பி.ஜே.பி.க்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு! எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி, அதனுடைய தலைமை முடிவெடுக்கும்; இதுதான் அந்தக் கட்சிக்கு உள்ள உரிமை!
பி.ஜே.பி. என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் முடிவெடுக்கும்!
வடசென்னை: பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
பி.ஜே.பி. என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் முடிவெடுக்கும்!
வடசென்னை: பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, டிச.30 பி.ஜே.பி.க்கும், மற்ற அரசியல் கட்சி களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அது என்ன வென்றால், எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சி, அதனுடைய தலைமை முடிவெடுக்கும். இதுதான் அந்தக் கட்சிக்கு உள்ள உரிமை. ஆனால், பி.ஜே.பி. என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது. மாறாக
ஆர்.எஸ்.எஸ்.தான் முடிவெடுக்கும். டில்லி, பி.ஜே.பி.யி னுடைய தலைநகரம் அல்ல; நாக்பூர் தான் அதனுடைய தலைநகரம். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ, அதைத்தான் பா.ஜ.க. செயல்படுத்தவேண்டும். என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- பி.ஜே.பி.க்கும், மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு! எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி, அதனுடைய தலைமை முடிவெடுக்கும்; இதுதான் அந்தக் கட்சிக்கு உள்ள உரிமை! பி.ஜே.பி. என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் முடிவெடுக்கும்! வடசென்னை: பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
- ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
- ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’
- பழைமைக்கு விடை கொடுத்திருக்கிறது; மாற்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறது!
- மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்!
- ‘‘பெரியாருடைய கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன்’’ என்றார்!
- மோடியினுடைய வித்தைகள் இங்கு பலிக்காது!
- 8 லட்சத்து 62,500 ரூபாய்!
- நான் இன்றும் இளைஞனாகத்தான் இருக்கிறேன்!
- ‘‘சிறுதுளி பெருவெள்ளம்’’
- இரண்டு அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
- ஆர்.எஸ்.எஸ். என்பது நமக்கு நேர் எதிரானது!
- ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கை!
- பிஜேபி என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது!
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி;
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பிலான பரப்புரை தொடர் பயணம் – ‘‘பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா!’’ ஆகிய இரு பெரும் நிகழ்ச்சிகள்- வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 26.12.2025 அன்று மாலை 6 மணியளவில், பிரிக்களின் சாலை வெங்கடம்மாள் சமாதி தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:.
‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’
மிகுந்த மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய இக்கூட்டம் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பெயரிலே ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று அமைக்கப்படக்கூடிய அந்த சிறப்பு வாய்ந்த ஓர் அறிவியல் மய்யம் உலகம் முழுவதும் நடை பெறக்கூடிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்க கூடிய வாய்ப்பாக இருக்கும். திருச்சிக்கும் – சென்னைக்கும் இடையிலே இருக்கக்கூடிய நெடுஞ்சாலையிலே சிறுகனூர் என்ற பகுதியிலே 27 ஏக்கர், சிறப்பாக அதிலே ஆய்வகம், நூலகம் குழந்தைகளுடைய சிறப்புச் சிந்தனை அகம் – இப்படி பலவற்றை உருவாக்கி, தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த 95 ஆண்டைக் குறிக்கக்கூடிய வகையிலே, 95 அடி உயரமுள்ள தந்தை பெரியாருடைய சிலை, 60 அடி பீடத்தில் அமைக்கப்பட உள்ளது. சில நாள்கள் தங்கி, மக்கள் அதைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கும், உலக மக்களுடைய பார்வையை ஈர்க்கக்கூடிய வகையிலும், பல்வேறு சிந்தனையகங்கள் அங்கு மிகப்பெரிய ஒரு திட்டத்தோடு உருவாக்கிக் கொண்டிருக்கிறது; அது தான் சிறுகனூர் ‘பெரியார் உலகம்’ என்ற அமைந்து கொண்டிருக்கிற ஒரு சிறப்பான ஏற்பாடாகும்.
பழைமைக்கு விடை கொடுத்திருக்கிறது; மாற்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறது!
