மனிதனின் அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் சமூகக் கட்டுப்பாடுகளால் அடிமை வாழ்வு வாழ்ந்த அந்தர் ஜனங்கள் மீது தரவாடுகளில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய கொடுமை பாலியல் கட்டுப்பாடுகள்தான். ஒவ்வொரு தரவாட்டிலும் (இல்லங்களிலும்) பல அந்தர் ஜனங்கள் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் கன்னியராகவே இருந்து, முதிர் கன்னிகளாகி, கிழவிகளாக முதிர்ந்து மரணமடையும் நிலையே இருந்தது.

திருவாங்கூர் நாட்டில் (கேரளத்தில்) பெரும் செல்வந்தர்களாக, நிலக்கிழார்களாக நம்பூதிரிப் பார்ப்பனர்களே இருந்தனர். நாட்டின் மன்னர்கள் கூட அவர்களைக் கேள்வி கேட்க முடியாது. எந்தவிதக் குடும்பப் பற்றும் இல்லாமல், பக்தியோடு மட்டுமே வாழ வேண்டும் என்றும், வேதங்கள் ஓதுவதும், யக் ஷம்கள் செய்வதும், கோயில் அர்ச்சகர் பணிகள், திருவிழாக்கள், பூசைகள், யாகங்கள் என்பவை மட்டுமே முக்கிய வாழ்வியல் கடமைகளாக ஆண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இல்லற வாழ்வென்பதே, அந்தக் குடும்பத்தின் வாரிசாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். அந்தர் ஜனத்திற்கு பாலியல் உறவு என்பதே உணர்ச்சியைத் தணிக்க என்றில்லாமல், கடமைக்காக என்றே ஆகிப் போனது. நம்பூதிரிப் பார்ப்பனர்களின் தரவாடுகளில் இன்னொரு பெரும் கொடுமை அந்தர் ஜனங்களில் நிகழ்த்தப்பட்டது.
நம்பூதிரிக் குடும்பங்களில் முதல் மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்ணைத் (அந்தர் ஜனத்தை) திருமணம் செய்து கொள்ள முடியும். மற்ற ஆண் பிள்ளைகள் யாரும் அந்தர் ஜனத்தைத் திருமணம் செய்து கொள்ள ஜாதிய சட்டங்கள் அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் பெரும் சொத்துகள் பிரிந்து, அந்த இல்லத்தின் ‘செல்வச் செருக்கு’ குறைந்து விடக் கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு. இல்லத்தின் ஆண் பிள்ளைகள் அனைவரும் அந்தர் ஜனங்களைத் திருமணம் செய்து கொண்டால் வாரிசுகள் சொத்தைப் பிரித்து விடுவார்கள் என்பதால், முதல் ஆண் பிள்ளை தவிர மற்றப் பிள்ளைகள் அந்தர் ஜனங்களைத் திருமணம் செய்து கொள்ளத் தரவாடுகளில் தடை இருந்தது. ஒருவேளை முதல் பையனுக்கும், அந்தர் ஜனத்திற்கும் குழந்தை பிறக்காமல் இருந்தால், தரவாட்டின் தலைவர் அச்சன் நம்பூதிரியின் அனுமதியுடன், நம்பூதிரியின் இரண்டாம் மகன் அந்தர் ஜனத்தோடு உறவு கொள்ளலாம். இதுபோன்று நிகழ்வது தொடர்ச்சியான நிகழ்வாகப் பொதுவாக அமையாது.
திருமணத்தன்று அந்தர் ஜனம், அந்த இல்லத்து ‘சிறிய தம்புராட்டி’ (சின்ன முதலாளியம்மா, அச்சன் நம்பூதிரிப் பார்ப்பனரின் மனைவியை ‘தம்புராட்டி’ என்றும், ‘அகத்தம்மா’ என்றழைக்கப்படுவார்.) சரிகைப் புடவையைக் கசங்க உடுத்துத் தோடும், சிறுதாலியும் (‘சிற்றும், சிறுதாலியும்’ என்று சொல்வது கேரளத்து மரபு) அணிந்து, வெண்கல வளை பூட்டி வாழ்க்கைப் படப்போகும் புக்ககம் வருவார். அதைக் கொண்டாட நாதசுரம் வாசிப்பும், செண்டை மேள வாத்தியமும், குரவை ஒலியும் கூட எழுப்பப்படும். மணவாளன் தட்டுச் சுற்றி வேட்டிக் கட்டி மேல் துண்டு அணிந்து முன்னால் நடந்து வருவார். பின்னால் நெருக்கியடித்து, ஓலைக்குடையை ஏந்திவரும் கூட்டத்தில் குடைக்குள் முகூர்த்தப்பட்டு