திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உதயகுமார் உள்பட இருவர் உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில் யானைப் பாகனின் மகள்கள், யானை தெய்வானையிடம் செய்த செயல் மூடத்தனத்தின் உச்சமாகும்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் வந்து போவார்கள். அதிலும் சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை உள்ளிட்ட நாள்களில் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும்.
இந்த கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் யானைக்காக ஒரு குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி மதியம் 3 மணியளவில் யானை இருந்த இடத்தில் இருந்து பயங்கர சத்தம் வந்தது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் போய் பார்த்தனர். அப்போது யானைப் பாகன் உதயகுமாரும், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரும் யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கிடந்தனர்.
இருவரையும் மீட்ட கோயில் நிர்வாகத்தினர் உடனே அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்ெகனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த யானை 2006 ஆம் ஆண்டு முதல் திருச்செந்தூர் கோயிலில் இருந்து வருகிறது. கடந்த 18ஆண்டுகளில் ஒரு முறை கூட யாரிடமும் கோபத்தைக் காட்டாத யானையாம். திடீர் என்று மதம் பிடித்துப் பாகன் உள்பட இருவரைத் தாக்கிக் கொன்றது.
இதையடுத்து வனத்துறையினரும், கால்நடைப் பராமரிப்புத் துறையினரும் வேறு பாகனின் உதவியுடன் யானையைப் பராமரித்து உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். யானைக்காக சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு யானை இருந்த மண்டபத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டதாம்.
உதயகுமாரும் சிசுபாலனும் இறந்து ஓராண்டு ஆன நிலையில், யானைப் பாகன் உதயகுமாரின் மகள்கள் அக்ஷரா, அகல்யா ஆகிய இருவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தனர். அங்கு யானை தெய்வானை இருக்கும் இடத்திற்குச் சென்று அதற்குத் தர்பூசணி, பலாப்பழம், கரும்பு, ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழை உள்ளிட்ட பழங்களைக் கொடுத்தனராம்.
தந்தையைக் கொன்ற யானைக்கு படையலும் – மரியாதையுமாம்!
எப்படி இருக்கிறது? தன்னை வளர்த்தெடுத்த பாகனை அந்தக் கோயில் யானை அடித்துக் கொன்றதை. அந்த சுப்பிரமணிய சாமியும் தடுக்கவில்லை.
இவ்வளவு நடந்த பிறகும், தன்னுடைய தந்தையாரை அடித்துக் கொன்ற யானைக்கு, அவரது மகள்கள் ஓர் ஆண்டு முடிவில் பழங்கள் கொடுத்தார்களாம்! யானையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வேறு வாங்கினார்களாம்!
‘‘பக்தி வந்தால் புத்தி போகும்’’ என்று தந்தை பெரியார் கூறுவது எத்தகைய உண்மை என்பதை இப்பொழுதாவது உணரட்டும்!
மதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து! மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்தே!!
