச்.14: தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். சென்னைக்கு அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

மார்ச்.15: நண்பர்கள், உறவினர்கள் கொடுக்கும் பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவசாயத் திட்டங்களுக்கு ரூ.45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

மார்ச்.19: சிந்துவெளிப் பண்பாட்டைக் கண்டுபிடித்த ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

100 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்

மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களின் தயாரிப்புப் பொருள்களை பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்லலாம். காஞ்சிபுரம் உள்பட 9 நகரங்களில் ‘தோழி’ விடுதிகள் அமைக்கப்படும் என்று மகளிர் நாள் விழாவில் (மார்ச் 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் பெண்கள் இயக்கும் 100 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார்.

ஏப்ரல் 2025

ஏப்ரல்.2: கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

ஏப்ரல்.8: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அவரது செயல் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏப்ரல்.12: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

மாநில அரசின் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்தக் காரணமும் சொல்லாமல் நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல்.29: கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஆளும் லிபரல் கட்சி தொடர்ந்து 4ஆவது முறையாக ஆட்சியமைத்தது.

மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறியது.

மே 2025

தமிழ்நாடு

மே 2: கோயம்பேடு – பட்டாபிராம் (21.76 கி.மீ) மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்.

ஆஸ்திரேலியா பிரதமராக அந்தோணி அல்பானிஸ் மீண்டும் தேர்வானார்.

மே 4: சிங்கப்பூரில் 14ஆவது முறையாக ஆளும் கட்சி வெற்றி வாகை சூடியது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராக தேர்வானார்.

மே 7: தி.மு.க. அரசின் 4 ஆண்டு கால சாதனை விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் நடந்தது.

மே 8: திருச்சி துவாக்குடியில் ரூ.57  கோடியில் அரசு மாதிரிப் பள்ளி புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் திருச்சியில் சுமார் 7 கி.மீ. தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். மேலும் திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையையும் திறந்து வைத்தார்.

மே 14: ஆகம விதிகளை கடைப்பிடிக்காத கோவில்களில் அனைத்து ‘ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

மே 23: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் நிருவாகம் தடை விதித்தது.

மே 29: தமிழ்நாடு அரசின் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஜூன் 2025

ஜூன் 1: மதுரையில் தி.மு.க. பொதுக்குழு பிரமாண்டமாக நடந்தது. இதில் எடுத்த முடிவின்படி கல்வியாளர், மாற்றுத் திறனாளிகள் அணி என 2 புதிய அணிகள் ஜூன் 23இல் உதயமானது.

ஜூன் 5: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நாளொன்று ஊதியம் தமிழ்நாட்டிற்கு ரூ.319இல் இருந்து ரூ.336ஆக உயர்த்தப்பட்டது.

‘தட்கல்’ பயணச்சீட்டு முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என்று ரயில்வே அறிவிப்பு.

ஜூன் 10: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தமிழ் நாட்டிற்கான நிதியை ஒதுக்குங்கள் என ஒன்றிய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 13: ஒரு குடும்பத்தில் பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர மாநில அரசு தொடங்கியது.

ஜூன் 16: தமிழ்நாடு முழுவதும் 3,103 வழித்தடங்களில் புதிய மினி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜூன் 30இல் மாநிலத்தில் முதன் முறையாக சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஜூன் 17: கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஜூலை 2025

ஜூலை 1: வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் திறன் பயிற்சி அளிக்கும் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே கைப்பேசி செயலியில் பெறும் வகையில் ‘ரயில்ஒன்’ செயலி அறிமுகம்.

ஜூலை 7: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி, ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் அறிவித்தார்.

ஜூலை 12: செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 15: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் முகையூர், பனையூர் உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்கத் தமிழ்நாடு அரசு இடங்களை தேர்வு செய்தது.

ஆகஸ்ட் 2025

ஆகஸ்ட் 2: 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நாட்டில் தேர்தல் அமைப்பே செத்துப்போய் விட்டதாகவும் ராகுல்காந்தி பரபரப்புக் குற்றம் சாட்டினார். ஆக.7இல் தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாக அவர் ஆதாரங்களை வெளியிட்டார்.

ஆகஸ்ட் 8: தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 9: 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியது.

ஆகஸ்ட் 19: உடல் உறுப்பு கொடையில் தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருதை ஒன்றிய சுகாதாரத்துறை வழங்கியது.

பீகாரில் ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணி

தமிழ்நாடு

65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக.27இல் பீகாரில் ராகுல்காந்தி நடத்திய பேரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக ஆக.14இல் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 25: தமிழ்நாட்டில் 19 இடங்களில் ரூ.128.5 கோடியில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்த திட்டங்கள்

ஆக.2: சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதன்படி மாநிலம் முழுவதும் 1,256 முகாம்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.

ஆக.7: கலைஞர் நினைவு நாளையொட்டி கலைஞர் நிதிநல்கை, கலைஞர் மாணவ பத்திரிகையாளர் ஆகிய 2 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ஆக.12: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆக.19: மேனாள் ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

ஆக.26: தமிழ்நாட்டில் உள்ள 2,430 நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கலந்து கொண்டார்.

