தி.க. கல்யாணமே வேண்டாம்!-வி.சி.வில்வம்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இருங்களாகுறிச்சி  கிராமத்தில் பிறந்தவர் வி.சிவசக்தி. தம் இளம் பருவத்தில், “உங்கள் கொள்கையும் வேண்டாம்; உங்கள் சுயமரியாதைத் திருமணமும் வேண்டாம்”, எனத் ‘தைரியமாக’ முடிவெடுத்தவர். பிந்தைய காலங்கள் அவருக்கு எப்படி அமைந்தன. இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதை அவரிடமே கேட்போம், வாருங்கள்!

“திராவிடர் கழகத்தின் சுயமரியாதைத் திருமணமே வேண்டாம்”, எனச் சொன்னீர்களாமே?

ஆமாம்! நாங்கள் பக்திக் குடும்பம், சாஸ்திர, சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். வீட்டில் யாருக்காவது நினைவு நாள் என்றால், எங்கள் நினைவுக்கு வருவது பார்ப்பனர்கள் தான். அவர்களை அழைத்துத் “திதி” கொடுத்து, அவர்களுக்கும் பை நிறைய பொருட்கள் கொடுத்து, கும்பிட்டு வழி அனுப்புவோம். அப்படியான ஆன்மிகம்  எங்களுடையது.

அப்படி இருக்கும் போது, எனது திருமணத்தில் சடங்குகள் கிடையாது, குறிப்பாக அய்யர் கிடையாது என்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. எனது பாட்டி மற்றும் பெற்றோர் இந்தத் திருமணத்தையே நிறுத்திவிடலாம் எனத் திட்டம் தீட்டினார்கள். பிறகு நெருங்கிய உறவினர் ஒருவர் கூறிய சமாதானம் மற்றும் நம்பிக்கைகளை வைத்து, உடன்பட்டோம்.

பிறகு திருமணம் எப்படி நடைபெற்றது?

02.11.1998 அன்று ஆசிரியர் தலைமையில் அரியலூரில் நடைபெற்றது. இந்தச் சுயமரியாதைத் திருமணத்தை, என்னுடைய திருமணத்தில் தான் முதலில் பார்த்தேன். ஆசிரியர் அவர்களையும் அங்குதான் முதலில் சந்தித்தேன். எனக்கு எல்லாமே அங்கு வியப்பாக இருந்தது. எனினும் அடுத்த நாளில், எனது இணையர் என்னுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார்.

“நான் இயக்கக் கூட்டங்களில் கலந்து கொள்வேன், கடவுள், மதச் சடங்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை நீங்கள் எதற்கும் வற்புறுத்தக் கூடாது; அதேநேரம் நீங்கள் கோயிலுக்குப் போங்கள், பிடித்ததைச் செய்யுங்கள். நான் தலையிட மாட்டேன்,” என்றார்.

அந்த வார்த்தைகள் என்னை ஈர்ப்பதாக இருந்தன. கொள்கைகள் கடினமாக இருந்தாலும், பெரியாரிஸ்டுகளின் அணுகுமுறைகள் குடும்பங்கள் முதல் சமூகம் வரை பெரும் பெயரை ஈட்டி வைத்துள்ளன.

எனினும் பக்தியை நான் விடவில்லை. பிள்ளைகளுக்குக் காது குத்தி, மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறினேன். தாராளமாக செய்யுங்கள் என்றார் இணையர். கோயிலில் வைத்து எனது பெற்றோர், உறவினர்களை வைத்து நடத்தினேன். பல உதவிகள் செய்த இணையர், நிகழ்விற்கு மட்டும் வரவில்லை.

பிற்கால வாழ்க்கை எப்படிப் போனது?

எனக்கே ஒரு மாதிரியாய் ஆகிப்போனது. கொஞ்சம், கொஞ்சமாகத் திராவிடர் கழகக் கொள்கைகள் தெரிய வந்தன. பிறகு நானாகவே புரிந்து கொண்டு கொள்கைகளை ஏற்கத் தொடங்கினேன். கோயில் பயணங்கள் குறையத் தொடங்கின, சடங்குகள் சரிய ஆரம்பித்தன. இதற்கு மாற்றாக இயக்கக் கூட்டங்களில் இணைய முற்பட்டேன். அதுவே இன்றைக்கு வாழ்வியலாக மாறிப் போனது.

