பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணம் – இந்துத்துவவாதிகளின் வன்முறையும் ஆதிக்கமும்தான்! இதற்குப் பிறகாவது வலதுசாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
‘இந்தியா இந்து நாடே’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது! அதன் விளைவுதான் கடந்த 25ஆம் தேதி – கிறிஸ்துமஸ் நாளன்று வடமாநிலங்களில் கிறித்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள்!
இதனை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும், திராவிட மாடல் அரசின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் மற்றும் மதச் சார்பின்மையில் அக்கறை உள்ள கட்சித் தலைவர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ஒருபுறம் பிரதமர் நரேந்திரமோடி தேவாலயம் சென்று பிராத்தனையோடு ஒன்றிப்போய் இருக்கும் காட்சிகள் நாளிதழ்களில் முதல் பக்கம் வெளி வருகிறது. உள்பக்கங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயம், பெருவணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல் செய்திகள் நிறைந்து வழிகின்றன!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது, அப்பகுதி பா.ஜ.க.வினர் பா.ஜ.க. கொடியை ஏந்திக்கொண்டு விழா நடக்கும் பகுதிக்குள் சென்று, பிரார்த்தனைக் கூட்டங்களில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்
டிசம்பர் 20 அன்று நடைபெற்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில், அம்மாநில பா.ஜ.க துணைத் தலைவர் அஞ்சு பார்கவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தனர்; மதமாற்றம் நடைபெறுவதாகக் கூறி இந்த குழுவினர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பார்வையற்ற பெண்ணை ஆவேசமாகத் தாக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாஜக உள்ளூர் நகராட்சித் தலைவி மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் தாக்கும்போது அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் வேடிக்கை பார்த்தது – பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
முதல் சம்பவம் நடந்த இரண்டு நாட்களிலேயே, டிசம்பர் 22 அன்று மற்றொரு பகுதியில் உள்ள தேவாலயத்தில் இதே கும்பல் சென்று “ஜெய் சிறீ ராம்” என உரக்க முழக்கமிட்டு, பிரார்த்தனைக்கு இடையூறு செய்தனர்! அங்கிருந்த இருக்கைகளை சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்களை மிரட்டி கிறிஸ்துமஸ் அலங்காரங்களை கிழித்தெறிந்தனர் இச்சம்பவம் தொடர்பான காட்சிப் பதிவுகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள பிரபல வெளிநாட்டுப் பேக்கரி தயாரிப்பு நிறுவனத்தின் பெரிய வணிக வளாகமான மாக்னெடோ மாலுக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் வன்முறையாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
மால் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம் (Christmas Tree) மற்றும் சாண்டா கிளாஸ் (Santa Claus) உருவங்களை திரிசூலம், கம்பி, கடப்பாரை மற்றும் கட்டைகளால் தாக்கி சேதப்படுத்தியவர்கள் – பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர்! காவல்துறையினர் இந்த அராஜக செயலை வேடிக்கை பார்த்தனரே தவிர தடுத்து நிறுத்தவில்லை.
கிறிஸ்துமஸ் நாளன்று சத்தீஸ்கரில் இந்துத்துவ அமைப்புகள் மதமாற்ற எதிர்ப்பு என்று கூறி, முழு அடைப்பு அறிவிப்பு விடுத்தது! இதனை அடுத்து சிறுபான்மையினர் நடத்திய கடைகள்மீது பல தாக்குதல்கள் நடந்தன!
சத்தீஸ்கர் கன்கர் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள், மற்றும் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடங்கள் குறிவைக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் தேவாலயங்களின் மீது கற்களை வீசியதுடன், சில இடங்களில் தீ வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் மேரீஸ் பள்ளியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீ வைத்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாபோன்று வேடமிட்ட குழந்தைகளின் முகமூடி மற்றும் தொப்பிகளைப் பறித்து தீ வைத்துக் கொளுத்தினர். குழந்தைகளின் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரேலி உத்தரப்பிரதேசத்தில் பல கிறிஸ்தவ ஆலயங்களின் முன்பு பஜனை பாடினர்.
தேவாலயத்திற்கு வெளியே கிறிஸ்துமஸ் குல்லாய்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களிடம் சென்ற அந்த கும்பல், அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியுள்ளது. “இங்கு இந்துக்கள் யாரும் இது போன்ற பொருட்களை வாங்கக் கூடாது” என்று கூச்சலிட்டதோடு, விற்பனையாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
2025-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் இடையூறுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான், ஒடிசா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் இந்த பதற்றம் அதிகமாகக் காணப்பட்டது.
விஸ்வ இந்து பரிஷத் (VHP) விடுத்த அழைப்பு ஆபத்தானது.
இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கூடாது என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிப்பதற்கும், பொது இடங்களில் கொண்டாட்டங்கள் நடத்துவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
“இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் இத்தகைய அச்சுறுத்தல்கள் அமைவதாகவும், மத சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்’’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா என்பது ஒரு நாடல்ல – ஒரு துணைக் கண்டம்! பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட பல மாநிலங்களின் ஒன்றியம்!
இதனை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியா இந்து நாடு மட்டும் தான் என்று கூச்சலிட்டு வன்முறையைத் தூண்டினால், துணைக் கண்டம் சிதறுண்டு போகும் – அதற்குக் காரணம் இந்துத்துவா என்பதைத் தூக்கிப் பிடிக்கும் வலதுசாரிகளே!