இதற்கிடையில் ஆக.6இல் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

செப்டம்பர் 2025

செப். 1: பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ரோந்துக் கப்பலில் வந்து கச்சத்தீவை பார்வையிட்ட இலங்கை அதிபர், அதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பேசினார்.

செப். 7: முல்லைப் பெரியாறு அணையை இயற்கையுடன் போராடி கட்டிய பென்னிகுவிக் குடும்பத்தினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் நேரில் சந்தித்தார். அப்போது பென்னிகுவிக் சிலையை இங்கிலாந்தின் கேம்பர்ளியில் நிறுவியதற்கு, குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்தனர்.

உட்கட்சிப் பூசலால் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திடீர் பதவி விலகல்.

செப். 8: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 12ஆவது ஆவணமாக ஆதாரை சேர்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப். 10: ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

செப். 15: பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கிடும் ‘அன்புக்கரங்கள்’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செப். 16: காவேரிராஜபுரம் (திருவள்ளூர் மாவட்டம்), முத்தூர் (திருநெல்வேலி), கடம்பாடி (செங்கல்பட்டு), கொறுக்கை (திருவாரூர்) ஆகிய 4 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செப். 22: பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு சென்னை ஒன்று என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

ஜெர்மனி, இங்கிலாந்தில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அதில் முதலில் ஜெர்மன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (செப்.1) தமிழ்நாட்டில் ரூ.3,201 கோடி முதலீடு செய்யும் வகையில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். மறுநாள் 26 நிறுவனங்களுட்ன் ரூ.7 ஆயிரம் கோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டுசெல்டோர்ப் நகரில் பழைய கார்களையும் கண்டு ரசித்தார்.

செப்.3இல் இங்கிலாந்து சென்ற மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வில்சன் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் மின்மாற்றி உற்பத்தி மய்யத்தை நிறுவ ரூ.300 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் (செப்.5) பெரியார் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அக்டோபர் 2025

அக். 2: இலவச கட்டாயக் கல்வி திட்டத்தை செயல்படுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு ரூ.538 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியது.

அக். 6: மருத்துவ நோபல் பரிசு மேரி பிரங்கோ, பிரெட் ராம்ஸ்டெல், ஷிமொன் சாகாகுச்சி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக். 8: ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றினை உயிரியல் பாரம்பரியத் தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அக். 10: கோவையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மநாட்டை 71 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

அக். 11: தமிழ்நாட்டில் ஜாதிப் பெயரில் உள்ள தெருக்கள், சாலைகளின் பெயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டது. அக்.17இல் இந்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தியாவில் முதல் முறையாக ரூ.53 கோடி செலவில் பன்னாட்டு தரத்தில் கட்டப்பட்ட கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அக். 19: டிரம்ப் அரசின் நிருவாகம் மற்றும் கொள்கைகளைக் கண்டித்து அவருக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவில் தீவிரம் அடைந்தது. வாசிங்டன் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் 70 லட்சம் மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக். 22: தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான 4ஆவது ரயில் பாதை திட்டத்துக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்.

நவம்பர் 2025

தமிழ்நாடு

நவ. 1: ரூ.1 லட்சம் கோடி செலவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பொருள்கள், தங்க பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

நவ. 6: அரசியல் கட்சிக் கூட்டங்களை 3 மணி நேரம் மட்டுமே நடத்த வேண்டும். 50 ஆயிரம் பேருக்கு மேல் கூடினால் ரூ.20 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளன. இதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

நவ. 9: ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் ஆர்பிட்டர் அனுப்பிய நிலவில் நீர் இருப்பதற்கான ஒளிப்படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

நவ. 10: மதிய உணவு, யோகா பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் முதியோர்களுக்காக ‘அன்புச்சோலை’ என்று பெயரில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு மய்யங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நவ. 11: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நவ. 15: அரியானாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருளை காஷ்மீர் காவல் நிலையத்தில் வைத்து பிரித்தெடுத்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

நவ. 18: கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லை என்று காரணம் கூறி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை ஒன்றிய அரசு தர மறுத்துவிட்டது.

 

பீகாரில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி

பீகார் சட்டமன்ற தேர்தலில் நவ.14இல் வெளியானது. இதில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. 10ஆவது முறை முதலமைச்சராக நிதிஷ்குமார் நவ.20இல் பதவியேற்றார். 26 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

நவ. 25: கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.44 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 158 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

டிசம்பர் 2025

டிச. 2: தினத்தந்தி நிருவாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

டிட்வா புயலுடன், இந்தியப் பெருங்கடலில் உருவான சென்யார் புயலும் இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கியது. இதில் பலி எண்ணிக்கை 1,300அய்க் கடந்தது. டிச.6இல் புயலால் பாதித்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசு 950 டன் நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.

டிச. 3: தூய மல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வைத்தது.

டிச. 16: சிலி நாட்டின் அதிபராக ஜோஸ் அன்டோனியோ தேர்வானார்.

டிச. 21: உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அறக்கட்டளைகள் மூலமாக ஆளும் பா.ஜனதா கட்சி ரூ.3,112 கோடி நிதி வசூலித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ரூ.698 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

டிச. 25: தெருக்களில் கொண்டு வந்து விற்கப்படும் இடியாப்பம் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு உரிமம் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *