‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட’’த்தை ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியுள்ளார்கள்!

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டில் ‘வணக்கம்’ என்று சொல்கிறார்களே, ‘ராம், ராம்’ என்று நாம் மாற்றுவதற்கு
என்ன வழி என்று யோசித்தார்கள் – ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள்!
‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட’’த்தை ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியுள்ளார்கள்!
ராமன் பெயரை எப்படியாவது நம் மக்கள் உச்சரிக்க வேண்டுமாம்!
வடசென்னை: பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, டிச.31 தமிழ்நாட்டில் ‘வணக்கம்’ என்று சொல்கிறார்களே, நாம் ‘ராம், ராம்’ என்று மாற்றுவதற்கு என்ன வழி என்று யோசித்தார்கள். ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால்,  கொண்டுவரப்பட்ட ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’’ என்பதற்குப் பதிலாக ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியுள்ளார்கள். அதாவது, ராமன் பெயரை எப்படியாவது நம் மக்கள் உச்சரிக்க வேண்டுமாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி;
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பிலான பரப்புரை தொடர் பயணம் – ‘‘பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா!’’ ஆகிய இரு பெரும் நிகழ்ச்சிகள் – வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 26.12.2025 அன்று மாலை 6 மணியளவில், பிரிக்களின் சாலை வெங்கடம்மாள் சமாதி தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே
பயிற்சி பெற்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன? அந்த  அமைப் பைப்பற்றி உங்களுக்கு மிக எளிமையாகச் சொல்ல வேண்டும். அன்றைக்கும், இன்றைக்கும் சாந்த சொருபி என்றும், நாட்டுத் தந்தை என்றும், கருதப்படக்கூடிய காந்தியார். அந்தக் காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே என்ற உயர்ஜாதி பார்ப்பனர், மராத்தி பார்ப்பனர் பயிற்சி எடுத்த இடம் ஆர்.எஸ்.எஸ். இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைக்குக் காந்தியாரைப் பார்த்து  கும்பிட்டுக் கொண்டே எப்படி அவர்கள் காந்தியாரைச் சுட்டுக் கொன்றார்களோ, அந்தத் தத்துவத்தைப் போலவே, காந்தி படம், இந்திய ரூபாயில் இருக்கிறது.  கிராம மக்களுக்கு என்று அந்த காந்தியார் பெயரில் ஒரு நல்ல திட்டம் உருவாயிற்று. நீங்கள் எல்லாம் நகரத்தில் இருப்பதினால், உங்களில் சில பேருக்குப் புரியாமல் இருக்கலாம். நகரத்தில் நீங்கள் இருந்தாலும், சென்னை நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது  மிகமிகக் குறைவுதான். எல்லாரும் வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள்தான். ‘‘சென்னைக்கு வந்து சிவமானேன்’’ என்று ஒரு பழமொழி உண்டு.  எந்த ஊர் என்று கேட்டீர்கள் என்றால்,  ‘‘நான் நாகர்கோவிலில் இருந்து வந்திருக்கேன்; நான் நெல்லையில இருந்து வந்திருக்கேன்’’ என்று சொல்வார்கள்.  சென்னையிலேயே பிறந்து சென்னையிலயே வளர்ந்து பல தலைமுறையாக இருக்கிறவர்கள் மிகமிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். ஒன்றிய அரசு  கிராமப்புறங்களில்,  ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’’ என்று ஒரு திட்டத்தை உருவாக்கியது.  கிராமப்புறங்களில்  12 மாதங்களிலும் விவசாயம் கிடையாது. மழை பெய்தால்தான் விவசாயப் பணிகள் நடைபெறும். அதிகமாக மழை பெய்தாலும் விவசாயம் செய்ய முடியாது. இப்படி இருக்கிற மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு,  வறுமையில் இருக்கிற மக்களுக்கு, எல்லா நாட்களுக்கும் அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்; வேலைவாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு மேலாகிறது!