மாவட்ட, மாநில நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பாலும் சென்றுவிடுவேன். மாநாடுகள் என்றால் சிறுகனூர்  மாநாடு, செஞ்சி பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா மாநாடு, அரியலூர் இளைஞரணி மாநாடு, செந்துறை ஜாதி ஒழிப்பு மாநாடு, திருச்சியில் நடைபெற்ற உலகப் பகுத்தறிவாளர் கழக மாநாடு, செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாடுகள் எனப் பலவற்றிலும் கலந்து கொண்டுள்ளேன்.

நீங்கள் பணியில் இருப்பதாக அறிந்தோமே?

ஆமாம்! ஆசிரியராக இருக்கிறேன்.

செந்துறை அருகில் நக்கம்பாடியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் அமர்ந்து, செந்துறைக்கு மாற்றலாகி, அயன்தத்தனூர் பள்ளியில் பட்டதாரி கணக்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, பின் மருவத்தூர் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர் என்கிற இடத்திற்கு வந்துள்ளேன். பொதுவாக என்னை “திக டீச்சர்” என்று அழைப்பார்கள். ஒரு தலைமையாசிரியர் தினமும் பள்ளியில் கடவுள் வழிபாடு செய்வார். இது சமய சார்பற்ற இடம், இப்படி செய்யக்கூடாது எனச் சுட்டிக் காட்டினேன்.

மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான செய்திகளையும் கூறி, விழிப்புணர்வு பணிகள் செய்து வருகிறேன். பள்ளிகளின் நிர்வாகத்தினரின் அனுமதி பெற்று, பெரியார் ஆயிரம் போட்டியையும் சிறப்பாக நடத்தி வருகிறோம்.

எங்களுக்கு தமிழருவி, இளமதி என இரண்டு பிள்ளைகள். ஒருவர் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டார், மற்றவர் படித்துக் கொண்டிருக்கிறார். இயக்கத்தில் அரியலூர் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளராக இருந்து வருகிறேன்.

ஒரு பள்ளி ஆசிரியராக,
“தமிழ்நாட்டின்” ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

பெரியாருக்குப் பின் இந்த இயக்கத்தை உலகமயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் ஆசிரியர் அவர்கள்! ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பிறந்தநாள் டிசம்பர் 2, ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 இல் பெரியார் திடல் சென்றுவிடுவோம். விடுதலை நாளிதழுக்குச் சந்தா சேர்த்துக் கொடுக்கும் பணிக்காக அய்யாவின் பாராட்டைப் பெற்றுள்ளேன்.

அரசியல், சமூகம், பொருளாதார நிலைகளில் தமிழ்நாடு தனித்துவமாக விளங்க, நமது கொள்கைப் பிரச்சாரத்திற்கு  முக்கியப் பங்குகள் இருக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் பெரியார் கொள்கைகளை, அரசாணைகளாகச் செயல்படுத்தி வருகிறார். அதற்கு ஆசிரியரின் ஓய்வறியா உழைப்பே காரணம் என்றால் அது மிகையல்ல!

அதேபோல பெரியார் கொள்கைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாக, திருச்சி சிறுகனூரில் அமைந்து வரும்  “பெரியார் உலகம்” ஒரு வரலாற்றுப் பெட்டமாக உருவாகி வருகிறது!

ஆசிரியரின் எளிமையும், பழகுவதில் உள்ள இனிமையும் எதற்கும் இணையில்லை. அய்யாவின் பேச்சுகள் கருத்தாழம் மிக்கவை. இந்தச் சமூகத்திற்குப் பெரியாரின் கருத்துகள் எப்படி பயன்பட்டன என்பதை, ஆசிரியர் பேசப், பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பெரியாரை நான் படித்து அறிந்ததை விட, ஆசிரியரின் பேச்சில் கேட்டு மகிழ்ந்ததே அதிகம்.

நமது பிரச்சாரங்களுக்குச் சமூக வலைத் தளங்களின் பங்கு மிக முக்கியமாக இருந்து வருகிறது.  பெரியாருக்கு எதிராக ஏதேனும் கருத்துகள் வந்தால், உடனடியாக எதிர்வினை ஆற்றும் கருப்புச் சட்டைப் படைகளை ஆசிரியர் உருவாக்கி வைத்திருக்கிறார். இயக்கம் மேலும், மேலும் வலிமையோடும், பொலிவோடும் இயங்கி, சமூகத்தைக் காத்து நிற்கிறது என வி.சிவசக்தி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *