பெரியார் உலகத்திற்கு நன்கொடை! காணொலி மூலம் மாதம் ஒரு முறை கலந்துரையாடல்
மதுரை – திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை திறமையாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு!
மதுரை – திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை திறமையாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு!
திராவிடர் கழக வழக்குரைஞரணி கண்டனம்
சென்னை, டிச.28 27-12-2025 அன்று பெரியார் திடலில் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கலந்துரையாடல் கூட்டம் காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்க உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கூட்டத்தின் நோக்கத்தினையும், கழகத்தின் உயிர்ப்புடன் திகழ்ந்து வரும் வழக்குரைஞரணியின் செயல்பாடுகள் அனைத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும், வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவமான தேர்தலாகும். தமிழ்நாடு முழுவதும் நம்முடைய வழக்குரைஞர்கள் அந்தந்த மாவட்டத்தில் காவல்துறை கூட்டங்களுக்கு அனுமதி மறுப்போ, தோழர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சமூகநீதி களத்தில் இன்னும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றும் சமுதாய பிரச்சினைகளில் வழக்குரைஞரணி அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் எடுத்துரைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் வழக்குரைஞரணியின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார்.
வருகைதந்து சிறப்பித்த வழக்குரைஞர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
கழகத் தலைவர் தலைமை உரை
‘‘நமது கழகத்தின் வழக்குரைஞர்கள் நேர்மையாக பணியாற்றகூடியவர்கள் – நம்பகத்தன்மையோடு செயல்பட்டு வருபவர்கள். திருப்பரங்குன்றத்தில் ஜாதி, மத மோதல்களை நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்து வரும் சங்பரிவார் கும்பல்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை நமது வழக்குரை ஞர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்து ஒவ்வொரு பிரச்சினையிலும் கழக வழக்குரை ஞர்கள் தெளிவாக கருத்தினை ஆழமாக பேச வேண்டும்.
வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை கையில் வைத்துக் கொண்டு கோேலாச்சி வருகிறார்கள். இடதுசாரி அமைப்புகளை போல தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்ற வேண்டும்’’ என்று கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று உரையாற்றினார்.
முக்கியமான – காலத்திற்கு தேவையான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்துக் கொண்ட வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் – தோழர்கள் : வழக்குரைஞர்கள் அ.அருள்மொழி, ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண்டியன், சு.குமாரதேவன், மு.க.இராஜசேகரன், சி.அமர்சிங், கே.வீரமணி, ஜெ.துரைசாமி, மு.சென்னியப்பன், எஸ்.நாகநாதன், எஸ்.வாஞ்சிநாதன், துரை.அருண், மாரிமுத்து, வே.கனிமொழி, ரட்சனா, ஆர்.மணிகண்டன், மனோஜ்குமார், வெங்கடேசன், பிரியா, ஆர்.சக்திகுமரன், தம்பி.பிரபாகரன், மு.சண்முகப்ரியன், மு.ராசா, கே.பாலகிருஷ்ணன், ஆர்.அண்ணாமலை, எம்.நடராசன், சோ.சுரேஷ், சு.சிங்காரவேலன், பாஸ்கர், திலகவதி, சூரியா.
வழக்குரைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:
வழக்குரைஞர் துரை.அருண் (கழக வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர்)
வழக்குரைஞர் வே.கனிமொழி (மதுரை மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர்)
வழக்குரைஞர் டி.ரமேஷ் (குடந்தை மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர்)
பத்து தீர்மானங்கள்
பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவது, திருப்பெருங்குன்றம் பிரச்சினையை சாதுரியமாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்களோடு, கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்கும் வண்ணம் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்தஒன்றிய தொழிலாளர் விரோத சட்டத்திற்குக் கண்டனம் உட்பட 10 தீர்மானங்களை திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம்: (1) மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மிக உறுதியாகவும் சரி யாகவும் செயல்பட்டு வருவதோடு இந்து காவி அமைப்புகள் உண்டாக்க நினைத்த மத கலவரத்தை ஒடுக்கி, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசை இக்கூட்டம் பாராட்டுகிறது. இதற்குக் காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: (2) தமிழ்நாடு முழுவதும் வழக் குரைஞர்களுக்கு இடையூறை ஏற்படுத்தி உள்ள E-Filing (இபைலிங்) மனுத்தாக்கல் முறையினை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும், வழக்குரைஞர்கள் சங்கங்கள் போராடி வருவதை அக்கறையுடன் பரிசீலித்து, உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்றும் மாண்பமை தலைமை நீதிபதி அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்றமும், வழக்குரைஞர்களுடன் கலந்து பேசி நடை முறைக்கு சாத்தியமான வழிகளை கண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் படியும், அனைத்துக் கிழமை நீதிமன்றங்களிலும் பணி யாற்றும் வழக்குரைஞர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தீர்வு காண இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: (3) நீண்ட காலமாக நடைபெற்று வரும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரச் சனைக்கு தனிச்சட்டமியற்றி அதை இந்து அறநிலையத்துறையே மீண்டும் கையகப்படுத்த தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை!
தீர்மானம்: (4) பெரியார் உலகத்திற்கு மாநில வழக்குரைஞரணி சார்பில் பத்து இலட்சத்திற்கு மேல் வழங்குவது என முடிவெடுக்கப்படுகிறது.
தீர்மானம்: (5) சாலையோர அரசு இடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அனைத்து மத சின்னங்களையும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: (6) கழக வெளியீடுகளான விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு சந்தாக்களை வழங்குவதென முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம்: (7) நமது அறக்கட்டளை சார்பில் தனியே சட்டக்கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மாதம் ஒரு முறை காணொலி மூலம் கலந்துரையாடல்
தீர்மானம்: (8) மாதம் ஒருமுறை காணொலி (ZOOM Meeting) மூலம் மாநில அளவில் கலந் துரையாடல் கூட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்படுகிறது.
தீர்மானம்: (9) ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்குரைஞரணி விரைவில் கட்டமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: (10) தொழிலாளர்களுக்கு நன்மை அளித்து வந்த – ஏற்கெனவே நடைமுறைலிருந்த சட்டங்களை ரத்து செய்து தொழிலாளர்கள் உரிமைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகள் பயன்பெறும் வகையில் தொகுப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ள, பி.ஜே.பி. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிப்பதுடன், பழைய சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறது.