குறைந்தது 100 நாள் வேலை வேலைத் திட்டம் அப்படின்னு ஒரு வேலைத் திட்டத்தை கொண்டு வந்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்றால் நண்பர்களே, அந்த வேலைத் திட்டம் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலே ஆகி இருக்கிறது.

முதலில் அந்த வேலைத் திட்டத்தினுடைய அடிப்படை என்ன?  2005 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி  (யு.பி.ஏ.) அரசு இத்திட்டத்தை அறிவித்தது. ஏழை கிராமப் பெண்களுக்கு வருவாய் கிடையாது; அதே மாதிரி விவசாயிகள், ‘‘மண்வெட்டி கூலி தின்னல் ஆச்சே’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்களுடைய ஏழைத் தன்மை. அப்படி இருந்த ஏழ்மையை, வறுமையை, வேலையில்லா கொடுமையை, பட்டினியைப் போக்கு வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தத் திட்டத்திற்குக் காந்தியார் பெயர் வைத்தார்கள். ஏன் காந்தியார் பெயர்  வைத்தார்கள் என்றால், காந்தியார்தான் சொன்னார், ‘‘இந்தியா கிராமங்களில் வாழுகிறது’’ என்றார். அவருடைய மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ‘‘இந்தியாவில் கிராம ராஜ்ஜியம் நடக்க வேண்டும்; கிராமத்துக்காரன் நல்லா இருக்க வேண்டும்’’ என்றார்.

காந்தியார் என்றாலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பிடிக்காது

இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தான்,  இந்த வறுமை ஒழிப்புக்கான – உலகுக்கே முன்மாதிரியான திட்டமாகக் கொண்டு வந்தார்கள். வேலைவாய்ப்பு கட்டாயம் கொடுக்க வேண்டும் –  என்று ஒன்றிய அரசு  வேலைவாய்ப்பை சட்டபூர்வ மாக்கியது.  அது பிச்சை அல்ல; எனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்கக்கூடிய அளவிற்கு, வேலைவாய்ப்பைக் கட்டாயமாக ஆக்கிய திட்டம்.  கிராம விவசாயக் கூலிகளுடைய அடிப்படைக் கூலி அளவு அதிகரிப்பதற்கே காரணம் – இந்த திட்டத்தை வைத்துதான் அதிகப்படுத்தினார்கள். இப்படி நன்றாக நடந்து கொண்டு வந்த திட்டத்தை மாற்றி சிதைத்துள்ளார்கள்.

காந்தியார் என்றாலே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் பிடிக்காது. ஏன் காந்தியாரைப் பிடிக்காது அவர்களுக்கு? காந்தியார் என்ன செய்தார்? எல்லோருக்கும் காந்தியார் பொது மனிதர்; அதனால்தான் இந்திய ரூபாயில் அவருடைய படத்தைப் போட்டார்கள்.  அந்தக் காந்தியாரை அன்றைக்குச்  சுட்டுக் கொன்றது மட்டு மல்ல, அதற்கு பயிற்சி கொடுத்த அமைப்பு எது என்று சொன்னால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது வரலாறு. அன்றைக்குக் கூட தமிழ்நாடு, அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும்; அமளிக்காடாக மாறக்கூடாது என்பதற்குப் பாடுபட்ட இயக்கம், பெரியாருடைய இயக்கம், திராவிட இயக்கமாகும். அன்றைக்குப் போலித்தனமாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள்.  ஓர் இஸ்லாமியர்தான், காந்தியரைக் கொன்றார் என்று.  அதனால், கலவரங்கள் வரவிருந்த நேரத்தில், அதனை எதிர்த்துப் பேசிய பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு. அதை அடக்கிய பெருமை, ஓமந்தூரார்– காங்கிரஸ்காரர் முதலமைச்சராக இருந்த போது, பெரியாரை அழைத்துதான் வானொலி மூலமாகப் பேச வைத்தார். அதனால், அமைதி உண்டாயிற்று.  எனவே, இந்த அமைதி பூங்காவாக இருக்கிற இடம், நம்முடைய இடம். அப்படிப்பட்ட இந்த அமைதிப் பூங்காவாக இருப்பதைக் குலைப்பது மட்டுமல்லாமல், காந்தியார் பெயரையும் அவர்கள் தூக்கி எறியக்கூடிய அளவிற்கு, என்ன செய்தார் காந்தியார்?  கொஞ்ச நாள் ஆனால், மறுபடியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், இந்திய ரூபாய் நோட்டில் உள்ள காந்தியார் படத்தை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக கோட்சே படத்தைப் போட்டாலும் போடுவார்கள். அதைக் கண்டு அதிசயப்படக்கூடிய அளவிற்கு இல்லை. இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்பதற்கு அடையாளம்!

