உதகை, டிச. 30–- “அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று முன்தினம் (28.12.2025) கூறியதாவது:
“அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இணைந்து குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்கி ஆட்சி அமைக்கும். ‘எங்களை யாரும் மிரட்ட முடியாது’ என்று டி.டி.வி. தினகரன் கூறுகிறார்; ஆனால், நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணிக் குள் சேர்க்கவில்லை.
நடிகர் விஜய்யை மட்டுமல்ல, எந்தவொரு தனிநபரையும் விமர்சனம் செய்யக் கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு. திமுக கூட்டணி பலமாக இருப்பதாக ஒரு மாயைத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் அந்தக் கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்கிறது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக அழிந்துவிடும் என்று மாற்றுக் கட்சிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
4,42,070 பேர் விண்ணப்பம்
சென்னை, டிச.30- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். நேற்று முன்தினம் (28.12.2205) ஒரு நாள் மட்டும் 2,56,793 பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 4,741 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.அய்.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
