கூத்தாநல்லூர், டிச. 28– திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சுமதி இணையரின் குழந்தைகள் சுவாதி (12ஆம் வகுப்பு), சுவேதா (11ஆம் வகுப்பு) மற்றும் சிவேசுவர் (5ஆம் வகுப்பு). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாய் சுமதியும், சில மாதங்களுக்கு முன்பு தந்தை சிவக்குமாரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், இந்த மூன்று குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
உறவினர்கள் ஆதரவின்றி ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு, அக்கம் பக்கத்தினர் அளிக்கும் உணவே வாழ்வாதாரமாக இருந்தது. வறுமையிலும் கல்வியைக் கைவிடாமல் அரசுப் பள்ளிகளில் இவர்கள் பயின்று வந்தனர். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாகச் செயல்பட்ட ஆட்சியர், குழந்தைகளை ‘முதலமைச்சரின் அன்பு கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைத்தார். இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் தலா ₹2,000 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தச் சூழலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஆட்சியர் மோகனசந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குழந்தைகளின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.
அங்கு குழந்தைகளுக்கு அரசு சார்பில் வீட்டு மனைப் பட்டாவை வழங்கிய அமைச்சர், தனது கைப்பேசி மூலம் முதலமைச்சரை வீடியோ காலில் இணைத்தார். அப்போது குழந்தைகளிடம் நேரடியாகப் பேசிய முதலமைச்சர்:
“நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், அரசு உங்களைப் பார்த்துக்கொள்ளும். இப்போது பட்டா கொடுத்துள்ளேன், இன்னும் 3 மாதங்களில் உங்களுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித் தரப்படும். உங்களது மேற்படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.”என உருக்கமாகத் தெரிவித்து குழந்தைகளுக்குப் பெரும் நம்பிக்கையளித்தார்.
தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில், முதலமைச்சரே நேரில் பேசி உதவிக்கரம் நீட்டியது அக்குழந்தை களை நெகிழச் செய்தது. அவர்கள் முதலமைச்சருக்குத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது கோட்டாட்சியர் யோகேஸ்வரன், மன்னை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரேசன், கூத்தா நல்லூர் நகரமன்றத் தலைவர் பாத்திமா பஷீரா மற்றும் வட்டாட்சியர் வசுமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
