சென்னை, டிச. 26- தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலி்ல் பெயர் சேர்க்க 1.69 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 1,211 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த நவ.4ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் வீடு வீடாகக் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு கடந்த டிச.14ஆம் தேதி வரை பூர்த்தி செய்து பெறப்பட்டன. இதையடுத்து, டிச.19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் 5.43 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிகள் டிச.19ஆம் தேதியிலிருந்தே தொடங்கியது. இதற்கு ஜன.18ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாக்காளர் பட்டியலி்ல் பெயர் நீக்கப் பட்டவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும், ஏற்கெனவே நீக்கப்படாதவர்கள் நீக்கவும், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் மற்றும் இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுதவிர, தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் 2.64 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர்கள் சேர்ப்பு, ஆட்சேபம் தெரிவித்து நீக்குவதற்கான மனுக்களை அளித்து வருகின்றனர்.
பொதுமக்களைப் பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-அய் நேற்று முன்தினம் (24.12.2025) இரவு வரை 1,68,825 பேரும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-அய் 1,211 பேரும் அளித்துள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் பெயர் சேர்க்க 59 விண்ணப்பங்கள், பெயர் நீக்க 53 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக சார்பில் அதிக அளவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கை அனுப்பப்பட்டதா?
இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் வாக்கா ளர்களுக்கு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக நேற்று (25.12.2025) தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கேட்ட போது, ‘‘எஸ்அய்ஆர் கணக்கெடுப்பு பணியில் பெறப்பட்ட படிவங்களில், முறையாக பூர்த்தி செய்யாதவர்கள், குறிப்பாக 2002, 2005 வாக்காளர் பட்டியலில் வாக்காளர் அல்லது அவர்களின் பெற்றோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்த விவரங்கள் குறிப்பிடாமல் இருந்தால், அவர்களிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பும்படி தேர்தல் ஆணையம் இதுவரை சொல்லவில்லை.
இனிமேல் அறிவிக்கை அனுப்பி விசாரிக்க சொல்லுமா என்பதும் தெரியாது. முறையாக பூர்த்தி செய்யாமல் வழங்கிய படிவங்கள் தொடர்பான தரவுகளையும் நாங்கள் சேகரிக்கவில்லை’’ என தெரிவித்தனர்.
