(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
ஆகமப்படிதான் அர்ச்சகர்களா? குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சகர்களா? எங்கள் கேள்விக்கு என்ன பதில்?
– மின்சாரம்
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கார் நகரில் உள்ள பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த கோயில் ஒன்றின் பூஜாரிக்கு முஸ்லிம் பெண் மூலம் பிறந்த மகனின் உரிமையை அங்கீகரித்து பூஜாரியின் சட்டப்படியான வாரிசுதான் அவர் என்று புஷ்கார் நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பு இந்நகரில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
பழைமை வாய்ந்த சிவன் கோயிலில் பார்ப்பன அர்ச்சகருக்கும், முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்தவர் அர்ச்சகராகப் பணியாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தங்களைப் புனிதமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் புஷ்கார் பார்ப்பனர்கள் தவிக்கின்றனர்.
சுபாலீசுவரர் மகாதேவர் கோயிலில் பூஜை செய்யும் உரிமை பற்றிய ஒரு வழக்கில் மகந்த் பாலக்தாசின் மகன் 40 வயதுடைய முன்னாலாலை உரிமை பெற்ற வாரிசு என்று செப்டம்பர் 14 அன்று அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
1985-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போது பல கோடி, ரூபாய் மதிப்புள்ன சொத்துக்களைக் கொண்ட இந்த கோவிலின் கட்டுப் பாட்டை ரதன்கிரி என்ற மற்றொரு அர்ச்சகரிடமிருந்து கோரி பாலக்தாஸ் 1985ஆம் ஆண்டில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1991-இல் ரதன்கிரி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பாலக்தாஸ், அவரு டைய மகன்கள் தாமோதர் முகியா, முன்னாலால் ஆகியோரை செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று முடிவு செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
பாலக்தாசும் அவருடைய மகனும் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றம் அவர்களுக்கு அளித்த சிறைத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது.
சில ஆண்டுகளுக்கு முன் பாலக்தாஸ் இறந்தபின் தான் பூஜாரியின் வாரிசு என்றும், கோயில் கட்டுப்பாட்டு வழக்கங்களைத் தொடர்ந்து நடத்த தான் விரும்புவதா கவும், தாமோதர் புஷ்கார் நீதிமன்றத்தை அணுகினார். கைரூ என்ற முஸ்லிம் பெண்ணுடன் சட்டப்படியல்லாத உறவு வைத்திருந்த பூஜாரி பாலக் தாசின் மகன் தான் என்று கூறிக்கொண்டு முன்னாலா லும் கோயிலின் கட்டுப்பாட்டுக்கான போட்டியில் குதித்தார்.
பள்ளி மற்றும் சிறை ஆவணங்களைத் தனது கோரிக்கைக்கு ஆதாரமாக முன்னாலால் காட்டினார். அவற்றில் அவரின் தந்தை என்று அர்ச்சகர் பாலக் தாசின் பெயர் இருந்தது. அவரது இந்த உரிமைக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் முன்னாலால் பாலக்தாஸ் அர்ச்சகப் பார்ப்பனரின் மகன்தான் என்றும் அதன்படி. ‘கோயில் மற்றும் அதன் சொத்துகளில் அவருக்கும் உரிமை உள்ளது என்றும் அறிவித்தது.
ஆண்டில் ஆறு மாதங்களுக்குக் கோவிலில் பூஜை செய்யும் உரிமை பாலக்தாஸ் குடும்பத்துக்கு உள்ளபடி யால், முன்னாலாலுக்கும் அவருடைய குடும்பத்தினருக் கும் இவ்வாறு ஆறு மாதம் கோயிலில் பூஜை செய்ய உரிமை உள்ளது.
உள்ளூரில் உள்ள மற்ற அர்ச்சகர்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “சொத்தில் அவர் ஒரு பங்கு பெற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எவ்வாறு அவர் பூஜை செய்ய முடியும்” என்று அர்ச்சகர்கள் சங்கப் பொதுச்செயலாளர் கார்க் கேட்கிறார்.
ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட முன்னாலாலுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். “சில ஆண்டுகள் கழித்து இந்த 3 குழந்தைகளும் தங்கள் தாத்தாவின் உரிமைகளைக் கோருவார்கள் – இது ஏமாற்று வேலை” என்று மற்றொரு அர்ச்சகர் பொருமுகிறார்.
