சென்னை, ஏப்.28- மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021ஆம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் மதுரையில் மிகப் பெரிய கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதையடுத்து 2022ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மதுரையில், கலைஞர் நூல கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார்.
மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வந்தது. தற் போது, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து வரும் முத்தமி ழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி திறந்து வைக்கப் படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-_-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு களை முன்வைத்து நிதியமைச்சர் ஆற்றிய உரையில் மதுரையில் பன்னாட்டு தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரை தாங்கி வரும் ஜூன் மாதம் முதல் வாசகர் களை வரவேற்கும். எனவே, இந்த நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என அழைக்கப்படும் என அரசு அறிவிக்கை செய்து ஆணையிடுகிறது என அதில் கூறப்பட் டுள்ளது.