ஜெ.பாலச்சந்தர்
முனைவர்பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரி
“சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று – இதில்
பாதியை நாடு மறந்தால்
மீதி துலங்குவதில்லை”
திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராக விளங்கினார். அதன் காரணமாக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து உயர்வு தாழ்வு என்ற பேதத்தை ஏற்படுத்திய ஜாதியையும் ஜாதியை வலுப்படுத்தும் வருணாசிரம கோட்பாட்டையும் இதன் மூலமான ஹிந்து மதத்தையும் அதன் கடவுளர்களையும் மறுத்தும் தோலுரித்தும் தனது பாடல்களின் வழியாக பகுத்தறிவை ஊட்டினார்.
இந்தப் பாரினில் கண்ட புலவர்களெல்லாம் கற்பனை கவிதைகளுக்கும், கவிதைகளுக்கும் பொருள் கண்டே வந்தனர். ஆனால் முதல் முறையாக ‘கற்பனைகள் எல்லாம் எப்போது கடவுள் ஆனதோ அப்போதே மனிதன் முட்டாளாகிவிட்டான்” என்று பிரச்சாரம் செய்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் உரைக்கு (உரைநடைக்கு) கவிதை எழுதிய பெரும் புலவர் தான் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
இதன் காரணமாகவே பாரதிதாசனாரை பாவேந்தர் என அழைக்காமல், வேந்தன் என்றால் ஒருவன் அரசன் என்றும் ஒருவன் சக்கரவர்த்தி என்றும் வந்துவிடுவான். ஆகையால் புரட்சிக் கவிஞர் என்று பாரதிதாசனை தந்தை பெரியார் விருப்பத்துடன் அழைத்தார்.
தமிழ்தேசியத்தின் தனிப்பெரும் பாவலராய் திகழ்ந்த புரட்சிக்கவி பாரதிதாசனார், தந்தை பெரியாரின் கவிதைப் போர் வாளாய்ச் சுற்றிச் சுழன்று சுயமரியாதை கருத்துகளை தனது பாடல்கள் வழியே பரப்பினார். தணல் நெருப்பாய் வெளிப்பட்ட தன்மான இயக்கச் சிந்தனைகளை அனல் நெருப்புத் தமிழில் அப்படியே வடித்தெடுத்தார்.
ஆரியப் பார்ப்பனியத்தின் அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு கிடந்த தமிழ்ச் சமூகத்தை தனது பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும் மீட்டெடுத்த தந்தை பெரியார், அந்த ஆரியப் பொய்களைக் கட்டுடைக்கும் கருத்தியல் போர்க்கருவியாக ‘திராவிடம்” எனும் கருத்தியலை முன்னெடுத்தார்.
தந்தை பெரியார் ‘திராவிட நாடு” கேட்டபோதும், ‘தமிழ்நாடு தமிழருக்கே” என வீர முழக்கமிட்டு போராடி சிறை கண்ட போதும் அவருடைய உள்ளம் பார்ப்பனரல்லாத மக்களின் உண்மை விடுதலையைத்தான் நேர்நோக்கி நின்றது.
உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை தன் உயிருக்குச் சமமாக நினைத்து பாடியவர் புரட்சிக் கவிஞராகத் தான் இருக்க முடியும். கனிச்சுருள், கரும்புச் சாறு, வெல்லப்பாகு, இளநீர், பசும்பால் ஆகியவற்றின் சுவையைவிடச் சுவை மிக்கது தமிழ்” என்று தமிழின் பெருமையை உலகறியச்செய்தவர்.
‘தமிழுக்கு அமுதென்று பெயர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்”
என்று தனது தமிழ்ப் பற்றை பறைசாற்றுகின்றார், அதே வேளையில்
‘தொண்டு செய்து பழுத்த பழம்!
தூய தாடி மார்பில் விழும்!
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
மனக் குகையில் சிறுத்தை எழும்!
அவர்தாம் பெரியார்!
என்று தந்தை பெரியார் மீதும் தான் வைத்திருந்த பற்றை பாடல்கள் வழியே வழங்கி வந்தார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளராகவும், திரைப்பட கதையாசிரியராகவும், பெரும் கவிஞராகவும் வலம் வந்த புரட்சிக்கவிஞர் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று தன்னை ஒரு அரசியல்வாதியாகவும் வெளிப்படுத்திக் கொண்டார்.
புரட்சிக்கவிஞரின் ‘பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969இல் அவரது மறைவுக்குப் பின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது, பின்பு 1990இல் இவருடைய படைப்புகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அரசுடைமை ஆக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்து புரட்சிக்கவிஞர் பெயரில் பாரதிதாசன் விருதினை வழங்கி சிறப்பித்து வருகிறது தமிழ்நாடு அரசு.
தனது கவிதைகளின் தனித்துவத்தாலும், திராவிட இயக்க எழுச்சியாலும், மொழிப்போரின் விளைவாலும், தந்தை பெரியார் மீது கொண்ட பற்றாலும், தமிழ் மொழி மீது உணர்வு வழியிலும், அறவழியிலும் இந்த தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பி ஜாதி ஒழிந்த சுயமரியாதை சமூகமாக மாற்றியமைக்க பாடுபட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரை அவரது 133ஆவது பிறந்த நாளில் போற்றி மகிழ்வோம்.