ஓசூரில் செய்தியாளர்களிடையே திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஓசூர், டிச.30 தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுகளை எழுப்பு கிறவர்களைப் பார்த்துக் கேட்கிறோம்! டில்லியில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது? குண்டு வெடித்தது எங்கே? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க 28.12.2025 அன்று ஓசூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு எழுப்பி இருக்கிறதே, அதுபற்றி தங்கள் கருத்து என்ன?
டில்லியில் சட்டம்– ஒழுங்கு எப்படி இருக்கிறது? குண்டுவெடித்தது எங்கே?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், சட்டம் – ஒழுங்கை கவனத்தோடு அவர்கள் கையாளுகிறார்கள். எங்கே, எந்தக் கோளாறுகள் நடைபெற்றாலும், சில மணி நேரத்திலேயே அதற்குத் தீர்வு காணுகிறார்கள்.
அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லு கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கேட்கிறோம், டில்லியில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது? குண்டுவெடித்தது எங்கே? செங்கோட்டை எதிரில்! அதில் எத்தனை பேர் மாண்டார்கள்.
அதுமட்டுமல்ல, வட மாநிலங்களில் எந்தக் கலவரங்கள் நடந்தாலும், இங்கே அமைதி நிலவுகிறது. குற்ற வழக்குகளைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்சியில், பல இடங்களில் நடந்த கொள்ளைகள், கொலைகள் பற்றிய பதிவுகளே இல்லை. ஆனால், இப்போது பதிவு நடைபெறுகிறது. உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறார்கள்.
குடும்பப் பிரச்சினைகள் பல இடங்களில் நடைபெறுகின்றன. குடும்பப் பிரச்சி னைகளானாலும், ஆணவக் கொலைகளானாலும், அவை விரும்பத் தக்கவை அல்ல. இன்னொரு மாநிலத்தில் நடப்பதைச் சொல்லி, இங்கே நியாயப்படுத்துவதற்காக இதனைச் சொல்லவில்லை.
ஆனால், அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப்பெரிய அளவில், தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏதாவது ஓரிடத்தில் அதுபோன்ற நிகழ்வு நடந்தால், உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.
வேறு மாநிலத்தவர்களால்
தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு கெடுகிறது!
தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு கெடுகிறது!
அதுமட்டுமல்ல, வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவுதான் நாம் பாதுகாப்பு கொடுத்தாலும், குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கு அவர்களில் சிலரும் காரணமாக இருக்கிறார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். குற்ற நடவடிக்கைகள் (Crime) என்பது வேறு; சட்டம் ஒழுங்கு (Law & Order) என்பது வேறு.
சட்டம் – ஒழுங்கைப் பொறுத்தவரையில், ‘திராவிட மாடல்’ அரசு அலட்சியமாக இல்லை. அதனால் என்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பல நேரங்களில், சட்டம் – ஒழுங்கு முறை கெடுவதற்குப் பல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் பலர். அவர்களையும் கண்காணித் துக் கொண்டிருக்கிறார்கள். கண்காணிக்கவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துவோம். அதனை நியாயப்படுத்த மாட்டோம்!
தமிழ்நாட்டையே மாற்றவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்களே
செய்தியாளர்: தமிழ்நாடு அரசுப் பேருந்து களில், ‘தமிழ்நாடு’ என்று ஸ்டிக்கர் ஓட்டுகி றார்களே சிலர், அதுபற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: அதற்கு வேண்டிய காரியங்களை நிச்சயமாக செய்வார்கள். இது பல பேருடைய கவனத் திற்குச் சென்றிருக்கின்றது. ஆகவே, தமிழ்நாடு என்ற பெயரை முழுமையாகப் பயன்படுத்துவது மிக முக்கியம்தான். ஆனால், தமிழ்நாட்டையே மாற்ற வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்களே, அதுதான் கூடாது!
– இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