இந்த அமைப்பிலே ஒரு பெரிய மாறுதல், இது போன்ற குழந்தைகளை ‘‘பெரியார் பிஞ்சுகள்’’ என்று நாங்கள் அழைப்போம். அப்படிப்பட்டவர்கள் கூட பயனடையக்கூடிய அளவிற்குத் தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னாலே, நம்முடைய சமூகம் எப்படி இருந்தது? அதன் பிறகு சுயமரியாதை இயக்கம் பெரியார் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகி இருக்கின்றன; இந்த நூறாண்டு காலத்திலே எப்படிப்பட்ட சமூக மாற்றம் ஏற்பட்டது? இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்ற பெருமையடையும் நிலையிலே குறிப்பிட வேண்டியது நமது கடமை. இந்த இயக்கம் பல நூற்றாண்டு காலத்தினுடைய பழைமைக்கு விடை கொடுத்திருக்கிறது; மாற்றத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. அவற்றையெல்லாம் ஒருங்கே இணைத்து பெரியாருக்கு முன் இருந்த சமுதாயக் கட்டமைப்பு – பெரியாருக்குப் பின் ஏற்பட்ட சமூக பொருளாதார, அரசியல் மாறுபாடுகள்; இவற்றையெல்லாம் பல மணி நேரத்திலே கண்டு, உணர்ந்து, சிந்தித்துப் பயன்பெறக்கூடிய அளவிற்கு, ஒரு வரலாற்று ஆவணமாக அந்த அமைப்பு ஒரு பக்கத்திலே இருக்கும். இப்படி பல அம்சங்களை எல்லாம் செய்து, சுமார் 100 கோடி ரூபாய் திட்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்து, அடித்தளம் எல்லாம் முடிந்து, மேல் கட்டுமானத்திற்கு வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த அமைப்பிற்கு மக்கள் பங்களிப்பு மிக முக்கியம் என்ற காரணத்தால்தான், நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள், பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவினை மறைமலை நகரிலே கொண்டாடிய போது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், அவர்களே எங்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்கள். அதற்கு நம்மு டைய ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும்; நம்முடைய முதலமைச்சர் ‘‘இது பெரியார் நாடு என்ற அந்த உணர்வை நிலை நிறுத்துகின்ற வகையில், தி.மு.க.வில், எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேரும் ஒரு மாத ஊதியத்தை இதற்குக் கொடுப்போம்’’ என்று, முதலமைச்சர் அவர்கள் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் திரட்டி, அவர்களே பெரியார் திடலுக்கு வந்து கொடுத்தார்.
மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்!
அதனுடைய தத்துவம் என்னவென்றால் நண்பர்களே, தனி மனிதர்களிடமிருந்து நன்கொடை வாங்கினால் மட்டும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றிட முடியும். ஆனால், நாம் அப்படி செய்யவில்லை; எல்லா மக்களுடைய பங்களிப்பும் அதில் இருக்க வேண்டும்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று செய்து வருகின்றோம். உங்களுக்கு அதிசயமாய் இருக்கும், வெறும் இயக்கத்துக்காரர்கள் மட்டுமல்ல; திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் கட்சி என்று தி.மு.க. கூட்டணியில் இருக்கிறவர்கள் மட்டும்தான் இந்தத் திட்டத்திற்கு நிதி கொடுக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இன்றைக்கு மதியம் பெரியார் திடலில், அறக்கட்டளை கூட்டம் எல்லாம் நடந்து முடிந்து, 2 மணிக்கு நான் வெளியே வந்தேன்; கழுத்தில் மாலை அணிந்துகொண்டு சபரிமலைக்குப் போகின்ற ஒருவர், அங்கு அமர்ந்திருந்தார். வடசென்னை மாவட்டத் தலை வர் தளபதி பாண்டியனும், மற்றவர்களும் இருந்தனர்.
‘‘பெரியாருடைய கொள்கைகளால்
நான் ஈர்க்கப்பட்டேன்’’ என்றார்!
நான் ஈர்க்கப்பட்டேன்’’ என்றார்!
