சென்னை, டிச. 28– தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மற்றும் பயின்று முடித்த மாணவர்களின் விவரங்களை யுமிஸ் (UMIS) இணையதளத்தில் உடனடியாகப் புதுப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜசேகரன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியத் தகவல்கள்:
நடப்பு கல்வியாண்டு மாணவர் களுக்கான அறிவுறுத்தல் 2025-20–26 நடப்பு கல்வியாண்டில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறையில் ஏதேனும் தாமதமோ அல்லது தவறுகளோ ஏற்பட்டால் அதற்குப் பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என எச்சரிக்கப் பட்டுள்ளது.
விடுபட்ட 21,506
மாணவர்களின் தரவுகள்
பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சிகரமான சில தகவல்கள் வெளியாகியுள்ளன:
சுமார் 424 கல்வியியல் கல்லூரிகள், கடந்த கல்வியாண்டு களில் படித்து முடித்த 21,506 மாணவர்களின் விவரங்களை இதுவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.
குறிப்பிட்ட மாணவர்கள் தேர்ச்சியுற்றிருந்தாலும் அல்லது தோல்வி அடைந்திருந்தாலும், அவர்களின் முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியக் குறிப்பு: மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தத் தரவுகள் மிக அவசியம் என்பதால், கல்லூரி நிர்வாகங்கள் இதில் துரிதமாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
