புதுச்சேரி, டிச.30-ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மண்ணின் வணிகக் கொடி உலகெங்கும் பறந்தபோது, பூம்புகாரைப் போலவே புகழுடன் திகழ்ந்த ஒரு நகரம் – ‘பொதுக்கே’. காலச்சக்கரம் சுழன்றதில், கடல் அலைகள் அந்தப் பெருமைமிகு நகரை விழுங்கிவிட்டன.
இன்று வரை சங்க இலக்கியப் பாடல்களிலும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளிலும் மட்டுமே வாழ்ந்து வந்த அந்த காணாமல் போன நகரம், இப்போது ஆழ்கடலுக்கு அடியில் இருந்து மெல்லத் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
‘டைம் மெசின்’
இது ஏதோ ஒரு தொல்லியல் ஆய்வகத்தில் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தேடல் அல்ல. புதுச்சேரியின் நீல நிறக் கடலுக்கு அடியில் ‘ஸ்கூபா டைவிங்’ பயிற்சியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் என்பவரின் கண்களில் பட்ட அந்தத் தோற்றம், ஒரு கணத்தில் (டைம் மெசின்) காலத்தையே பின்னோக்கி இழுத்துச் சென்றது.
கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், 42 மீட்டர் ஆழத்தில், சூரிய வெளிச்சம் கூட நுழையத் தடுமாறும் அந்த இருள் சூழ்ந்த அமைதியில், ஒரு பிரமாண்ட உருவம் தென்பட்டது. அது ஒரு கற்பனை அல்ல; சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள ஒரு மாபெரும் மதிற்புரம்.
வரலாற்றின் புதிய திறவுகோல்
இயற்கையாக உருவான பாறை அடுக்குகள் போலன்றி, மனிதக் கரங்களால் செதுக்கப்பட்ட நேர்த்தியுடன் நிமிர்ந்து நிற்கும் அந்த மதில், அரிக்கமேடு முதல் நரம்பை வரை நீண்டு கிடக்கிறது.
அதன் அருகே கப்பல்கள் வந்து சென்றதற்கான கால்வாய் தடயங்கள், அது ஒரு சாதாரணத் தடுப்புச் சுவர் அல்ல என்பதை உரக்கச் சொல்கின்றன.
அரவிந்த் என்பவரால் கண்டறியப்பட்ட ‘அரவிந்த் வால்’ என அழைக்கப்படும் இந்தத் தளம், கீழ்க்கண்ட கேள்விகளை உலகிற்கு முன் வைக்கிறது:
இது தாலமியும் பிளினியும் வியந்து எழுதிய அந்த ‘பொதுக்கே’ நகரத்தின் கோட்டைச் சுவரா? சங்கத் தமிழர்கள் கடல் சீற்றத்தைத் தடுக்கக் கட்டிய உலகின் ஆதித் தொழில்நுட்பச் சுவரா?
பூம்புகார் போல இதுவும் ஒரு பெரும் கடல் கொந்தளிப்பால் உள்வாங்கப்பட்டதா? என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இலக்கியமும் அறிவியலும் சந்திக்கும் புள்ளி
வரலாற்று ஆய்வாளர்களின்படி, சோபட்டினம் (மரக்காணம்) மற்றும் காவிரிப்பூம்பட்டினம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு பெரும் துறைமுக நகரம் இருந்திருக்க வேண்டும். இந்த மதில் கண்டெடுக்கப்பட்ட இடம், துல்லியமாக அந்தப் ‘பொதுக்கே’ (Poduke) எனும் இடத்தோடு ஒத்துப்போகிறது.
2007இல் இந்தியத் தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகள் மவுனமாகவே கடந்துவிட்ட நிலையில், இந்தத் ‘தனிநபர் கண்டுபிடிப்பு’ மீண்டும் ஒரு விவாதத்தைத் தீயாகப் பற்றவைத்துள்ளது.
முறையான அகழ்வாய்வு
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும், கடல்சார் தொல்லியல் துறையும் இணைந்து இந்தப் பகுதியில் ஒரு முறையான அகழ்வாய்வை மேற்கொண்டால், கீழடி நிலப்பரப்பில் நிகழ்த்திய சாதனையை ‘பொதுக்கே’ கடலுக்கு அடியில் நிகழ்த்தும்.
மண்ணுக்குள் புதைந்த வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும்; விண்ணைத் தொடும் தமிழரின் கடல் வணிகத் தொழில்நுட்பம் இன்று ஆழ்கடலில் அனாதையாகக் கிடக்கிறது. அதை மீட்டுருவாக்கம் செய்வது வெறும் கடமை மட்டுமல்ல, நம் மூதாதையர்களின் பெருமையை உலகிற்குச் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு.