‘‘எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அவரிடம் கேட்டதும்,
உடனே அவர், ‘‘அய்யா நான் சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் கடை வைத்திருக்கேன். தந்தை பெரியாருடைய கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். பெரியார் உலகத்திற்கு 25,000 ரூபாய் கொடுப்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன்’’ என்று சொன்னார்.
நான் அவரிடம், ‘‘நீங்கள் கன்னிசாமியா? குரு சாமியான்னு? கேட்டேன்.
‘‘நான் கன்னிசாமிதான்; குருசாமி ஊருக்குப் போயிருக்கிறார்’’ என்றார்.
மோடியினுடைய வித்தைகள் இங்கு பலிக்காது!
கன்னிசாமி, எந்த சாமியாக இருந்தாலும், ‘‘பெரியார் ராமசாமி’’யின் தொண்டினால்தான் இந்த அளவிற்கு வந்திருக்கின்றோம் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு, தந்தை பெரியாரிடம் நன்றி உணர்ச்சி இருக்கிறது. இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது; இதைப் புரிந்து கொண்டால், மோடியினுடைய வித்தைகள் இங்கு பலிக்காது என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது; இப்படிப்பட்ட சிறப்பான ஒரு கருத்தோட்டப் பிரச்சாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு எங்கும் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். அந்த பிரச்சாரத்தினுடைய தலைப்பு என்ன என்பதை இங்கே எனக்கு முன் உரையாற்றிய நண்பர்கள் அத்தனை பேரும் விளக்கிச் சொன்னார்கள். ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ என்ற அந்தத் தலைப்பில், இரண்டையும்பற்றி மக்கள் மத்தியிலே சொல்வது மிக முக்கியமானதாகும். இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் பலமாக அடுத்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று அமையவேண்டும் – என்று நாம் சொல்வது, பதவிக்காக அல்ல; மக்களுடைய அறிவுக்காக, தெளிவுக்காக, நன்மைக்காக என்ற அடிப்படையில், அந்த கருத்து விளக்கத்திற்காகத்தான் இந்தக் கூட்டம் இங்கே நடைபெறுகிறது. அதில் நிதியும் கொடுத்திருக்கிறீர்கள்.
8 லட்சத்து 62,500 ரூபாய்!
வடசென்னை தோழர்கள் திரட்டி, முதல் கட்டமாக இதுவரையிலே அவர்கள் கொடுத்திருக்கிற நிதி 8 லட்சத்து 62,500 ரூபாய் என்பதை மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறோம்.
நான் இன்றும் இளைஞனாகத்தான் இருக்கிறேன்!
இந்தக் கூட்டத்தினுடைய வரவேற்புரையை வடசென்னை இளைஞரணி செயலாளர் தோழர் கார்த்திக் அவர்கள் நிகழ்த்தி இருக்கிறார். தலைமை ஏற்று சிறப்பாக இந்தப் பணியை செய்யக்கூடிய தோழர் வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்புச் செல்வன் அவர்களே, அதேபோல கூட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர் மானமிகு வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அவர்களே! அவர் எனக்கு மிகவும் வேண்டியவர். எப்படி என்றால், பெயரன். எல்லாருமே பெயரன்கள்தான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. பெயரன் என்று சொல்லுவதில் கூட எனக்குக் கொஞ்சம் தயக்கம். ஏனென்றால், நான் தாத்தாவாகி விட்டேன் என்று நினைத்துவிடக் கூடாது அல்லவா! நான் இன்றும் இளைஞனாகத்தான் இருக்கிறேன்.
நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று வந்துள்ள, திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் சிறப்பாக இடம்பெற்று – அதே நேரத்தில் உரிமைகளை வலி யுறுத்தக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், சிறந்த மருத்துவருமான டாக்டர் அய்யா ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒப்பற்ற பொறுப்பாளர், கொள்கை விளக்க அணி செயலாளர் அருமைத் தோழர் சகோதரர் வந்தியதேவன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற கழகத்தினுடைய பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, அருமை நண்பர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பன்னீர் செல்வம் அவர்களே, நம்முடைய தலைமைச் செயற்குழு உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அருமைத் தோழர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.,கோபால் அவர்களே, எனக்கு முன் உரையாற்றிய நம்முடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி அவர்களே, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ் அவர்களே, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தினுடைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி அவர்களே, மாவட்டக் காப்பாளர் இராமலிங்கம் அவர்களே, இந்த இயக்கத்திலே மிக சிறப்பான வகையிலே செயல்வீரர்களாக பணி யாற்றி இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு குழுமி இருக்கின்ற தோழர்களே, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பாக இங்கே வந்திருக்கக்கூடிய தோழர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, பெரியார் பிஞ்சுகளே, ஊடகவியலாளர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘சிறுதுளி பெருவெள்ளம்’’
அருமை நண்பர்களே, ஒரு பக்கம் குளிர்; இன்னொரு பக்கம் பனி என்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். தோழர்கள், தோழியர்கள் எல்லாம் வடசென்னையில் கடைவீதி வசூல் செய்வது உட்பட எந்தப் பணிக்கும் அவர்கள் தயங்குவதில்லை. எல்லா மக்களிடத்திலும் சென்று, எளிய மக்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும், ‘‘சிறுதுளி பெரு வெள்ளம்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த வாய்ப்புகள் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.
இரண்டு அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
நான் உரையாற்றுகின்ற 40 நிமிடங்களில் எல்லா வற்றையும் விளக்கி விட முடியாது; அதனால்தான் குறிப்பிட்ட ஒரு சில செய்திகளை மட்டும் சொல்லு கிறேன். ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பைப்பற்றி கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி அவர்கள் உரையாற்றும்போது தெளிவாகச் சொன்னார். இதற்குப் பெரிய தத்துவ விளக்கங்கள் எல்லாம் கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டில் இரண்டு அமைப்பிற்கும் என்ன அடிப்படை? என்ன கொள்கைகள்? என்பதை எண்ணிப் பார்த்தீர்களேயானால், தெளிவாக ஒன்று தெரியும். ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொல்லுவது திராவிடம்! திராவிடம் என்று சொன்னால் அனைவரும் சமம்; ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றதோ, அந்த உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும்; பெண்களுக்கும் சம உரிமை என்று சொல்லி, அதை நிலைநிறுத்திய இயக்கம், இந்த இயக்கம். அதுதான் திராவிட இயக்கம். அதைத் தொடர்ந்து கொண்டி ருக்கக்கூடிய அமைப்பு, அதிலே நாளும் மேலும் மேலும் மகளிருக்கும், மற்றவர்களுக்கும் ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சமூக நீதியைச் சொல்லக்கூடிய ஓர் இயக்கம், அதை செய்யக்கூடிய ஓர் ஆட்சி, ‘‘திராவிட மாடல் ஆட்சி.’’ இந்த ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சராக, இந்தியா மட்டுமல்ல, உலகத்திலே இருக்கிற பற்பல நாடுகளும் இப்படி ஒரு முதலமைச்சர், அவருடைய செயல் திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றது என்று மகிழத்தகுந்த அளவிற்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் என்றால், அவர்தான் தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற முதலமைச்சர். அவர் பதவியேற்கும்போது சொன்னதைப் போல ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’ அவர்கள் என்ற பெருமைக்குரிய முதலமைச்சர்.
ஆர்.எஸ்.எஸ். என்பது நமக்கு நேர் எதிரானது!
அவருடைய சாதனைகளில் ஒரு பக்கம் கல்வி; இன்னொரு பக்கம் மருத்துவம்; இன்னொரு பக்கம் வளர்ச்சி; இன்னொரு பக்கம் எதிரிகள் கண்டு அச்சப்படக்கூடிய சூழல். இவை அத்தனையும் இருக்கிறது. ஆகவேதான், எதிரிகள் அஞ்சுகிறார்கள். எதிரிகள் என்றால், கொள்கை எதிரிகள், ஆர்.எஸ்.எஸ். என்பது நமக்கு நேர் எதிரானது, தனிப்பட்ட முறையில் நமக்கு ஒன்றும் எதிரிகள் அல்ல!