ஒவ்வொருவருடைய முட்டியைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு,  ‘ராம், ராம்’ என்பார்கள் வடநாட்டில்!

நம்முடைய தமிழ்நாட்டில் ‘‘ராம் ராம்’’ என்று சொல்வ தில்லை.  வடநாட்டில், ‘வணக்கம்’ சொல்ல மாட்டார்கள்.  உத்தரப்பிரதேசத்தி்ல, ஒவ்வொருவருடைய முட்டியைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு,  ‘ராம், ராம்’ என்பார்கள். இங்கே ராமருக்கே வேலை இல்லை. ராமருக்கு அயோத்தில் தான் வேலை.

தமிழ்நாட்டில் ‘வணக்கம்’ என்று சொல்கிறார்களே, நாம் ‘‘ராம், ராம்’’ என்று சொல்கிறோம். இதைப் பரப்புவ தற்கு என்ன வழி என்று யோசித்தார்கள். ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள். ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’’ என்பதற்குப் பதிலாக ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியுள்ளார்கள்.

அதாவது, ராமன் பெயரை எப்படியாவது நாம் உச்சரிக்க வேண்டுமாம். இந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லும்போது, ‘‘ராம்ஜி ராம்ஜி’’ என்பார்கள்.   அங்கே ராம்ஜி; இங்கே வந்தால் முருகன்ஜி.

கடவுள்  நம்பிக்கை உள்ள மக்களை ஏமாற்றி, ‘விபி-ஜி ராம் ஜி’ என்று அந்தத் திட்டத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தத் திட்டத்தில் இருந்த காந்தியார் பெயரை நீக்கிவிட்டார்கள். காந்தியார்  அவர்கள், யாருக்கும் எந்தத் தீமையும் செய்யவில்லை.

தந்தை பெரியார் அவர்கள்,
அவருடைய டைரியில் குறிப்பிட்டிருக்கிறார்!

ஏன் காந்தியாரை சுட்டார்கள் என்று சொல்லும்போது, தந்தை பெரியார் அவர்கள், அவருடைய டைரியில் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரியார் எப்படிப்பட்ட முன்னோக்கு உள்ளவர்; பெரியார் ஒரு சீரிய சிந்தனையாளர் என்பதற்குச் சான்றாக  ஒரு புத்தகத்தில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்,  எழுதி இருக்கிறோம் – அந்தப் புத்தகத்தில் இருக்கிற ஒரு தகவலை உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறோம்.

தந்தை பெரியார் அவர்கள், நாள்தோறும் டைரி எழுதுவார். அந்த நாட்குறிப்பில் ஒரு செய்தியை எழுதி வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு நடைபெறுகின்ற போராட்டமே, மனுதர்மத்திற்கும், ஜாதி தர்மத்திற்கும் – ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று சொன்ன அம்பேத்கர் அவர்களுடைய தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும்தான் போராட்டம்.

இந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு,   மனுதர்மத்தைதான் அரசியலமைப்புச் சட்டமாக ஆக்கவேண்டும் என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஒன்றிய அரசு.