நாடு முழுவதிலும் 84 கிளைகளைக் கொண்ட “மகாபிரவு கி பய்தக்” என்னும் மற்றொரு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும் பாலக்தாஸ் குடும்பத்துக்கு உள்ளது. இது வைஷ்ணவர்களின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
”முற்றிலும் தூய்மையானவராக இருந்தாலொழிய ஒரு பார்ப்பன அர்ச்சகரைக் கூட இந்தக் கோயிலில் பூஜை செய்ய நாங்கள் அனுமதிப்பது இல்லை. இப் போதோ ஒரு முஸ்லிம் கருவறைக்குள் நுழைவதைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பக்தர்களி டையே இதனால் பெரும் கலவரம் ஏற்படும்” என்று கார்க் கூறுகிறார்.
இந்தச் சிக்கலில் இருந்து விடுபட ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுக அர்ச்சகர்கள் முடிவு செய்து உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முதல் பெண் அர்ச்சகர் சமஸ்கிருத மந்திரங்கள் கன்னிகா தானம் கிடையாது
மேற்கு வங்க மாநிலத்தில் நந்தினி போவ்மிக் முதல் பெண் அர்ச்சகராவார். மேலும் அவர் ஒரு பேராசிரி யரும், நாடகக் கலைஞருமாவார்.
திருமண சடங்குகளில் சமஸ்கிருத மொழி மந்திரங் கள் கிடையாது. அவற்றை ஆங்கிலம் மற்றும் வங்க மொழியில் எளிமையாக மொழிபெயர்த்து திருமணச் சடங்குகளை நடத்தி வருகிறார். திருமணத்தை நடத்தி வைக்கின்ற நேரத்தில் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரரின் பாடல்களை பின்னணியில் சன்னமாகப் பாடுவார்கள். மணவிழாவை ஒரு மணி நேரத்துக்குள் முடிக்கின்ற வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
இவர் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா மற்றும் பிற பகுதிகளிலும் மத மறுப்பு திருமணங்கள், ஜாதி மறுப்புத் திருமணங்கள், இன மறுப்பு திருமணங்களை கடந்த 10ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட எண்ணிக் கையில் நடத்தி வைத்துள்ளார்.
தன்னை ஒரு சீர்திருத்தவாதியாக கூறும் போவ்மிக் மேலும் கூறியதாவது;
“பெண்களை போகப்பொருளாக நடத்துகின்ற மோசமான பழக்கமாகிய ‘கன்னிகா தானத்தை’ நான் நடத்துவதில்லை. திருமணவிழாவில் சடங்குகளை எளிமைப்படுத்தி ஒரு மணி நேரத்துக்குள் ஒட்டு மொத்த திருமணவிழாவை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.
இந்துத்துவா அரசியல் பரவிவருகின்ற சூழலில் சீர்திருத்தங்களை செய்து வருகின்ற போவ்மிக் எதிர்கொள்கின்ற அச்சுறுத்தல் குறித்து கூறுகையில், “பாரம்பரிய அர்ச்சகர்களை நான் மதிக்கிறேன். அவர் களுடன் சண்டை போட விரும்பவில்லை. ஆனாலும், என் கணவர் மட்டும் மோசமான அச்சுறுத்தலுடன் உள்ள ஹிந்துத்துவா குறித்து கவலைப்படுகிறார். தனிப்பட்ட வகையில் அச்சுறுத்தல் எதுவும் எனக்கு இதுவரை வரவில்லை” என்றார்.
போவ்மிக் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். தன்னுடைய ஆசிரியரான கவுரி தர்மாபாலிடமிருந்து இந்த உணர்வுகளைப் பெற்றதாக கூறுகிறார்.
அவருக்கு கிடைக்கின்ற ஊதியத்தின் பெரும் பகுதியை ஒடிசா மாநிலம் பூரியில் உள் பாலிகய் எனும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடையாக அளித்து வருகிறார்.
மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுப்பது டன், 10 நாடகக் குழுக்களையும் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு
31.8.2018 – மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோயி லில் மாரிச்சாமி என்ற இளைஞருக்குப் பணி வழங்கப் பட்டது.
14.7.2020 – மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகும் அரசாணையின் கீழ், பயிற்சி பெற்ற, மதுரை பாடசாலை மாணவர் தியாகராஜன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படி இதுவரையில் பயிற்சி பெற்றவர்களில் மொத்தமே 2 பேருக்கு பணி கிடைத்திருந்தது.
