‘தி இந்து’ நாளேடு தலையங்கம்!
சென்னை, டிச.30– கலவரக்காரர்களையும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் காவல்துறை யினரையும் கட்டுப்படுத்தாமல், கிறிஸ்து மஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றதில் எந்த அர்த்தமும் இல்லை என ‘தி இந்து’ (29.12.2025) நாளிதழ் தலை யங்கம் விமர்சித்துள்ளது.
‘The Lost message’ எனும் தலைப்பில், சிறுபான்மையினருக்கான அரசின் பாதுகாப்பு உறுதிமொழிகள் வெறும் அடை யாளத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தலைநகர் புதுடில்லியில் உள்ள கிறிஸ்துவக் கோயிலில் டிசம்பர் 25 அன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி கலந்துகொண்டது உலக அளவில் கவனம் பெற்றதாகவும், பிரதமர் மோடி இதற்கு முன் விழாக்களின் போது கிறிஸ்துவத் தலைவர்களை சந்தித்தும் விருந்தளித்துள்ளார் என்றாலும், ஒரு கிறிஸ்துவக் கோயிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றது இதுவே முதல் முறை என்றும், பிரதமர் மோடி தனது சமூகவலைத்தளத்தில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மேற்கோள் காட்டி, அமைதி, கருணை மற்றும் நல்லி ணக்கத்திற்கான வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதையும் இத்தலையங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
கிறிஸ்துமஸ் காலத்திலும் அதற்கு முன்பும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியான நிலையில், பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகச் சூழலில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய லாக பிரதமர் மோடியின் கிறிஸ்துவக் கோயில் வருகை அமைந்ததாகவும் மாநில ஆளுநர்கள் சிறுபான்மை மக்க ளின் விழாக்களில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள், அன்றாட அரசிய லின் ஒரு பகுதியாகவும் பன்முகப் பண்பாட்டுக் கலவையின் உண்மையான பிரதிபலிப்பாகவும் இருந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சித்தாந்தத் தொட்டிலாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்., கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் நீண்ட காலமாக இந்தியாவிற்கு அந்நிய மானவையாகக் கருதி வருதாகவும், இருப்பினும், அண்மைக்காலமாக இந்த கண்ணோட்டத்தை ஆர்.எஸ்.எஸ். மாற்றி வருவதன் அடையாளமாகவே கிறிஸ்துமஸ் வழிபாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றதாக கருதலாம் என்றும் தெரிவித்துள்ளது ‘தி இந்து.’
ஆனால், உண்மையில் இந்தக் கருத்துடன் பிரதமர் மோடி உடன்படுவதாக இருந்தால், அதனை வலிமையாகவும் தெளிவாகவும் அவர் வெளிப்படுத்த வேண்டும், அப்போதுதான் அவரது கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசுகளின் காவல்துறைகள் இதனை உணர்ந்து செயல்படும் என்றும் அது வலியுறுத்தி உள்ளது.
கிறிஸ்துவக் கோயிலில்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு எதிரான நாச வேலைகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்வாக உள்ளதாகவும், அசாம், கேரளா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிரி யார்கள் தாக்கப்படும் சம்பவங்கள் பதிவாகி யுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ‘தி இந்து’ தலையங்கம், தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதாகவும், மதமாற்றம் குறித்த போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடத்தப்படும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றும் தெளிவு படுத்தி உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்து மஸ் தொடர்பான வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதை அது சுட்டிக்காட்டி உள்ளது இந்தச் சம்பவங்களில் சங் பரி வாருடன் தொடர்புடைய குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி யின் கிறிஸ்துமஸ் செய்திக்குப் பிறகும், இந்த வன்முறையில் ஈடுபட்ட கும்பல்களுக்கு எதிராக எந்த அர்த்த முள்ள காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளது ‘தி இந்து’
இதற்கு மாறாக, பாஜக தலைவர்கள் உட்பட பலரால் கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மிரட்டல்களும், வன்முறை அச்சுறுத்தல்களும் தொடர்வ தாகவும் குற்றம்சாட்டி உள்ளது. சங் பரிவாரின் வன்முறைகள் பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியைப் பிரதிபலிப்பதாக இல்லை என்றும், கல வரக்காரர்களும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் காவல்துறையினரும் பிரதமரின் செய்தியை புரிந்து கொண்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் விமர்சித்துள்ள ‘தி இந்து’ தலையங்கம், இந்தியாவில் பன்மைத்துவத்திற்கு ஆதரவாக மேலோட்டமான அடையாளச் செயல்களைத் தவிர, வேறு எதையும் செய்ய பாஜக விரும்பவில்லை என்பதே இதன் பொருள் என்றும் குற்றம்சாட்டி உள்ளது.
