– மின்சாரம்

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், உலகம் அழியப்போகிறது என்று செய்திகளும், கணிப்புகளும், முன்னறிவிப்புகளும் வெளிவருவது இயல்பாகும். அதிலும் சில தீர்க்கதரிசிகள் என்று விளம்பரப்படுத்தப்படும் பேர் வழிகளின் வார்த்தைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி விடும். அந்தவகையில், தற்போது கானா நாட்டுப் பேர்வழி ஒருவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு படித்த முட்டாள்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் தன்னைத் தீர்க்கத்தரிசி என்று சொல்லிக் கொள்பவர்!
கிழிந்த கோணிப்பை தீர்க்கதரிசியாம் இவர்!
எபோ ஜீசஸ் என்ற பெயரை எபோ நோவா என்று மாற்றி கொண்டுள்ளார். இவருக்கு 30 வயதாகிறது. கிறிஸ்துமஸ் அன்று அறிவிப்பு ஒன்றை அறிவித்து, மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். எபோ சில காட்சிப் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.
சாக்குத் துணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்துள்ளார் எபோ. அந்த சாக்குத் துணி, கிழிந்து தொங்கும் நிலையில் காணப்படுகிறது. தான் உண்ணாநிலை இருப்பதையும், பிரார்த்தனை செய்வதையும், கயிறு உடை அணிவதையும் எபோ அந்த காட்சிப் பதிவுகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் எபோ அந்தக் காட்சிப் பதிவில், “டிசம்பர் 25 கிறிஸ்துமஸ். ஒரு பெரிய வெள்ளம் வரும்.,. இந்த வெள்ளம் மூன்று ஆண்டுகள் தொடரும். அதன் மூலம் உலகம் முடிவுக்கு வரும். அதனை கடவுள் செய்வார்.
அதனால் பைபிளில் வரும் நோவாவின் கதை போல, நானும் பேழைகளை (கப்பல்களை) கட்டப் போகிறேன். அவற்றால் இந்த உலக மக்களை காக்கப் போகிறேன்.. நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டிக் கொள்கிறோம். ஆனால், கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். “நிறுத்து” என்று அவருடைய குரல் கேட்கும் வரை இந்த கப்பலை கட்டிக் கொண்டிருப்பேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள்” என்று எபோ உளறிக் கொட்டியுள்ளார்.
எபோ வெளியிட்டுள்ள அந்த காட்சிப் பதிவில், கப்பல்கள் கட்டும் விதம் கூறப்படுகிறது. கப்பலில் பசுக்கள், உணவுப் பொருட்கள் போன்றவை காணப்படுகின்றன. அத்துடன் பேழைகளை அதாவது கப்பல்களைத் தயாரிக்கும் பணியிலும் எபோ நிஜமாகவே ஈடுபட்டு வருவது போன்ற காட்சிப் பதிவாகி உள்ளது. இந்த பேழைகள் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்தில் இருந்து காக்கும் வகையில் கட்டப்பட்டு வருகின்றனவாம்!
எபோவின் இந்த அறிவிப்பைப் பார்த்ததுமே பலரும் ஆச்சரியப்பட்டு அவருக்கு ஆதரவு தந்து வருகிறார்களாம்! மேலும் பலர், தங்களுடைய சொத்துகளை எல்லாம் விற்று அதில் கிடைத்த தொகையை அவருக்குக் கொடுத்து உதவி வருகிறார்கள். (இங்கே தான் இருக்கிறது இவரின் இரகசியம்!) இதுதான் உலக மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
இதுகுறித்து இணையவாசிகள் பல்வேறு விமர்சனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். “இந்தக் கப்பல்கள் பார்ப்பதற்கு சிறியதாக உள்ளன. ஆனால் பைபிளில் வரும் நோவாவின் கப்பல் மிகப் பெரியதாக இருந்தது. அது 510 அடி நீளமும், 85 அடி அகலமும், 51 அடி உயரமும் இருந்தது.
