சென்னை, டிச.27- ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.
புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங் களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்களுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விசயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் மட்டும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் காவல் துறையினர் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 காவல் துறையினர் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடற்கரையிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப் படுகின்றனர். இதுதவிர கடற்கரை ஓரத்தில் நீச்சல் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
மெரினா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்க காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று, சாகசம் செய்வதை தடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
‘பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு புத்தாண்டு கொண் டாட்டங்களுக்கு காவல் துறையினர் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித் துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
சாலையின் நடுவே ‘கேக்’ வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
