தமிழ்நாடு நிருவாகம் நன்றாக இருப்பதால் உலக வங்கி கடன் தருகிறது
சென்னை, டிச.29– காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப் பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக விமர்சித்த நிலையில், திமுக மேனாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, பிரவீன் சக்கரவர்த்திக்கு பதில் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நிர்வாகம் நன்றாக இருப்பதால் தமிழகத்திற்கு உலக வங்கி கடன் தருகிறது. நிர்வாகம் மோசமான உத்தர பிரதேசத்திற்கு உலக வங்கி கடன் தருவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதிகக் கடன் வாங்கிய மாநிலம்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம்.
இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், அரியானாவுக்கு அடுத்து 3ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன்/ உள்நாட்டு உற்பத்தி, கரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் நிருவாகம் நன்றாக உள்ளது
இதற்கு முன்னாள் எம்.பி.யும் திமுக அயலக அணி செயலாளருமான எம்.எம்.அப்துல்லா அளித்துள்ள பதிலில், “தமிழ்நாட்டில் நிர்வாகம் நன்றாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு உலக வங்கி கடன் தருகிறது. நிர்வாக மோசமான உத்தரப் பிரதேசத்திற்கு உலக வங்கி கடன் தருவதில்லை. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் தான் கடன் கிடைக்கும். சிபில் ஸ்கோர் மோசம் என்பதால் கடன் கிடைக்காமல் இருப்பது வீரம் அல்ல. உத்தரப் பிரதேசத்திற்கு கடன் கிடைக்காததால் அவர்களுக்கு தமிழ்நாட்டு வரியில் இருந்து பணம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் 2 லட்சம் கோடி வரியில் 58 லட்சம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து 1.62 லட்சம் கோடி ஹிந்தி மாநிலங்களுக்கு செல்கிறது. நமது வரி ஹிந்தி மாநிலங்களுக்கு செல்வதால்தான் நாம் கடன் வாங்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு வரி தமிழ்நாட்டிற்கு மட்டும் என்றால் தமிழ்நாடு கடன் வாங்க வேண்டியதில்லை. இந்தியா என்பது ஒரு நாடு. எனவே ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு உதவ வேண்டும்.
உதாரணமாக அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் நிறைய சம்பாதிக்கிறார். நல்ல சிபில் ஸ்கோர் வைத்துள்ளார்; தம்பி ஒழுங்காக வேலை செய்வதில்லை. வருமானம் இல்லை. மோசமான சிபில் ஸ்கோர் வைத்துள்ளார்; இப்பொழுது தம்பிக்கு ஒரு அவசரம் என்றால் அண்ணன் தனது பணத்தை அளித்து விட்டு, தனது தேவைக்கு கடன் வாங்குவார் அல்லவா? அது தான் இங்கும் நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் வருமானம் குறைவு என்பதால் அவர்களுக்கு கடன் கிடைப்ப தில்லை. தமிழ்நாட்டின் வரி உத்தரப் பிரதேசத்திற்கு அளிக்கப்படுகிறது; தமிழ்நாடு கடன் வாங்க வேண்டியுள்ளது. இதில் எதுவும் பிரச்சினை இல்லை. இந்தியா என்பது ஒரு நாடு. எனவே ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்திற்கு உதவவேண்டும். ஆனால் அப்படி உதவும்போது நன்றாக இருக்கும் மாநிலத்தை குறை சொல்வது மட்டும் தான் தவறு.” எனத் தெரிவித்துள்ளார்.
