சென்னை, டிச 26 சவுகார் பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்தவர் ஷீலா ஜெயின் (28). இவரது கணவர் ஆனந்த் ஜெயின், சவுகார்பேட்டையில் மின்சாதனப் பொருட்கள் (Electric shop) கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (24.12.2025) மாலை, ஷீலா ஜெயின் மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த சாமியார் வேடமிட்ட இருவர், ஷீலா ஜெயினைத் தடுத்து நிறுத்தி, “உங்க ளுக்குத் தோஷம் உள்ளது. இந்தத் தோஷத்திற்கு உடனடியாகப் பரிகாரம் செய்யவில்லை என்றால் உங்களுக்கோ, உங்கள் கணவர் உயிருக்கோ ஆபத்து ஏற்படும்,” என்று கூறி மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களில் ஒருவர் விபூதி பூசுவது போல் ஷீலா ஜெயின் முகத்தில் மயக்கப் பொடியைத் தூவினார். இதில் அவர் மயக்க நிலைக்குச் சென்றதும், “உங்கள் நகைகளைக் கழற்றி இந்தப் பேப்பரில் வைத்துக்கொள்ளுங்கள்,” எனக் கூறி, அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளைப் பெற்று மடித்தது போல் பாசாங்கு செய்து கொடுத்தனர். ஷீலா ஜெயின் அந்த நகைகளைத் தனது கைப்பையில் வைக்க முயன்றபோது, நபர்கள் நகையைப் பறித்துக்கொண்டு தப்பினர். ஷீலா ஜெயின் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
