பிரிட்டிஷ் காலனித்துவ காலம் முதல் இன்று தற்போதைய தி.மு.க. அரசு முன்னெடுக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி வரை, தமிழ்நாட்டின் பொது நூலக இயக்கம் என்பது அறிவை ஜனநாயகப்படுத்தியதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் நூலகங்களின் வரலாறு என்பது வெறும் புத்தகங்களைச் சேமிப்பது மட்டுமல்ல, அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அறிவு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் ஒரு கருவியாகவே பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே இருந்த கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கம், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகு சாமானிய மக்களையும் சென்றடையத் தொடங்கியது.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் “வாசிப்பு என்பது ஒரு புரட்சிகரச் செயல்” என்பதில் உறுதியாக இருந்தனர். நமது கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை புத்தகத் தேனீ என்றே கூற வேண்டும் – அப்படிதான் கூறியும் வருகிறார்கள்! “வீட்டுக்கோர் புத்தகசாலை” என்ற அண்ணாவின் முழக்கம், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நூலகங்கள் பரவக் காரணமாக அமைந்தது.
1948 நூலகச் சட்டம்: இந்தியாவின் முதல் முயற்சியாகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த உடனேயே, 1948-ஆம் ஆண்டில் ‘மெட்ராஸ் பொது நூலகச் சட்டத்தை’ (Madras Public Libraries Act) கொண்டு வந்த பெருமை தமிழ்நாட்டையே சாரும். இந்தியாவில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் இதுவேயாகும். இதன் மூலம் ஊர்தோறும் கிளை நூலகங்கள் உருவாவது சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
தற்போதைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், நூலக இயக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகம்: ஆசியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக – சென்னையின் அடையாளமாகத் திகழ்கிறது.
கோவை: தந்தை பெரியார் பெயரில் மாபெரும் நூலகம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம்: மதுரையில் பேருரு எடுத்துள்ள நூலகம் தென் தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்து வருகிறது.
சேலம்: பாரதிதாசன் நினைவு நூலகம், சேலத்தில் அறிவுசார் மய்யமாக நூலகம் அமைய உள்ளது.
திருநெல்வேலி: காயிதே மில்லத் நினைவு நூலகம், நெல்லையில் பாளையங்கோட்டை பகுதியில் இந்த நூலகம் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அறிவுசார் மய்யங்கள்: வெறும் நூலகங்களாக மட்டுமன்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பயிற்சிக் களங்களாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவுத் தளங்களாகவும் இவை மாற்றப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த அறிவுத் தேடல், இன்று தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருக்கும் கிளை நூலகங்கள் வாயிலாக ஏழை, எளிய மாணவர்களுக்கும் சாத்தியமாகியுள்ளது. இதுவே சமூக நீதியின் உச்சம் மற்றும் அறிவுப் பரவலாக்கத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
அண்மையில் மாநிலங்களில் கட்டமைப்புப் பற்றி வெளி வந்துள்ள செய்தியில் ‘தமிழ்நாடு மட்டுமே நூலகம் இல்லா மாவட்டம் இல்லை என்ற கட்டமைப்பு உடைய மாநிலம்’ என்று கூறி உள்ளது.
அதுமட்டுமா? ‘வளர்ந்த அய்ரோப்பிய நாடுகளோடு போட்டியிடும் நிலையில் தமிழ்நாடு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெரியார் திடலுக்கு வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் திடலில் இருந்த – வைக்கத்தில் பெரியார் பெயரில் நூலகம் திறந்து வைக்கப்பட்ட படத்தைப் பார்த்து ‘‘கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில – இரு முதலமைச்சர்கள் அந்த ஒரு நூலகத்தை திறந்து வைக்கிறார்களே!’’ என்று வியப்போடு கூறினார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ‘திண்ணை தோறும் படிப்பகம்’ என்ற ஒரு முறையை இவ்வாறு உருவாக்கியதே திராவிட இயக்கம்தானே!
திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்களின் கணிப்புப்படி, திராவிட இயக்கம் இதழ்களின் எண்ணிக்கை 257 என்று தெரிய வருகிறது. (‘‘திராவிட இயக்க இதழ்கள்’’ பக்கம் – 8–22)
சிந்தனைக்கு எருவிட்டு வளர்ப்பதுதானே தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்க – திராவிட இயக்கத்தின் நோக்கமாக இருந்தது –இருக்கிறது!
பெரியார் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் நூல்கள் வெளியீட்டை ஒரு செயல் திட்டமாகவே கொண்டு செயல்பட்டு வருவதை வரலாறு என்றென் றைக்கும் போற்றும்! கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களில்கூட நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒரு தனி அம்சமாகவே இருந்து வருகிறது.
சமூக வலைதளங்கள் போன்றவை பொதுவாக ஏடுகளின் வாசிப்பில் சற்றுத் தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும் திராவிட மாடல் அரசினால் நூலக இயக்கம் பரந்து வளர்ந்து பலன் கொடுக்கிறது என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை!
