மாமல்லபுரம், டிச.29– செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மய்யத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு, மாமல்லபுரம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் காவல் துறையினரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் சிற்ப கலைக்கூடத்தில் 100 கிலோ சிவலிங்கத்தை திருடிய அர்ச்சகப் பார்ப்பான் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிவலிங்கத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை பொறுத்தவரை சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும். பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற தொல்லியல்நகரம் ஆகும்.இங்குள்ள புகழ் பெற்ற இடங்களை ஒன்றிய அரசே நேரடியாக பராமரித்து வருகிறது. அங்கு சிற்பக்கல்லூரி ஒன்று இருக்கிறது. சிற்பங்கள் குறித்து படிப்பும் இங்கு முக்கியமானதாகும்.
இந்நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி சோதனை சாவடி மய்யத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி இரவு மாமல்லபுரம் காவல்துறை ஆய்வாளர் தர்மலிங்கம், துணை ஆய்வாளர் ஆசைத்தம்பி ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் இவர்களைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.
விசாரணையில் அவர் தெலங்கானா மாநிலம் அய்தராபாத் அடுத்த விக்ரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் கார்த்திக் என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவிலில் தலைமை அர்ச்சகராக உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. சிவன் கோவிலில் வெளிப்புற வளாகத்தில் புதிய சிவலிங்கத்தை வைப்பதற்காக கோவில் நிர்வாகத்தினர் புதிய சிவலிங்க கற்சிலையை வாங்கி வர அவரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு அனுப்பியுள்ளனர்.
கார்த்திக் வடகடம்பாடி அம்பாள் நகரில் ஒரு சிற்ப கலைக்கூடத்தில் 2 அடி உயர சிவலிங்க சிலையை பார்த்து, நான் இந்த சிலையை வாங்கி கொள்கிறேன். ஊருக்கு சென்றவுடன் உங்களுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்புகிறேன். சிலையை நீங்கள் பார்சலில் அனுப்பி விடுங்கள் என்று கூறி விட்டு செல்கிறார்.
பின்னர் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற கார்த்திக் அங்கு பாரிவள்ளல் என்பவருடைய சிற்ப கலைக்கூடத்தின் வெளியே சாலை ஓரத்தில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட 100 கிலோ எடையுள்ள சிவலிங்கத்தை இரவு நேரத்தில் திருடி கோணிப்பையில் சுற்றி, மாமல்லபுரத்தில் வாடகைக்கு எடுத்த ஒரு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது காவல் துறையினரிடம் சிக்கியது தெரியவந்தது. காவல் துறையினர் அவரிடம் இருந்த 100 கிலோ எடையுள்ள, 2 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை பறிமுதல் செய்தனர். கார்த்திக்கை கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
