திருச்சி, டிச.29– திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது கைப்பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டில்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை ஒரு காவல் துறை அதிகாரி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 147 ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் உங்களின் ஏ.டி.எம். கார்டும் இருக்கிறது.
ஆகவே உங்களுக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் உங்களை ஆன்லைனின் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப் போகிறோம்.
கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்புங்கள். விசாரணைக்குப் பின்னர் நீங்கள் குற்றவாளி அல்ல என்று தெரியவந்தால் அந்த பணம் விடுவிக்கப்பட்டு மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் என கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அரசு அதிகாரியான கந்தசாமி அதிர்ச்சியில் உறைந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு மகள் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மகளின் திருமணத்துக்காக மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வேறு வகைகளிலும் ரூ.90 லட்சம் பணத்தை தனது வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருந்தார்.
இந்த அபாண்ட குற்றச்சாட்டினால் மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமே என கருதி பதட்டத்தில், அவர் அந்த மோசடி பேர்வழியின் மிரட்டலை உண்மை என்று கருதி, பயந்து தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.90 லட்சம் பணத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டார்.
கைப்பேசியில் வந்த இந்த மிரட்டல் தொடர்பாக கந்தசாமி தனது மகன், மகளிடமோ அல்லது உறவினர்களிடமோ எந்தவித ஆலோசனையும் செய்யாமல், அவர்களுக்கு தெரிவிக்காமல் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததை எண்ணி வருந்தினார். அதன் பின்னர் தனது நண்பரான வழக்குரைஞர் ஒருவரை சந்திக்க சென்ற போது, கந்தசாமி வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்ததை பார்த்து என்ன வென்று கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறி அழுது புலம்பியுள்ளார்.
