‘‘தோழர்களே! துணிவு கொள்ளுங்கள்!
சாகத் துணிவு கொள்ளுங்கள்!
உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும் மானத்தையும் விட்டு
தொண்டாற்ற துணிவு கொள்ளுங்கள் ..
இதுதான் இன்றைய திராவிடர் வாலிப கழக ஆண்டு விழாவில், இனி வெகு காலம் வாழப் போகும் மக்களாகிய உங்களுக்கு, சாகப் போகும் கிழவன் ஆகிய நான் வைத்து விட்டுப் போகும் செல்வமாகும்.’’
‘குடிஅரசு’ இதழில் தந்தை பெரியார் அவர்களின் இந்த பேச்சு வந்த ஆண்டு 1945 – அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களின் வயது 66. அதற்கு மேலும் 27 ஆண்டுகள் அவர் வாழ்ந்திருந்தார்.
அதே நேரத்தில் அன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்கள் வயது 12. பொது வாழ்க்கைக்காக தன்னுடைய உயிரையும் விட துணிவு கொண்ட சிறுவனாக வாழ்க்கையைத் தொடங்கிய தமிழர் தலைவர் அவர்கள் இன்றைக்கு 93 வயதிலும், அதே துணிவோடும், கொள்கை யோடும் விளங்கிக் கொண்டிருப்பவர் தமிழர் தலைவர்.
16 வயதிலேயே
இந்த கால கட்டத்திற்கெல்லாம் முன்பாகவே தனது 16 வயதிலேயே, Adoloscelent age என்று சொல்லப்படுகின்ற காலத்தில்,
‘விடலைப் பிள்ளைகள் வைத்த வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று சொல்லப்பட்ட காலத்தில், அன்றைக்கு பேறிஞர் அண்ணா அவர்களுக்குத் தோன்றாத தொலைநோக்குச் சிந்தனை, உடம்பு முழுவதும் மூளை என்று சொல்லப்பட்ட ராஜகோபால் ஆச்சாரியர் அவர்களுக்குத் தோன்றாத தொலைநோக்கு சிந்தனை, தமிழர் தலைவர் அவர்களுக்கு, அவர்களுடைய 16 வயதிலேயே இருந்ததினால், அய்யா – அம்மா திருமணத்துக்கு பின்பும் தந்தை பெரியாரை விட்டுச் செல்லவில்லை.
அய்யா அவர்கள் போட்டுத் தந்த பாதையில் அவருக்குப் (தந்தை பெரியாருக்குப்) பின் அன்னை மணியம்மையார் தலைமையில், பொதுச் செயலாளராக ஆசிரியர் அவர்கள் பணியாற்றினார்கள்.
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு – இவை இரண்டும் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைக் கண்களாக, அவர் காட்டிய வழித்தடத்தில் தமிழர் தலைவர் செல்கிறார் என்பதற்கு முதல் அடையாளமான வரலாறு என்பது, அன்னை மணியம்மையாரின் மறைவுக்கு பின், அவர்களின் வீர வணக்க நாளை 28/3/78 அன்று சென்னை கடற்கரை சீராணி அரங்கில் சர் ராஜா முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டமாக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வந்து பேச வைத்து பெருமைப்படுத்திய அந்த வரலாறு என்பதை பதிவிடுகிறோம்.
பெண்ணுரிமை மாநாடுகள்
தமிழர் தலைவர் அவர்களின் காலகட்டத்தில் நடத் தப்பட்ட, குறிப்பிடத்தக்க பெண்ணுரிமை மாநாடுகள் ஏராளம். அண்மைக் காலத்திலேயே,
10.3.2012 – அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா.
‘Women and humanism’ என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழகம் சார்பாகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையில் பெரியார் திடலில் ஆங்கில உரையில் பெண்ணுரிமை கருத்தரங்கம் ..
17.12.2016 – திருவாரூரில் ஒரு மாபெரும் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு.
27.5.2017– திருச்சியில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு,
6.5.2018 – கோவை வடக்கு மாவட்டம் கணியூரில் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு ..
10.3.2019 – வேலூரில் அன்னை மணியம்மையாருக்கு நூற்றாண்டு துவக்க விழா மாநாடு.
29.2.2020 – நாகை கிழக்கு மாவட்டம் கீழ்வேளூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மாநாடு,
மார்ச் 2020இல் – சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா நிறைவு மாநாடு,
வேலூரில், கோவையில், நாகப்பட்டினத்தில் புரட்சிப் பெண்கள் மாநாடு மற்றும் பெண் உரிமை மாநாடுகள் – என்று நடைபெற்ற பெண்ணுரிமை வரலாற்றுப் பக்கங்கள் தமிழர் தலைவர் அவர்கள் காலகட்டத்திலே தான்.
பெண்ணுரிமை போராட்டத் தளங்களிலே
நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக ஆர்ப்பாட்டங்கள்,
ஏப்ரல் 2010இல் தமிழ்நாட்டிற்கு சிகிச்சைக்காக வந்த பிரபாகரன் தாயார் அம்மையாரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கூட்டம் ..
