சென்னை, டிச.31- திருவான்மி யூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் (ஈசிஆர்) சாலையில் அமையவுள்ள 15 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத் திற்கான ஒப்பந்தத்தை கேஎன்ஆர் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையில் அமைய உள்ள நீளமான இரண்டாவது பெரிய பாலமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) ரூ. 2,100 கோடி மதிப்பீட்டில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழி மேம்பாலம் அமைக்க உள்ளது. இது மாநில அரசு மேற்கொள்ளும் மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் திட்டத்தின் இறுதிச் செலவு மாறக்கூடும்.
சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் பிற சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும். TNSHA நேற்று (30.12.2025) இந்த திட்டத்திற்கான பன்னாட்டு டெண்டர்களை வெளியிட்டது.
இந்த உயர்மட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திட்டத்திற்காக இசிஆர் சாலை 30 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், எல்.பி. சாலை சந்திப்பு மற்றும் நீலாங்கரை போன்ற முக்கிய இடங்களில் துணை பாதைகள் அமைக்கப்படும்.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை
திட்டம் நிறைவடைந்ததும், தற்போதைய 60 நிமிட பயண நேரம் 15-20 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைடல் பார்க் முதல் உத்தண்டி வரை, நடுவரிசையில் தூண்கள் அமைத்து இந்த மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தச் சாலை 16 முதல் 20 மீட்டர் அகலத்துடன் நடைபாதைகளையும் கொண்டிருக்கும்.
இந்த மேம்பாலத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிக் கடன்கள் மூலம் தனியார் பங்களிப்புடன் இந்தச் சாலை கட்டப்படும். இது கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசலைக் குறைப்பதுடன், அடையாறில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாம்பாக்கம் போன்ற ஓஎம்ஆர் பகுதிகளுக்கும் மாற்றுப் பாதையாக அமையும்.
நீலாங்கரை, கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர் உள்ளிட்ட 13 முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்.பி. சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை ஆகிய இடங்களில் இந்த மேம்பாலத்தில் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் மிக நீண்ட உயர்மட்ட சாலை
தூரம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் மூடிய சுங்கச்சாவடி முறை அமல்படுத்தப்படும். எல்.பி. சாலை – இ.சி.ஆர். சந்திப்பில் இருந்து திருவான்மியூர் ஆர்.டி.ஓ. வரையிலும், அக்கரையில் ஒரு மேம்பாலம் கட்டவும் முன்பு திட்டமிடப்பட்டது. இந்தச் சாலை தினமும் 70,000 கார் அலகுகளைக் கையாள்கிறது.
திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 9.2 கி.மீ. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளில் 90% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பயன்பாட்டில் உள்ள நாட்டின் மிக நீளமான உயர்மட்ட சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கட்டப்பட்ட 7.3 கி.மீ. மதுரை-நத்தம் நெடுஞ்சாலை ஆகும். சென்னை நகரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலும் மூன்று ஆறு வழி உயர்மட்ட சாலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
இதில் 20.1 கி.மீ. சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரட்டை அடுக்கு விரைவுச்சாலை கட்டப்பட்டு வருகிறது. மேலும், கிளம்பாக்கத்தில் இருந்து மறைமலைநகர் வரை 17.5 கி.மீ. தூரத்திற்கும், வெளிவட்டச் சாலையிலிருந்து மதுரவாயல் வரை 18 கி.மீ. தூரத்திற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
