பம்மல், டிச. 31- பம்மல் பகுத்த்றிவாளர் பேரவையின் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம், பம்மல் கலைஞர் நூலகத்தில் 28.12.2025 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
இக்கருத்தரங்க நிகழ்விற்கு திருக்குறள் உரையாசிரியர் புலவர் ஈ.ஆறுமுகம் தலைமை வகித்தார். பம்மல் பகுத்தறிவாளர் பேரவைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வை.பார்த்திபன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பாசறையின் இளம் பேச்சளர் தோழர் வீ.தினேஷ் சுயமரியாதை இயக்கம்,திராவிடர் இயக்கப் பணிகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
கலைஞர் நூலகப் பொறுப்பாளரும் தாம்பரம் மாநகர இளைஞரணி அமைப்பாளருமான தோழர் சத்யபிரபு, பேரவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இந்த கலைஞர் நூலகத்தின் அரங்கத்தில் நடத்தலாம் என்றும்,நாம் பெரியாரிய உணர்வுகளோடு இருக்க வேண்டிய அவசியத்தையும் அதே நேரத்தில் அரசியல், சமுதாயம் இரண்டின் பணிகளையும் இணைத்துச் செய்யவேண்டியதன் அவசியத்தையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
நிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பணி நிறைவுப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார் தமிழர்களின் வாழ்வியல் என்பது பெரியார் என்ற ஒற்றைச் சொல்லே..! எனும் பொருண்மையில் கருத்தரங்க சிறப்புரை ஆற்றினார்.
அவர்தம் சிறப்புரையில்: உலகின் தன்னிகரில்லாத சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள் என்று குறிப்பிட்டு; அதற்கான ஏராளமான மேற்கோள்களை சான்றாதாரங்களாக எடுத்துக் கூறினார்.
அதோடு,முன் மாதிரியில்லாத இந்தியத் தலைவர் தந்தை பெரியார் என்று பல்வேறு வெளிநாட்டுப் பேரறிஞர்கள் சுட்டிக் காட்டியதையும், புத்துலகின் தொலைநோக்கு சிந்தனையாளர் என்று யுனெஸ்கோ அமைப்பால் விருதளித்து பாராட்டியதையும்; பெரியார் தத்துவம்- அவர் ஏந்திய சுயமரியாதை ஆயுதம் – பெரியார் பணித்த கட்டளைகள்- பெரியார் செய்த பெரும் பணிகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு குறிப்பிட்டதோடு; கவிஞர்கள் பார்வையில் பெரியாரின் புகழ் மாலைகள் குறித்தும்; பெரியார் வகுத்திட்ட வாழ்க்கை நெறிகளை வரிசை படுத்தியும் உரையாற்றினார். மேலும், எந்த நிலையிலும் கொள்கை சமரசத்திற்கு இடம் கொடுக்காதவர் , கடவுள்,மதம் , ஜாதி , பெண்ணடிமை ஒழிப்பு , மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழ் மொழி உணர்வு, சமூக நீதி போன்ற பல கருத்துகளை பெரியார் தெரிவித்திருந்தாலும், அவரை கடவுள் மறுப்பாளர் என்ற ஒற்றைக் குறியில் அடக்க முயற்சிப்பது வீண் முயற்சி என்றும் குறிப்பிட்டு நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு வாய்ந்த இக்கூட்டத்தில் தாம்பரம் மாகராட்சி மன்ற உறுப்பினர் ரம்யா சத்யபிரபு, பம்மல் இலக்கிய மன்ற பொறுப்பாளர்கள் பேராசிரியர் நீ.வாசுதேவன், பேராசிரியர் ஜோ.விவேகானந்தன், அனகை. கழகத் தலைவர் தோழர் சண். சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் தோழர் எஸ்டிஎஸ்.மூர்த்தி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