‘‘பெண்கள் வேத மந்திரங்கள் சொல்லக்கூடாது’’ என்று ஆணவமாகக் கூறிய பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து அவரது கொடும்பாவியை எரித்து மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக போராட்டம்.
டில்லியில் பாலியல் வன்முறைக்குப் பலியான நிர்பயா கொலையைக் கண்டித்து சென்னை பெரியார் திடலில் கண்டன கூட்டம்.
பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்தும், மல்யுத்த விளையாட்டுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து, பிரிஜ் பூஷன் சிங்கை நீக்க வேண்டும் என்றும் டில்லி தலைநகரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கண்டனப் பொதுக்கூட்டம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மாதவிடாய் காலத்தில் உள்ள மகளிரை அனுமதிக்க கூடாது என்று இந்து முன்னணி பரிவாரங்களைக் கண்டித்தும் மகளிர்க்கு அனுமதி வழங்கிய கேரளா அரசைப் பாராட்டியும், தமிழர் தலைவரின் அறிக்கைகள்.
காஞ்சிபுரத்தில் மகளிர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்,
பெண்ணுரிமைகளுக்காகவும், பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை கண்டித்தும், போராட்டக்களங்களில் மகளிர் பங்கேற்ற வரலாறும் தமிழர் தலைவர் அவர்களின் காலகட்டத்தில் தான்! அதில் மகளிர்க்கு பாராட்டும் ஆதரவும் கிடைக்கப் பெற்றோம்.
தன்னுடைய ஆட்சியில் பெண்ணுரிமைச் சட்டங்களை, திட்டங்களை முழுமையாக இயற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு “மகளிர் உரிமை காத்த மாண்பாளர் ” பட்டம்.
69 சதவீத இட ஒதுக்கீட்டு வரலாற்றுக்காக மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம்.
10.10.2025 – நடிகை மனோரமா அவர்களுக்குப் பெரியார் விருது கொடுத்து பெருமைப்படுத்தியது!
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதிபா பாட்டில் அவர்கள் குடியரசுத் தலைராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக, பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய பொழுது அவற்றைக் கண்டித்து அம்மையார் அவர்களுக்கு ஆதரவாக நின்றது..
அதேபோல ஒரு எதிர்பாராத சூழலில் ராப்ரிதேவி அம்மையார் முதலமைச்சர் ஆக பீகாரில் பதவி ஏற்றுக்கொண்ட பொழுது, அவர்களை யாதவ சமூகத்தவர் என்று கிண்டல் அடிக்கும் வகையில் ஊடகங்கள் எழுதியபோது, அவற்றைக் கண்டித்து ராப்ரி தேவி அம்மையார் அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை எழுதியது.
சென்னை அய்.அய்.டியில் பணிபுரிந்த பேராசிரியை வசந்தா கந்தசாமி அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது அளிக்கப்பட்ட போது அதனை பாராட்டி வாழ்த்திய தலைவர் தமிழர் தலைவர்.
எரித்தோம் மனுதர்மத்தை
10/3/2017 அன்னை மணியம்மையார் பிறந்த நாள் அன்று, பெண்களைக் காம இச்சை படைத்தவர்கள் என்றும்,சூத்திரர்கள் விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் என்றும் இழிவுபடுத்திய மனுதர்மத்தை எரித்து போராட்டம்.
நம் நாட்டிலேயே மனுதர்மத்தை எரித்த இரண்டு மாபெரும் தலைவர்கள் தந்தை பெரியார் அவர்களும், பாபாசாஹேப் அவர்களும் தான்.
அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்த தலைவர்கள் மட்டுமல்ல; சம கொள்கையில், ஒரே சமூக நீதி பாதையில் பயணித்த தலைவர்கள்.
இந்தியாவிலேயே அந்த இரு தலைவர்களையும் நம்முடைய இரண்டு தோள்களிலும் தூக்கி வைத்துப் போற்றி வருகின்ற ஒரே தலைவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தான்.
அண்மையில் தமிழர் தலைவர் அவர்கள் ‘விடுதலை’ இதழின் ஒரே பக்கத்தில், ஒருபுறம் பெரியாரைப் பேசுவோம்! என்றும் அண்ணல் அம்பேத்கரை அறிவோம்! என்று இன்னொரு புறமும் எழுதினார்கள் .
பெண்ணுரிமைக் களத்தில் ஆசிரியர் அவர்களின் தனிச்சிறப்பான அணுகுமுறைகள்
அய்யா அவர்கள் காலகட்டத்தில் இல்லாத மகளிர்க்கான தனி அணி தமிழர் தலைவர் அவர்கள் காலகட்டத்தில் அவரால் உருவாக்கப்பட்டது …
‘திராவிடர் கழக மகளிர் அணி’ என்றும் பின்னர் இந்த நூற்றாண்டில் ‘திராவிட மகளிர் பாசறை’ என்றும் இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டன ..
தலைமைச் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் அதிக அளவு மகளிரை நியமித்தார்கள் ..
திராவிடர் கழகத்தில் முதல் பெண் பொருளாளராக பிறைநுதல் செல்வி அவர்களையும், பிரச்சாரச் செயலாளராக வழக்குரைஞர் அருள்மொழி அவர்களையும், முதல் பெண் செயலவைத் தலைவராக வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களையும், இன்பக்கனி , மதிவதனி ஆகியோரைத் துணைப் பொதுச் செயலாளர்களாகவும் பொறுப்பு அளித்து பெருமைப்படுத்தியவர் தமிழர் தலைவர்.
வேறு யாரும் செய்ய முன்வராத பணியினைத் திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில், திராவிடர் கழகமும் ரோட்டரி சங்க அமைப்புகளும் இணைந்து நடத்திய விழாவில், தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தம்முடைய சிறப்புரையில் இன்றைக்கு மகளிர் நிறைய அளவில் வேலைக்குச் செல்வதற்கும் படிப்பதற்காகவும் வீட்டை விட்டு வெளியுலகத்திற்கு வரத் துவங்கியுள்ளார்கள்.
அவர்கள் இயற்கை அழைப்புகளுக்கு உள்ளாகிற அந்த நிலையில் நீண்ட தூரம் பயணிக்கும் நெடுஞ்சாலைகளிலும் பேருந்துகளிலும் மகளிர் கழிப்பறைகள் அமைப்பதற்கு, ரோட்டரி சங்க அமைப்புகள் போன்ற பொதுநல அமைப்புகள் முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகம் என்பது வேறு யாரும் செய்ய முன்வராத பணியினைச் செய்கின்ற இயக்கம் என்ற அடையாளம் என்ற வரலாற்றில் இது ஒரு அடையாளம் அல்லவா?
நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் மாண்புடைய பண்பு.
ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்கள் இல்லங்களுக்கு உணவருந்தச் செல்லுகின்ற நேரங்களில் உணவு அருந்தி முடிந்த பின் உணவு தயாரித்த மகளிர் தோழர்களையோ அல்லது மகளிர் இல்ல பணியாளர்களையோ அழைத்து நன்றி தெரிவித்து பாராட்டுவார்கள்.
நம் மகளிர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இவையெல்லாம் நம்முடைய தோழர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டான வாழ்வியல் நெறி.
வாழ்விணையரைப் பாராட்டுதல்
தமிழர் தலைவர் அவர்கள் பொது வாழ்க்கைக்கு த் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்.தன் உயிரையும் உடல் நலத்தையும் விலையாக வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் காரியம் எல்லாம் ஆசிரியர் அவர்களின் குடும்பம் தான். அதற்கு நாம் அந்தக் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒளிப்படக் கலைஞர் சிவகுமார் அவர்களின் இணையேற்பு விழாவில் தமிழர் தலைவர் தன்னுடைய வாழ்த்துரையில், “என்னுடைய உயிருக்கும் நிகரான என்னுடைய வாழ்விணையரை போல என்னுடன் பயணிக்கின்ற உடன் பணி தோழர்களும்,என் உயிருக்கு நிகரானவர்கள்’’ என்று பாராட்டினார்.
அம்மா மோகனா அவர்களை ஆசிரியர் அவர்கள் இது போல் நிறைய முறை பாராட்டி இருக்கிறார். தோழர்களுக்கு இதுவுமே ஒரு வழிகாட்டும் வாழ்வியல் நெறி ஆகும்.
ஆசிரியர் அவர்கள் கழகத் தோழர்கள் இல்லங்களுக்கு உணவருந்தச் செல்லுகின்ற நேரங்களில் உணவு அருந்தி முடிந்த பின் உணவு தயாரித்த மகளிர் தோழர்களையோ அல்லது மகளிர் இல்ல பணியாளர்களையோ அழைத்து நன்றி தெரிவித்து பாராட்டுவார்கள்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்னை பாராட்டிய ஒரு பெருமைமிக்க நிகழ்வை கூறி, என் உரையை நிறைவு செய்ய இருக்கிறேன்.
அண்மையில் 14.9.2025 அன்று தர்மபுரி வருகை தந்திருந்த தமிழர் தலைவர் அவர்கள் எங்கள் இணையேற்பு நாள் நினைவாக எங்களை பாராட்டி னார்கள் ..
அப்பொழுது “தோழர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கு இரண்டு வாழ்விணையர் ஒருவர் ஊ. ஜெயராமன்; இன்னொருவர் பொது வாழ்க்கை… என்று என்னை பாராட்டினார். என் இயக்க வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரும் பேறாக இதனை கருதுகிறேன். இதே போன்ற ஒரு பாராட்டை தோழர் திருமாவளவன் அவர்களுக்கும் தமிழர் தலைவர் வழங்கி இருக்கிறார்.. “திருமாவளவன் பொது வாழ்க்கையை மணந்தவர் .என்று அவர் பாராட்டி இருக்கிறார் ..
மிகுந்த மகிழ்வோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னை மணியம்மையார்! வாழ்க தமிழர் தலைவர்.
வளர்க பகுத்தறிவு.
மாநில கழக மகளிர் அணி செயலாளர்
தகடூர் தமிழ்ச்செல்வி தமிழர் தலைவர் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆற்றிய உரை (சென்னை, 1.12.2025)