மூடிய மணப்பெண், மருதாணி இட்டக் கால்களால் அடிமேல் அடி எடுத்து வைத்து வருவார். மங்கல மந்திரங்கள் ஒலிக்க, ஆரவாரங்களுக்கிடையே, குரவை ஒலிச் சத்தம் பெண்கள் எழுப்ப, வேதம் ஓதும் நம்பூதிரி பார்ப்பனர் “குல தெய்வத்தை நல்லபடியாய் கும்பிட்டு வலது காலை எடுத்து வீட்டுக்குள் வையுங்க” என்று சொல்ல மணவாளனும், அந்தர் ஜனமும வாசலில் காலடி வைக்க “ஆறாப் பூவே… பூய்… பூய்…, குலுகுலுகுலுகுலு” என்ற ஒலியோடு, ஆரத்தித் தட்டெடுத்து பெண்கள் இரண்டு வரிசையில் நின்று செத்திப் பூவையும், மற்ற மலர்களையும் மழை பொழிவது போல் எடுத்து வீசுவார்கள். அரிசி மாக்கோலம் போட்டு நிறை நாழியும், குத்து விளக்கும் வைத்த நடு முற்றத்தில் ஆசனப் பலகைப் போட்டு அதில் மணமக்கள் அமருவார்கள். சுமங்கலிப் பெண்கள் அரிசியும், பூவும் தலையில் தடவி இடுவார்கள். இனிப்புகள் ஊட்டுவார்கள். அந்தர் ஜனம் இல்லத்தின் முதல் மகனை மணந்த ‘சிறிய தம்புராட்டி’யாக, அந்த இல்லத்து பெண்ணானார். (Ref: “அக்கினி சாட்சி” by லலிதாம்பிகா அந்தர்ஜனம்).
திருமணம் ஆனாலும் மணவாளன் (மாப்பிள்ளை) மணப் பெண்ணான அந்தர் ஜனத்தை சந்திப்பது என்பது எப்பொழுதாவதுதான் தனிமையில் நடக்கும். இல்லத்து விஷேசங்கள், கோயில் திருவிழாக்கள், யாகங்கள், சாஸ்திர சடங்குகள், ஆசார, அனுஷ்டானங்கள் என்ற பெயர்களில் அந்த இல்லத்தில் வலதுகாலை எடுத்து வைத்து வந்த அந்தர் ஜனம் மற்றொரு அடிமை வாழ்விற்குள்தான் நுழைவார். சமையல் கட்டிலும், பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபடும் நம்பூதிரிகளின் பூஜைக்கான ஆயத்தங்கள் செய்வது போன்றவையே அந்த அந்தர்ஜனம் தினசரி கடமையாக ஆனது. ஓர் அந்தர் ஜனம், அவர் புகும் இல்லத்தில் எந்தவித தனி சுதந்திரமோ, தனியுரிமையோ இன்றி மற்ற அந்தர் ஜனங்களோடு மட்டும் உறவாடுவதோ, பேசுவதோ நிகழும் நிலைக்குத் தள்ளப்படுவார்.
அந்த அந்தர்ஜனத்திற்குக் கல்வி உரிமையோ, கலைகளைக் கற்கும் உரிமையோ எதுவும் கிடையாது. மொத்தத்தில் ஓர் அடிமை வாழ்க்கைதான் அந்த அந்தர் ஜனத்திற்குப் புக்ககத்தில் அமையும் வாழ்க்கை.
நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே அந்தர் ஜனத்தைத் திருமணம் செய்ய முடியும். அந்தர் ஜனங்கள் நம்பூதிரிப் பார்ப்பனர்களையே திருமணம் செய்து கொள்ள முடியும். ஓர் ஊரில், 20 நம்பூதிரிக் குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு தரவாட்டிலும் 5 ஆண்கள், 5 பெண்கள் (அந்தர் ஜனங்கள்) இருப்பதாக வைத்துக் கொண்டால் முதல் மகன்களான நம்பூதிரிப் பார்ப்பனர்கள் இருபது பேர். மீதியுள்ள 80 மகன்கள் நம்பூதிரிப் பெண்களோடு திருமணம் செய்து கொள்ள முடியாது. அந்த 80 மகன்களும் நாயர் பெண்களோடு உறவு கொள்ள ஜாதிய சட்டங்கள் அனுமதித்தன. சேலை கொடுத்து அந்த நம்பூதிரி இளைஞர்கள் ‘சம்பந்தம்’ முறையில் நாயர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
நாயர் பெண்களோடு உறவு வைத்துக் கொண்ட நம்பூதிரி ஆண்கள் அந்தப் பெண்கள் குடும்பத்தில் எந்த உரிமையும் கோர மாட்டார்கள். அந்த உறவினால் பிறக்கும் குழந்தைகளின் முன்னெழுத்துக்கூட அந்த உறவுக்குக் காரணமான நம்பூதிரிப் பார்ப்பனர் பெயராக இருக்காது. பெயர்களோடு, குடும்பப் பெயர் போட இதுவே முக்கியக் காரணமாக அமைந்தது.