14 ஆகஸ்ட் 2021 – தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்ந்து பேர் உள்பட பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களில் பல்வேறு பணிகளுக் குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து ஜாதி யினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் திட்டத்தின் கீழ், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று பல்வேறு வழக்குகளால் பணி நியமனம் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருந்த பலருக்கும் பணி நியனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 28 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப் பள்ளியிலும் பணிகளைப் பெற்றனர். இருபத்து நான்கு பேரில் 5 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள்.
இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியாளர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இதுதவிர, ஓதுவார், வாத்தியங்களை இசைப்போர் உள்பட திருக்கோயில் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு பணியிடங்களுக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கிய இந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பல்வேறு மடாதிபதிகளும் கலந்து கொண்டனர். இதில் பேசிய குன்றக்குடி அடிகளார், ‘கடவுளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதாக’ கூறினார். 2000ஆம் ஆண்டில் விதைக்கப்பட்ட விதை நனவாகியிருப்பதாகவும் தமிழ் நாட்டின் ஆன்மிக தலங்கள் இதற்கு நன்றி தெரி விப்பதாகவும் கூறினார்.
அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மொத்தமாக 207 பேர் படித்து முடித்தனர். இவர்களில் 2 பேர் ஏற்கனவே பணி வாய்ப்பைப் பெற்றுவிட்டனர். அய்ந்து பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேர் வேறு அரசு வேலைகளுக்குச் சென்று விட்டனர். மீதமுள்ள 196 பேர் அர்ச்சகர் பணிக்காக காத்திருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள பல்வேறு கோயில்களில் அர்ச்சகர் பணியில் சேர்வதற் கான அறிவிப்புகள் வெளியாயின.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களில் சுமார் 50 பேர் இந்த வேலைகளுக்காக விண்ணப்பித் தனர். அதில் முதல் கட்டமாக 28 பேருக்கு தற்போது பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அர்ச்சகர் களுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதும் பல்வேறு அமைப்புகள் இந்த நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன. நீதிமன்றங்களில் இடைக்காலத் தடையைப் பெறவும் முயற்சித்தன. இருந்தபோதும் இந்தச் சிக்கல்களைத் தாண்டி, அர்ச்சகர்களாக பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.1970இல் அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் சட்டப் பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்ட வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியாரின் ஆசையாக இந்த திட்டத்தை கலைஞர் குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கலைஞர் எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞ ரின் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கேரளா
அக்டோபர் 2017 – கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200- க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அங்கு பார்ப்பனர்களே அர்ச்ச கர்களாக உள்ள நிலையில், பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமிக்க கேரள தேவசம் தேர்வு வாரியம் பரிந்துரை செய்தது.
தேவஸ்வம் போர்டு பரிந்துரைத்த 36 பேரில், 6 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆவர். அவர்களில் ஏடு கிருஷ்ணன் (22) என்பவர் திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோயில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார். அக்கோயிலில் அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தற்போது அக்கோயிலில் தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் கிருஷ்ணனும் கோயிலுக் குள் சென்றார். அங்கு மந்திரம் ஓதி தனது பணியை தொடங்கி வைத்தார். இதன்மூலம், கேரளாவின் முதல் தாழ்த்தப்பட்ட சமூக அர்ச்சகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிருஷ்ணன். இவரது சொந்த ஊர் திருச்சூர் மாவட்டமாகும். அங்குள்ள கோயிலில் சிறு வயது முதலே பூஜை செய்து வந்தார். சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
ஆந்திரா
24.9.2016 – ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத் செய்தியா ளர்களிடம் கூறும்போது,
“பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அறநிலையத் துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து அர்ச்சகர் பணிக்காக வேத பாடசாலையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.ஆந்திர மாநிலத்தில், கோயில் இல்லாத ஊர்களில் கோயில்கள் கட்டி, பயிற்சி முடித்த இளைஞர்களை அர்ச்சகர்களாக பணியில் அமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
முழு நேர அர்ச்சகர் பயிற்சி
திருமலையில் உள்ள சிறீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு முழு நேர அர்ச்சகர் பயிற்சி அளிக்க தேவஸ்தானம் முன் வந்துள்ளது.
இருமாவட்டங்கள்
இந்த பயிற்சிக்கான வெள்ளோட்டமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 100 மாணவர்கள் முதற்கட்டமாக சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பின்னர் ஆகம விதிகளின்படி இவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி பெற்ற மாணவர்கள், மற்ற கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றலாம். திருமண முகூர்த்தம் குறிப்பது உள்ளிட்ட பல சாஸ்திரங்கள், மந்திரங்கள் இவர்களுக்கு கற்றுத் தரப்பட உள்ளது.