இந்தக் கப்பல்கள் உண்மையில், மிகப்பெரிய வெள்ளத்தைத் தாங்க முடியாது. உலகில் எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்று எந்த வானிலை அறிவிப்பும் இதுவரை வரவில்லை. மீண்டும் வெள்ளத்தால் உலகைக் கடவுள் அழிக்க மாட்டார் என்று பைபிளில் உள்ளது. எனவே இப்படி கப்பல்கள் கட்டுவதற்குப் பதிலாக, இந்தப் பணத்தை மக்களுக்கு உணவு, குடியிருப்பு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம்” என்றெல்லாம் கூட சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
பரவாயில்லை; படித்தவர்களிலும் சிந்திக்கக் கூடியவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். மகிழ்ச்சி!“
பனை மரத்தில் ஏன் ஏறுகிறாய்?” என்று ஒருவனைக் கேட்டபோது, “புல் பிடுங்கத்தான் ஏறுகிறேன்!” என்றான் என்ற நகைச்சுவை கூற்று ஒன்று உண்டு.
மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பவர்கள், தங்களை வித்தியாசமாகக் காட்டிக் கொள்வார்கள். அப்படித்தான் இந்த ஆசாமியும் கிழிந்த கோணிப் பையை உடுத்திக் கொண்டு மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
உலகமே வெள்ளத்தால் அழியும்போது இவர் கட்டும் கப்பல் உலக மக்களைக் காப்பாற்றப் போகிறதா? சரி, அவர் சொன்ன கிறிஸ்துமஸ் அன்று எந்த வெள்ளமும் ஏற்பட்டு, உலகத்தை அழிக்கவில்லையே! இதற்குப் பிறகாவது பைத்தியக்காரர் வேடம் தரித்து மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கோணங்கிகளை அடையாளம் காண வேண்டாமா?
மாயன் காலண்டர் உலகம் முடிவுறும் (2012 டிசம்பர் 21) என்று மாயா நாகரிகத்தின் காலண்டர் கூறுகிறது என்று கதை கட்டினார்கள். கிரக உரசல், சூரியப் புயல்கள் ஏற்படப் போகின்றன என்று கிளப்பி விட்டார்கள்.
மெக்சிகோ நாட்டினர் பலர் மாயன்கள் வாழ்ந்த பிரமிட் போன்ற கோவில்களில் புகுந்து கொண்டால், உலகின் அழிவிலிருந்து தப்பி விடலாம் என்று நம்பி, அந்தப் பகுதிக்கு ஓடினார்களாம். சீனாவில் சிலர் கடலுக்குள் சென்றால் தப்பி விடலாம் என்று நம்பி படகுகளையும், சிறு சிறு கப்பல்களையும் பயன்படுத்தி கடலுக்குச் சென்றதும் உண்டு!
ஆனால் அறிவியல் உலகம் இதனை அறுதியிட்டு மறுத்தது. அறிவியல், வானவியல் விஞ்ஞானத்துக்கு மாறான கற்பனை – கட்டுக்கதையென்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த விஞ்ஞானி (NASA)யும், மூத்த ஆய்வாளருமான பிறன்யோ மென்ஸ் மூடத்தனத்தின் முகத்திரையைக் கிழித்தார். கார்ல் சேகன் என்ற பிரபல வானவியல் வல்லுநர் அசாதாரண நிகழ்வுகளை நம்ப வேண்டுமானால் அதற்கு அசாதாரண சாட்சியங்கள் தேவை என்று அடித்துப் பேசினார்.
பகுத்தறிவு – அறிவியல் இயக்கமான திராவிடர் கழகம் என்ன செய்தது? உலகமாவது – அழிவதாவது என்று கூறி துண்டறிக்கைகைளை வெளியிட்டு அறிவுக் கொளுத்தியது. இது வெறும் புரளி, மூடநம்பிக்கை என்று கூறி சென்னைக் கடற்கரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைப்பயணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கியது என்பதை நினைவூட்டுகிறோம்!