அவர்களுடைய கொள்கை என்ன? வருணாசிரம தர்ம ஜாதி அடிப்படை காக்கப்பட வேண்டும். இன்னமும் ஸநாதனம் என்ற பெயராலே, ஹிந்து மதம், ஹிந்துத்துவம் என்ற பெயராலே ஜாதியைக் காப்பாற்ற வேண்டும்; ஜாதி தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்; வருண தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாகும்.
சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டை தாண்டிய நிலையில், அதற்கு முன் எப்படி இருந்தது சமுதாயம்? அந்தப் பழைய சமுதாயத்தை, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அதேபோல நம்முடைய கூட்டணியில் இருக்கக்கூடிய முற்போக்காளர்கள்; மதச்சார்பற்ற ஒரு கூட்டணி – அந்த நிலையில் இருந்து இவர்கள் மாற்றிவிட்டார்கள். இதனால், அவரவர்களுக்கு அவரவருடைய மதம் இருந்தாலும் கூட, ஒரு மதத்துக்காரன், இன்னொரு மதத்தை அழிக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. பிற மதத்தவர்களுடைய உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கை!
ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு என்ன கொள்கை? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கொள்கை இருக்கிறது. கொள்கை இல்லை என்பது இல்லை. இப்போது சில கட்சிகளுக்கு கொள்கையே தெரியவில்லை. இனிமேல்தான் கொள்கையை கண்டுபிடிக்கப் போகிற கட்சிகள் எல்லாம் நம்முடைய நாட்டில் நாள்தோறும் பிறந்து கொண்டிருக்கின்றன என்பது வேறு. ஆனால், முழுக்க முழுக்க இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. தமிழ்நாட்டில் இன்றைய காலத்தில் கூட, ‘‘ஏங்க இந்த இயக்கம் தேவையா? இந்த அமைப்பு தேவையா?’’ என்றுகூட சிலர் நினைக்கலாம். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கூட மிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால், இரண்டு நாள்களுக்கு முன்பு அதற்கும் நூற்றாண்டு. சுயமரியாதை இயக்கம் பிறந்ததும் 1925 ஆம் ஆண்டில். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதும் 1925 ஆம் ஆண்டுதான். நம்முடைய நாடு என்று நாம் சொன்னால், அது ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொல்லக்கூடிய ஒரு நாடு. இதுதான் திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கை. ஆனால், அதை முற்றிலும் மாற்றி, பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல நாகரிகங்கள், பல மக்கள் உள்ள உரிமை உள்ள ஒரு நாட்டிலே, என் மதம் மெஜாரிட்டி; ஆகவே, நாங்கள் சொல்லுகிறபடிதான் மற்றவர்கள் எல்லாம் கேட்டு ஆகவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருக்கிறது என்றால், அது என்றைக்கோ சொன்னார்கள் என்று தள்ளிவிட முடியாது.
பிஜேபி என்கிற கட்சிக்கு,
முடிவெடுக்கும் உரிமை கிடையாது!
முடிவெடுக்கும் உரிமை கிடையாது!
‘‘100 ஆண்டுகளுக்கு முன்னால் பலவாறு சொல்லி இருக்கலாம்; இப்போது எல்லாம் மாறி போச்சுங்க’’ என்று ஒதுக்கித் தள்ளவிடக் கூடாது. இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற அரசி யல் கட்சிகளுக்கும், பி.ஜே.பி.க்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அது என்னவென்றால், எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி, அதனுடைய தலைமை முடிவெடுக்கும். இதுதான் அந்த கட்சிக்கு உள்ள உரிமை. ஆனால், பிஜேபி என்கிற கட்சிக்கு, முடிவெடுக்கும் உரிமை கிடையாது. மாறாக ஆர்.எஸ்.எஸ். முடிவெடுக்கும். டில்லி, பி.ஜே.பி.யினுடைய தலைநகரம் அல்ல; நாக்பூர் தான் அதனுடைய தலை நகரம். ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறதோ, அதைத்தான் பா.ஜ.க. செயல்படுத்தவேண்டும்.
(தொடரும்)