அந்த நம்பூதிரி தரவாடுகளில் 20 ஆண்கள், 20 அந்தர் ஜனத்தைத் திருமணம் செய்து கொள்ளலாம். மற்ற ஆண்கள் நாயர் பெண்களோடு உறவு கொள்ளலாம். ஆனால், நம்பூதிரிப் பார்ப்பனர்களைத் தவிர வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கடுமையான சட்டத்தில் மாட்டிக் கொண்ட அந்த தரவாடுகளில் இருக்கும் 80 அந்தர் ஜனங்கள் நிலையென்ன?
இதனால் தரவாடுகளில் இருக்கும் முதல் மகன் குறைந்தது அய்ந்து அந்தர் ஜனங்களைக் கூட திருமணம் செய்து கொள்ளும் கொடுமை சாதாரணமாக நடந்தது. இதன் விளைவாக 8 – 10 வயது அந்தர் ஜனப் பெண்கள் 60 – 65 வயது நம்பூதிரிப் பார்ப்பனர்களைக் கூட திருமணம் செய்து கொள்ளும் கொடுமை நடந்தது. இந்தத் திருமணங்களில் வரதட்சணையும் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு சில அந்தர் ஜனங்கள் கிழட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, ஒரு சில ஆண்டுகளிலேயே கணவர்களை இழந்து, கைம்பெண்களாகி மேலும் பல சமூகக் கொடுமைகளுக்கு ஆளானார்கள். பல அந்தர்ஜனங்கள் தரவாடுகளில் திருமணமே ஆகாமல் கன்னிகளாகவே இருந்து, கிழவிகளாகி மரணத்தைத் தழுவும் கொடுமையும் சாதாரணமாக நடந்தது. இறந்த அந்தர் ஜனங்கள் கன்னித் தன்மை இழக்காமல் மரணமடைந்தால் “குல சாபம்” ஏற்பட்டு விடுமாம். அந்த குல சாபம் நீங்குவதற்காக மரணமடைந்த அந்தர் ஜனத்தின் பிணத்தோடு கீழ்ஜாதிக்காரர் (நாயாடிகள்) உடலுறவு கொள்ள வேண்டும். ‘நீசர்’கள் பிணத்தோடு உறவு கொள்வதால் இதற்கு “நீசகர்மம்’ என்று பெயர். இதன்மூலம் அந்த தரவாட்டின் “தோஷம்’ நீங்குமாம். “தோஷ பரிகாரம்” என்ற பெயரில் இந்தக் கொடுமை எல்லா தரவாடுகளிலும் நடந்தது.
நாயர் பெண்களோடு முதல் நம்பூதிரி மகன் தவிர மற்ற நம்பூதிரிகள் உறவு கொண்டதால் நாயர்கள் சமூக செல்வாக்கு உயர்ந்தது. அவர்களுக்கு “படை நாயர்” என்ற பட்டத்துடன் பதவியும் கிடைத்தது. படை நாயர் வீட்டுப் பெண்களுடன் அரசர்களும், வளம் படைத்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் மட்டுமே உறவு வைத்துக் கொண்டனர். இதன் மூலம் படை நாயர் தண்டனை கொடுப்பதற்கும், கொலை செய்வதற்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். நாயர் பெண்களோ நம்பூதிரிப் பார்ப்பனர்கள் உறவுக்காகக் காத்திருக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகிப் போனார்கள். இதுதான் இயல்பான வாழ்க்கை என்ற மூளைச் சலவைக்கு ஆளான நாயர் பெண்கள் வசதியும், அதிகாரமும் கொண்ட தம்புராண்களோ, நம்பூதிரிகளோ, சத்திரியர்களோ வருவார்கள் என்று காத்திருக்கும் சூழ்நிலை திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவியது. நல்ல உறவுவேண்டும் என்பதற்காக நாயர் பெண்கள் கடவுளின் திருநாமம் ஜபிப்பதிலும், அதிகாலை வழிபாடு (நிர்மால்யம்) செய்வதிலும் காலம் கழித்தனர்.
இப்படி கீழ்ஜாதிப் பெண்களை பாலியல் சுரண்டல்கள் செய்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பொதுவாக பார்ப்பனப் பெண்கள் உள்பட அனைத்துப் பெண்களையும் சீரழித்தனர். நாயர் பெண்கள் மட்டுமின்றி அதற்கும் கீழ் உள்ள சூத்திர ஜாதிப் பெண்கள் மேலும் அவர்களுக்கு பாலியல் உரிமை உண்டு.
இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் அடிப்படை பெண்கள் நான்கு வருணத்திலும் சேராத “அவர்ணஸ்”த்தார்கள் (Outcaste) தான் என்று நம்பூதிரிப் பார்ப்பனர்கள் நினைப்பதுதான். பார்ப்பனப் பெண்களான அந்தர் ஜனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. (Ref: “தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” Sat: 7.2017 “அந்தர்ஜனம் பரிதாபத்துக்குரிய நம்பூதிரிப் பெண்கள்”)
(தொடருவேன்…)
