கள்ளக்குறிச்சி: வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், முதலமைச்சரின் உழவர்நல சேவை மய்யங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2025 ஆம் ஆண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சி இது!

உழவர் பெருமக்களின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும்,

என்றைக்கும் உங்களுக்குத் துணையாக ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது; இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக இருக்கிறேன்!

கள்ளக்குறிச்சி, டிச.28– ‘‘2025 ஆம் ஆண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சி இது! உழவர் பெருமக்களின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் என்றைக்கும் உங்க ளுக்குத் துணையாக ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது; ஏன், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கி றேன்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Contents

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேற்று (27.12.2025) திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை– திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், முதலமைச்சரின் உழவர்நல சேவை மய்யங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை வருமாறு:

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

சிந்தனையும், செயல்களும் பசுமையாக ஆகிறது!

நிலத்தில் நீரை பாய்ச்சியும், உடலில் ஓடும் செந்நீரை வியர்வையாக சிந்தியும், உலகத்தை பசுமையாக்கி, ஒவ்வொருவருக்கும் உணவளிக்கின்ற விவசாயிகளோடு இருக்கும்போது, சிந்தனையும், செயல்களும் பசுமையாக ஆகிறது! அதிலும், இந்த நிகழ்ச்சியில், விவசாயிகள் –  வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்று கின்ற தொழில்முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பிரதிநிதிகள்,  நம்முடைய வேளாண்மையை, உலகத்தரத்திற்கு உயர்த்திட பணியாற்றும் வல்லுநர்கள்,  உணவு வழங்கும் உழவர்களை வாழவைக்கின்ற பொதுமக்கள், மாணவர்கள் என்று எல்லோரும் ஒன்றாகக் கூடியிருக்கின்ற திருவிழாவாக இந்த நிகழ்ச்சியை சிறப்பான வகையில்,  வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!

உழவர்கள்  பின்னால்தான், நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்கிறோம் என்று காட்டக்கூடிய வகையில், இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அதற்காக முதலில் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஓராண்டில், மூன்றாவது கண்காட்சி!

இந்த வேளாண் கண்காட்சியையும், கருத்த ரங்கையும் தொடங்கி வைப்பதில், நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்!  விவசாயத்திற்கும், விவசாயி களுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில், நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த வேளாண் கண்காட்சி, இந்த ஓராண்டில் மட்டும் எத்தனையாவது கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? மூன்றாவது கண்காட்சி!

முதலில், ஜூன் மாதம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடத்தினோம்.  இரண்டாவதாக, செப்டம்பர் மாதம், சென்னை வர்த்தக மய்யத்தில், வேளாண் வணிகத் திருவிழாவாக நடத்தினோம்! இன்றைக்கு மூன்றாவதாக, திருவண்ணாமலையில நடத்திக் கொண்டிருக்கிறோம்!

“உழுதவன் கணக்கு பார்த்தால்,
உழக்குக் கூட மிஞ்சாது!”

பொதுவாக, “உழுதவன் கணக்கு பார்த்தால், உழக்குக் கூட மிஞ்சாது” என்று சொல்வார்கள். நாற்று நட்டு, அறுவடை செய்கின்ற வரைக்கும், ஒரு விவசாயிக்கு இருப்பது பிரசவ வேதனை என்று சொல்வார்கள்!  பாடுபடுகின்ற விவசாயிக்கு, இயற்கையும், மண்ணும் கைகொடுத்தால் தான், மகசூல் சரியாக இருக்கும்!

இன்றைக்கு, தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது! பல மணி நேர வேலைகளை, சில மணித்துளிகளில், பல நூறு நபர்கள் செய்கின்ற வேலைகளை, சில இயந்திரங்கள் செய்கின்ற அளவுக்கு, அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது! இந்த வளர்ச்சி, விவசாயிகளான உங்கள் கைகளில் வந்து சேர்ந்தால்தான், அது உண்மையான வளர்ச்சியாக மாறும்! அப்படி இருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களைத் தேடி, விவசாயிகளான நீங்கள் அலையக் கூடாது என்று தான், உங்களைத் தேடி வந்து இந்த வேளாண் கண்காட்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

இந்த வேளாண் கண்காட்சியில், ஏராளமான ஸ்டால்களை அமைத்திருக்கிறார்கள். நாங்கள் நேர மில்லா காரணத்தினால், சுருக்கமாக, வேகவேகமாக, இருந்தாலும் முழுமையாகச் சுற்றிப் பார்த்துவிட்டுதான் இந்த மேடைக்கு வந்திருக்கிறோம். இதையெல்லாம் நீங்களும், பொறுமையாகச் சுற்றிப் பாருங்கள்…  உயர் விளைச்சலை தரக்கூடிய புதிய பயிர் ரகங்கள் –  நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் – வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் – அறுவடைக்குப் பிறகு தேவைப்படும் மேலாண்மை நுட்பங்கள் – மதிப்புக்கூட்டும் நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள்,  சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர்க்காப்பீடு, வேளாண் ஏற்றுமதி என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி, நீங்கள் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்!

இதுமட்டுமல்ல, குறித்த நேரத்தில், அணையி லிருந்து தண்ணீரை திறந்தும், சாகுபடி பரப்பை அதிகரித்தும், நீர்நிலைகளைத் தூர்வாரியும்,  அதிகளவில் கொள்முதல் செய்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற உழவர்களை உயர்த்துகின்ற நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்!

சரி, கண்காட்சி வைத்துவிட்டால் மட்டும் போதுமா! இதையெல்லாம் எளிமையாகப் புரிவது போன்று விளக்கிச் சொல்லி, இதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டாமா? அதற்காகத்தான், 13 தலைப்புகளில், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுக்கான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்திருக்கிறோம்!

வேளாண்மைத்துறை என்பதை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம்!

இந்தக் கருத்தரங்குகள் மூலமாக, புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்! எதற்காக இத்த னையும் நாம் செய்கிறோம்? விவசாயத்தை நிலைபெற செய்யவேண்டும் என்பதற்காக செய்கிறோம்! வேளாண் துறையும், உழவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளை களைந்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். நாம் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனே, வேளாண்மைத்துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம்! சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்றுவார்கள்… ஆனால், விவசாயிகளைத் தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராட விடுவார்கள்… இன்னும் சிலர், விவசாயி வேடமிட்டு, அரசியல் செய்வார்கள்; ஆனால், விவசாயிகளைப் பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்; விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். ஆனால், நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசில், விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும்தான் முக்கியம். அதனால் தான் பயிர் உற்பத்தி – உற்பத்தி திறன் ஆகியவற்றை உயர்த்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தோம்!  அதற்காக, வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட்டை அமைக்க ஆரம்பித்தோம்!

இதுவரைக்கும், ஏராளமான திட்டங்களை அறிவித்து,

5 அக்ரி-பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டோம்! இந்த 5 அக்ரி-பட்ஜெட்டையும் சேர்த்து, உங்களுக்காக ஒதுக்கியிருக்கின்ற நிதி எவ்வளவு தெரியுமா?

ஒரு இலட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய்!  இதில், அய்ந்தாவது அக்ரி-பட்ஜெட்டில் மட்டும் 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம்! இது, 2021-2022 உடன் ஒப்பிட்டால், 33 விழுக்காடு அதிகம்!

அதுமட்டுமா, வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பத்துக்கு ஏற்ப, விவசாயத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவையான மின்னணு சாகுபடித் தொழில்நுட்பங்கள், பாதுகாக்கப்பட்ட சூழல் சாகுபடி,  நன்னெறி வேளாண் முறைகள், சந்தை சார் சாகுபடி, உணவு பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் என்று எல்லாவற்றிற்கும் திட்டங்கள் வகுத்து இன்றைக்கு நாம் செயல்படுத்திக் கொண்டி ருக்கிறோம்!

கடந்த அய்ந்து ஆண்டுகளாக, மேட்டூர் அணையை, கரெக்டாக திறக்கிறோம்! அதனுடைய 20 இலட்சம் விவசாயிகள் பயனடைகின்ற வகையில், 481 கோடி ரூபாய் செலவில், ‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ கொண்டு வந்திருக்கிறோம்! இந்த ஆண்டு, முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில், கார் – குறுவை – சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை 132 கோடி ரூபாயில் செயல்படுத்தியிருக்கிறோம்!

“கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!”

கிராமங்களில், உழவுத் தொழிலை வலுப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து, அய்ந்தாண்டு பெருந்திட்டமாக கொண்டு வந்ததுதான், “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!” 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகின்ற இந்த திட்டத்தால், 54 ஆயிரத்து 701 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கின்றோம்!

 “மண்ணுயிர்  காத்து,
மன்னுயிர் காப்போம்” திட்டம்!

இப்படி, நம்முடைய அரசின் சாதனைகள் ஏராளமாக இருக்கிறது! அய்லைட்டாக இன்னும் சிலவற்றை மட்டும் நான் சொல்ல வேண்டும் என்றால், விவசாயிகளின் நலனையும் காக்க வேண்டும்; மக்களுக்குத் தரமான உணவு கிடைப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்று பாரம்பரிய வேளாண் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து, 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 27 இலட்சம் விவசாயிகள் பயனடைகின்ற வகையில், “மண்ணுயிர்  காத்து, மன்னுயிர் காப்போம்” திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

“தமிழ் மண்வளம்” இணைய முகப்பு

விவசாயிகள், தங்களுடைய நிலத்தைப் பற்றி அறிந்து, உரமிடவேண்டும் என்று “தமிழ் மண்வளம்” இணைய முகப்பை உருவாக்கியிருக்கிறோம்! 2022-லிருந்து, 43 ஆயிரத்து 17 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கின்ற வகையில்,  860 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகளை 67 ஆயிரத்து 651 விவசாயிகளுக்கு விநியோகம் செய்திருக்கிறோம்!

முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்ததோடு, 14 புதிய உழவர் சந்தைகளையும் நாம் அமைத்திருக்கிறோம்! பனைமரங்களை பாது காக்குகின்ற பனை மேம்பாட்டு இயக்கம் – உழவர் செயலி – இ-வாடகை செயலி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!

5 ஆண்டுகளில் புதிதாக, ஒரு இலட்சத்து 82 ஆயிரம் புதிய இலவச மின்சார இணைப்பு

வேளாண் – உழவர் நலத்துறை சார்பில், செய்யப்பட்டிருக்கின்ற திட்டங்கள் பற்றியும், முன்னெடுப்புகள் பற்றியும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களிடம் கேட்டபோது, அவர் ஒரு பெரிய லிஸ்ட்டையே டீட்டெயிலாக வழங்கிவிட்டார்… அதிலிருந்து சிறியதாக தான் நான் இப்போது சொல்லியிருக்கிறேன்! அதில், முத்தாய்ப்பான ஒரு விஷயம், இந்த 5 ஆண்டுகளில் புதிதாக, ஒரு இலட்சத்து 82 ஆயிரம் புதிய இலவச மின்சார இணைப்புகளை வழங்கி, கூடுதலாக, 3.6 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்!

உங்கள் விளைச்சலில் மட்டுமல்ல, உங்கள் துன்பத்தி லும் துணையாக கூட நிற்பவர்கள் தான் நாங்கள். அதனால்தான், அய்ந்தாண்டுகளில், இதுவரைக்கும் 32.81 இலட்சம் ஏக்கரில் ஏற்பட்ட, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் சேதத்திற்கு, 20 இலட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 631 கோடியே 76 இலட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியிருக்கிறோம்!

முக்கியமாக, 2024-2025-ஆம் ஆண்டில், வட கிழக்குப் பருவ மழை மற்றும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 இலட்சம் ஏக்கருக்கு நிவாரணத் தொகையாக, 289 கோடியே 63 இலட்சம் ரூபாயை, 3 இலட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று 23 ஆம் தேதி நான் உத்தரவிட்டு தான், இந்த மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்!

அத்துடன், இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்களுக்கு விரைவில் நிவாரண உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உங்களுக்குத் தெரி வித்துக் கொள்கிறேன்!

என்றைக்கும் நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு, உங்களுக்குத் துணையாக இருக்கும்!

இப்படி, உழவர் பெருமக்களின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் என்றைக்கும் நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு, உங்களுக்குத் துணையாக இருக்கும்!

அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வழங்காமல் நான் போகமுடியுமா? முடியாது. நீங்களே நினைப்பீர்கள், அரசு விழாவில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அரசு விழாவில் அறிவிப்பு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயிகளின் கண்காட்சியை, இங்கே மாநாடு போல, மாபெரும் விழாவாக நடைபெறுகிறது. இங்கேயும் நிச்சயமாக அறிவிப்புகள் வரும் என்று நினைத்து வந்திருப்பீர்கள்.

அதற்காக ஒரு அறிவிப்பை நான் அறிவிக்க விரும்புகிறேன்.

திருவண்ணாமலை விற்பனைக் குழுவில், வாடகை கட்டடத்தில் இயங்கி வரக்கூடிய பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் புதிதாக 500 மெட்ரிக் டன் கொண்ட சேமிப்புக் கிடங்கு; அலுவலகத்துடன் கூடிய பரிவர்த்தனைக் கூடம் மற்றும் விவசாயிகளின் ஓய்வு அறை, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
புதிய உலர்களங்கள் அமைக்கப்படும்!

வேளாண் விளைப்பொருட்களை உலர்த்தி, சுத்தப்படுத்தி, விற்பனை செய்வதற்கு ஏதுவாக திருவண்ணாமலை விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும், சேத்துப்பட்டு, போளூர் மற்றும் வந்தவாசி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய உலர்களங்கள் அமைக்கப்படும்.

உங்களுக்காக, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்!

இந்தக் கண்காட்சியும், உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நம்முடைய ஆட்சியின் சாதனைத் திட்டங்களுக்கு சாட்சிதான் இத்தகைய கண்காட்சி. எனவே, இந்தக் கண்காட்சியில் இருக்கின்ற பயனுள்ள தகவல்களை, தொழில்நுட்பங்களை, விவசாயிகளான நீங்கள் சிறப்பாக பயன்படுத்தி, அதிக விளைச்சலையும், விலையையும் பெற்று முகத்திலும், உள்ளத்திலும், புன்சிரிப்போடு வாழவேண்டும் என்று வாழ்த்தி, உங்களுக்காக ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது; ஏன், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்று உறுதியளித்து, விடைபெறுகிறேன்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *