சென்னை, டிச. 28– அரசு ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்கள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு நிதித்துறை ஒரு முக்கியமான அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund – FSF) வழங்கும் அதிகாரத்தை ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓய்வூதியதாரர்கள் குடும்பங்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளது.
குடும்ப பாதுகாப்பு நிதி
என்றால் என்ன?
பொதுவாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund) என்ற திட்டத்தை செயலபடுத்தி வருகிறது. அதா வது ஓய்வூதியதாரர்கள் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத் துக்கு உடனடியாக நிதி உதவியா ரூபாய் 50,000 வழங்கப்படும். இதற்காக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் மாதம் ரூ.150 பங்களிப்பாக ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
குடும்ப பாதுகாப்பு நிதி பழையமுறை
இதில் சிக்கல் என்னவென்றால், ஒருவேளை ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய தாரர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ், இந்த பணம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநர், அந்த விண்ணப்பத்தை சென்னையில் இருக்கும் ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும்.
குடும்ப ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை
இதற்கு கால தாமதம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது என தொடர்ந்து புகார்கள் ஓய்வூதியதாரர் குடும்பத்திடம் இருந்து வந்தது. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், உடனடியாக அவர்களின் குடும்பத்துக்கு குடும்ப பாதுகாப்பு நிதி கிடைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை
இதைக்கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிய அரசாணை G.O. 267 படி, இனி அலைச்சல் இருக்காது மற்றும் தாமதம் இருக்காது. ஓய்வூதியர் குடும்பத்துக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைக்கும்.
குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் அதிகாரம்
அதாவது அரசாணையில், ‘இனிமேல் குடும்ப பாதுகாப்பு நிதி கோரிக்கைகள்’ அனைத்தும் சென்னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் சென்னை ஓய்வூதியப் பட்டுவாடா அதிகாரி (PPO), மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் துணைக் கருவூல அதிகாரிகளுக்கே இத் தொகையை வழங்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநில ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நடைமுறை?
அதேநேரம் மாநிலத்திற்கு வெளியே ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் தொடர்பான குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்குவதற்கான தற்போதைய நடைமுறை, சென்னை கருவூலங்கள் மற்றும் கணக்குகள் இயக்குநர் அலுவலகத்தில் தொடர்ந்து பின் பற்றப்படும் என கூறப்பட்டு உள்ளது.
குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் நோக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு ஓய்வூ தியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதி யதாரர்கள் மற்றும் அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்குவதற்காக 01.01.1997 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் பங்களிப்பு எவ்வளவு?
முன்னதாக தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்காக மாதந்தோறும் ரூ.20/- பங்களிப்பாக ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 01.07.2021 முதல் மாதம் பிடித்தம் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது.
குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவி எவ்வளவு?
மாதந்தோறும் பிடித்தம் ரூ.20, ஒரு ஆண்டு பங்களித்த பிறகு ஓய்வூதியதாரர் இறந்தால் ரூ.25,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. அதுவே குடும்பப் பாதுகாப்பு நிதித் தொகை காலப்போக்கில் உயர்த்தப்பட்டு, ரூ.25,000/-லிருந்து ரூ.35,000/- ஆகவும், ரூ.35,000/-லிருந்து தற்போது ரூ.50,000/- ஆகவும் வழங்கப்படுகிறது.இத்தொகையைப் பெற, ஓய்வூதியதாரர் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இத்திட்டத்திற்குப் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.
குடும்ப பாதுகாப்பு நிதி
யாருக்கு வழங்கப்படும்?
ஓய்வூதியதாரரின் வாழ்க் கைத் துணைக்கு (மனைவி/கணவர்) முன்னுரிமை வழங்கப்படும். வாழ்க்கைத் துணை உயிருடன் இல்லாத பட்சத்தில், ஓய்வூதியதாரரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (Nominee) வழங்கப்படும். ஒருவேளை நாமினி பரிந்துரை செய்யப்படவில்லை எனில், அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.