காந்தியாரிடம், ‘பிராமணர் சங்க’த்தினர் கொடுத்த புகார் கடிதம்!

ஆகவே அந்த அடிப்படையில், ஏன் காந்தியார் மேல் அவர்களுக்குக் கோபம். இது பழைய கதை – பழைய வரலாறு தெரியாது  நம்முடைய மக்களுக்கு. காந்தியார்  இங்கே வந்தபோது, ஓமந்தூர் ராமசாமி அவர்கள் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தார். ஒழுக்க சீலர், ஒருவிதமான புகாரும் அவர் மேல் சொல்ல முடியாது.  அப்பேற்பட்டவர் மேல், காந்தியாரிடம் சென்று, ‘பிராமணர் சங்கம்’ சார்பாக ஒரு புகார் கடிதம் கொடுத்தார்கள். அந்தக் கடிதத்தில், ‘‘இவர் தாடி இல்லாத ராமசாமிப் பெரியாராக இருக்கிறார். கருப்புச்சட்டை போடாத முதலமைச்சராக இருக்கிறார்.  இவர் என்ன செய்கிறார் என்றால்,  கம்யூனல் ஜிஓ – வகுப்புவாரி உரிமை – சமூக நீதி என்ற பெயரால் முழுக்க முழுக்க அவர்  செய்து கொண்டிருப்பதுபடி,  எங்களையெல்லாம், எங்கள் பிள்ளைகளையெல்லாம் படிக்கக்கூடாது என்று ஆக்கிவிட்டார். எல்லாவற்றையும் அவர்களுடைய (பார்ப்பனரல்லாதார்) பிள்ளைகளுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்,
கல்வியைக் கொடுக்கக் கூடாது!’’

ஆனால், அவர்களுடைய மனுதர்மத்தில், ‘‘சூத்திர னுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்கக் கூடாது’’ என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளையெல்லாம் பார்த்தீர்கள் என்றால்,   மதிவதனி  எம்.எல். படித்தி ருக்கிறார். முன்பெல்லாம் பி.எல். படிப்பது என்பதே பெரிய விஷயம்.  ‘எம்.எல். பிள்ளை’ என்றே ஒருவருக்குப் பெயர் இருந்தது. ஏனென்றால், அந்தக் காலத்தில் எம்.எல். படித்த ஒரே ஒரு தமிழர் அவர்.

இங்கே எத்தனை வழக்குரைஞர்கள்? எத்தனை டாக்டர்கள்?  இங்கே ஒரு பக்கம் டாக்டர்கள்; அந்தப் பக்கம் வழக்குரைஞர்கள்.  நானும் மக்களுக்காக வாதாடுகின்ற ஞாயிற்றுக்கிழமை வழக்குரைஞர்.

இதுதான் ‘திராவிட மாடல்’ –
இதுதான் திராவிடம்!

ஆகவே, எல்லோரும் – மிகப்பெரிய அளவிற்குப் பெண்கள் எல்லாம் படிக்கிறார்கள். சின்ன பிள்ளைகள்  என்னிடம் வந்து, புத்தகத்தில் கையொப்பம் வாங்க வருவார்கள். அவர்களிடம் நான், ‘‘நீ என்னவாக ஆகப் போகிறாய்?’’ என்று கேட்பேன்.

‘‘நான் டாக்டர் ஆகப் போறேன்’’ என்பார். இன்னும் சில பிள்ளைகள்,  ‘‘நான் போலீஸ் ஆகப் போகிறேன்’’,  ‘‘நான் கலெக்டர் ஆகப் போகிறேன்’’ என்று சொல்வார்கள்.

இப்படி ஒரு தெளிவு இன்றைக்கு  வந்திருக்கிறது என்றால்,  இதுதான் ‘திராவிட மாடல்’ –  இதுதான் திரா விடம் – இதைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்தது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *