கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த
சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றம்!
உரிய உடனடி நடவடிக்கைகளைத்
தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்!
தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை!
சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றம்!
உரிய உடனடி நடவடிக்கைகளைத்
தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்!
தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை!
கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இவ்வன்கொடுமைக்கு உரிய உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
- கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றம்! உரிய உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை!
- நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்!
- வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை!
- தீவிரமாகச் செயலாற்றும் ‘திராவிட மாடல் அரசு!’
- உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
- மதுரையை மதவெறியூராக மாற்ற முயற்சி!
- பெரியார் காண விரும்பிய சமத்துவ உலகமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
அவரது அறிக்கை வருமாறு:
கரூர் மாவட்டம் தோகை மலை அருகே சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட சமையல் பணியில் ஈடுபட்டிருந்த 35 வயதுப் பெண், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் என்னும் காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 4 மாதங்களாகச் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ள பொன்னாம்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஜாதி வெறிபிடித்த பெற்றோர்கள் சிலர் அப் பெண்ணை வேலையை விட்டு நீக்கம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனராம்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசி ரியை பானுமதி, அப் பெண்ணை அழைத்து “நீ சமைத்த உணவை பிற உயர் ஜாதி மாணவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள். எனவே, இனி நீ சமைக்க வர வேண்டாம்” என்று கூறி, பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
சமூக நீதி எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர வேண்டும்; அதற்குக் கல்வி பரவலாக வேண்டும் என்பதற்காகவே, பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்கச் செய்திட காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்!
ஆனால், அதில் ஜாதிய உணர்வோடு நடந்துகொள்வோருக்காக, சமையல் கலை ஞர்களை அதற்கேற்ப நீக்குவதும், இடமாற்றம் செய்வதும் தீண்டாமை வன்கொடுமையாகும். இதே போன்று 2018-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அமைந்துள்ள திரு மலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண், சத்துணவுச் சமையலராக இருந்த பள்ளியில், ஜாதி வெறியர்களின் எதிர்ப்பு காரணமாகப் பணியிடம் மாற்றப்பட்டார். தகவல் அறிந்து நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை!
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்ததுடன், வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் வழக்கு தீவி ரப்படுத்தப்பட்டு, கடந்த 2025 நவம்பர் 28 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன் அவர்களின் வாதங்கள், வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தன.
தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் – ஏ.மோட்டூர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமையலராக மகேஸ்வரி என்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்மணி நியமிக்கப்பட்டார்.
அதேபோல, தருமபுரி மாவட்டம் ஓசூர் அரசுப் பள்ளியில் பெரியம்மாள் என்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்மணி சத்துணவு சமையலராக நியமிக்கப்பட்டார் (2.6.2006). அவ்வூரைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக, வேறு ஊருக்கு மாற்றப்பட்ட நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில், இந்தத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்ததன் காரணமாக, மீண்டும் அப்பள்ளிகளிலேயே பணியாற்றும் நிலை உருவாக்கப்பட்டது.
எனினும், இன்னும் பல இடங்களில் இத்தகைய நிலைமை இருக்கிறது என்ப தற்கு அடையாளமாகக் கரூர் மாவட்டம் சின்னரெட்டியப்பட்டியில் வன்கொடுமை நடந்துள்ளது.
தீவிரமாகச் செயலாற்றும்
‘திராவிட மாடல் அரசு!’
‘திராவிட மாடல் அரசு!’
சமூகநீதிக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், ஜாதிக்கெதிராகவும், தீண்டாமையை முற்றாக ஒழிக்கவும் தீவிர மாகச் செயலாற்றும் அரசாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல் அரசு’ செயல்பட்டு வருகிறது. அதன் காரண மாகத் தான், வேண்டுகோள் வைத்த இரு வாரங்களுக்குள்ளாகவே, ஆணவப் படுகொலை களுக்கெதிரான சட்டம் நிறைவேற்றக் குழு அமைக்கப்பட்டது. ஜாதி வன்கொடுமை வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வந்து, ஒடுக்கப்பட்டோர் உள்பட அனைவருக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜாதி – தீண்டாமை ஒழிப்புக் குறித்து பிரச்சாரங்கள், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
உடனடி நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்!
எடுக்கப்பட வேண்டும்!
ஜாதி என்பது மூளையில் ஏற்றப்பட்டுள்ள வைரஸ். அதை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை முன்னிலைப்படுத்தி பல்வேறு செயல்திட்டங்களை நடை முறைப்படுத்திவரும் இந்த அரசு, கரூரில் நிகழ்ந்துள்ள இந்த வன்கொடுமைப் பிரச்சினையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்; உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இதே போல மதுரை மாவட்டம் திருப்பாலை யில் உள்ள நல்லமணி அரசு உதவி பெறும் பள்ளிக்கு அருகில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்தப்பட்டதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு எழுந்து, காவல் துறை அங்கே சென்று மாணவர்களிடம் மதவெறி ஊட்டப்படுவதைத் தடுத்துள்ளது. இது குறித்து, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையை மதவெறியூராக
மாற்ற முயற்சி!
மாற்ற முயற்சி!
மதுரையை மதவெறியூராக மாற்ற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் செயல்பாடுகளைக் காவல்துறையும், சமூக அமைப்புகளும் உடனுக்குடன் கண்காணித்து உரிய தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதிவெறிக்கும், மதவெறிக்கும் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரியார் காண விரும்பிய
சமத்துவ உலகமாகத்
தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
சமத்துவ உலகமாகத்
தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
“எப்போதும் விழிப்போடிருப்பது தான் விடுதலைக்கான விலை” என்பதை நினைவில் கொள்வோம்! புத்துலகின் மாதிரி வடிவமாக, பெரியார் காண விரும்பிய சமத்துவ உலகமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.12.2025
