சிறீரங்கத்தில் இன்று (30.12.2025) சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டதாம் (அதிகாலை 4.30 மணிமுதல் 5.45 மணிவரை).
இதற்காக ரெங்கநாதர் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, மூலக் கிரகத்திலிருந்து புறப்பட்டு (இதுவும் பொய்! தூக்கி வரப்பட்டு என்பதே மெய்!) துரைப்பிரதட்சணம் வழியாக பரமபத வாசலுக்குக் கொண்டு வரப்பட்டவுடன், சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது.
பகல்பத்து உற்சவத்தின் கடைசி நாளான இன்று (30.12.2025) சிறீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதாம்!
அதன் பிறகு ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிராக உள்ள ஒரு கொட்டகைக்குள் கொண்டு வரப்படுவார்… ஒரு மணிநேரம் பக்தர்கள் சேவிக்க அனுமதிக்கப்படுவர்.
அதன் பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நள்ளிரவு வரை வைக்கப்படுவார்! அதன் பிறகு மூலஸ்தானம் கொண்டு செல்லப்படுவாராம் நம் பெருமாள்.
இந்த நிகழ்ச்சியில் பெருமாளுக்குப் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று மோகினி அலங்காரமாம்!
அது என்ன மோகினி அவதாரம், அலங்காரம்?
திருப்பாற் கடலை (அப்படி ஒரு கடல் இரு்கிறதா என்று கேட்டுத் தொலைத்துவிடாதீர்கள்) தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர்; தலைப்பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் பிடித்து இந்தக் கடைசல் நடந்தது. அதில் கூட தேவர்கள் வால் பிடிப்பவர்களாகக் கூறப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
திருப்பாற் கடலைக் கடைந்ததால் வெளிவந்த அமிர்தத்தை – பாம்பின் விஷம் உள்ள தலையின் பக்கம் நின்று கடைந்த அசுரர்களுக்குப் போய்விடக் கூடாது என்று விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கி, முழு அமிர்தத்தையும் தேவர்களுக்குக் கிடைக்குமாறு செய்தார்.
மோகினி என்றால், அழகைக் காட்டி, மோகத்தை ஏற்படுத்தி, எதிரிகளை ஏமாற்றுவது! (இதுதான் கடவுளின் யோக்கியதை!)
தேவர்கள் என்றால், பார்ப்பனர்கள்!
அசுரர்கள் என்றால், திராவிடர்கள்!
மோகினி அவதாரம் யாரை ஏய்த்து, யாருக்குப் பயன் கிடைக்கச் செய்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்!
இன்றும் அப்படித்தான் – இட ஒதுக்கீட்டை எந்தெந்த வகைகளில் எல்லாம் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து (அதாவது அசுரர்களிடமிருந்து) பார்ப்பனர்களின் (அதாவது தேவர்களுக்கு) வயிற்றில் அறுத்துக் கட்டலாம் என்று திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட வில்லையா? சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்ற அரசமைப்புச் சட்டத்தை நயவஞ்சகமாக நமத்துப் போகச் செய்யும் மோகினி அவதாரம்தானே கிரிமீலேயர், EWS என்பவையெல்லாம்!
‘‘நாட்டில் நடப்பது அரசியல் பேராட்டமல்ல – பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் போராட்டமே’’ (தந்தை பெரியார், ‘விடுதலை’, 22.5.1967).
‘‘தேவர்கள் – அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை!’’ (ராஜாஜி, 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேச்சு)
சொர்க்கவாசல், மோகினி அவதாரம் என்பதெல்லாம் புரிகிறதா?
– மயிலாடன்
