சென்னை, டிச. 31- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று (30.12.2025) செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், “தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள்களை கட்டுப்படுத்தி போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். அதிமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருந்தது. பான்பராக் உள்ளிட்ட பொருள்களுக்கு தமிழ்நாட்டில் மட்டும்தான் தடை விதித்திருக்கிறோம். கருநாடகத்தில் தடை விதிக்கவில்லை. அங்கிருந்து வருவதனால் எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கஞ்சா பயிரிடுவது பூஜ்ய சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி எங்குமே இல்லை. குற்றச்சாட்டு சொல்பவர்கள் எங்கே கஞ்சா விற்கப்படுகிறது என்று கூறினால் நடவடிக்கை எடுப்போம்.
கஞ்சா பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கஞ்சா பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
வெற்றிகரமான மெட்ரோ ரயில் திட்டம்!
சென்னை, டிச.31- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3இல் மேலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2இல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3இல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி, அயனாவரம் நிலையத்திலிருந்து பெரம்பூர் நிலையம் வரையிலான (down line) 861 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.
இது டாட்டா திட்ட நிறுவனத்தின் டியூ02 ஒப்பந்தப் பிரிவில் எட்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி, பெரம்பூர் ரயில் நிலைய தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளுக்கு அடியில், அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது. சுரங்கப்பாதை அமையும் வழியில் இருந்த 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் (Bore wells) முறையாகக் கையாளப்பட்டன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அக்கிணறுகளுக்குப் பதிலாக மாற்று நீர் ஆதாரங்கள் மெட்ரோ நிர்வாகத்தால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாட்டா திட்ட நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
