முனைவர் ச. ஜீவானந்தம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,
புதுடில்லி
இதழ்கள் சமூகத்தில் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறுபட்ட காலகட்டங்களில் தொடங்கப்பட்டு வந்துள்ளன. வெளிவந்த இதழ்களில் பல இலக்கினை அடைந்தும், சில இலக்கின் எல்லையினை எட்ட இயலாமலும் போயுள்ளன. இவற்றில் 1925ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட பச்சை அட்டை ‘குடிஅரசு’ இதழனாது தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
‘குடிஅரசு’ இதழானது வணிக நோக்கம் ஏதுமின்றி, மக்களைக் கவரக் கூடிய எந்தவொரு ஜனரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களையும் தவிர்த்து, வெகுசன மக்களிடையே சுயமரியாதை-சமதர்ம-பகுத்தறிவு கொள்கைகளை ஊட்ட வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு முன்மாதிரி இதழாகும். இந்திய சமூக வெளியில், குறிப்பாக தமிழர்களிடையே ஒரு கலாச்சார-பண்பாட்டு புரட்சியினை ஏற்படுத்தி இன்றைய தமிழர்களின் சுயமரியாதையான வாழ்வில் இன்றியமையாத தாக்கத்தினை ஏற்படுத்திய பெருமை ‘குடிஅரசு’ இதழினைச் சாரும்.
ஆணாதிக்கம் மிக ஆழமாக வேறூன்றியுள்ள சமூகத்தில் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களின் கருத்துக்களை தாங்களே முன்வைக்கக்கூடிய ஒரு வெளியினை தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழின் வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். ‘குடிஅரசு’ இதழானது பெண்கள் முன்னேற்றத்திற்கும், விடுதலைக்கும் பாடுபடக்கூடிய கூடிய ஒரு முக்கிய தளமாக இருந்து வந்தது.
அதேபோல், சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பங்கு என்பதும் பெண் விடுதலை என்ற அடைப்படையினைத் தாண்டியும் இயக்கத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் அளப்பரியதாகவே இருந்துவந்துள்ளது என்பதனை வரலாற்றுத் தரவுகள் உணர்த்துகின்றன. “சுயமரியாதை இயக்கமும் பெண்களும்” என்ற தலைப்பில் இராகவன் அவர்கள் குறிப்பிடும்பொழுது நமது இயக்கம் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு நமது சகோதரிகளின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியம் என்று ‘குடிஅரசு’ இதழில் குறிப்பிடுவதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் முக்கியத்துவம் எத்தகையது என்பதைப் பற்றி நம்மால் அறியமுடிகின்றது (குடி அரசு. 13.01.1935).
‘குடிஅரசு’ இதழும், சுயமரியாதை இயக்கப் பெண்களின் கருத்தியல் ஆளுமையும்
பொதுவாக, பிரதிநிதித்துவம் என்பதற்காக பெண்களை வெறும் பதுமைகளாக மட்டுமே சுயமரியாதை இயக்கம் அணுகவில்லை என்பது இங்கே குறிபிடத்தக்கது ஆகும். ‘குடிஅரசு’ இதழில் பெண்கள் தங்களது கருத்துக்களை எந்த ஒரு தயக்கமும், நிர்பந்தமும் இன்றி பொது வெளியில் வைக்க முழுச் சுதந்திரத்தினையும் தன்னகத்தே கொண்டிருந்தனர். உதாரணமாக மொழி குறித்து குஞ்சிதம் அவர்கள் 1932ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் குறிப்பிடும் பொழுது ஆங்கிலேயர்கள் அன்னியரென்றால் பார்ப்பனர்கள் (ஆரியர்கள்) யார்? ஆங்கிலம் அன்னிய மொழி என்றால் சமஸ்கிருதம் எந்தப்பாட்டன் வீட்டு மொழி என்ற அவர், நானூறு வருடத்திற்கு முன்பு வந்த “அன்னிய மொழியினை” ஒழிப்பதற்கு முன்பு, இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது சமூகத்தில் பராசர் ஸ்மிருதி, மனுதர்மம் முதலிய கொடூரச் சட்டங்களைச் செய்த “அன்னிய மொழி”யாகிய சமஸ்கிருதத்தை அடியோடு அழிக்க வேண்டாமா என்ற மிகக் காட்டமான வினாவினை எழுப்பியுள்ளார். (‘குடிஅரசு’ – 26.06.1932).
அலமேலு, அலர்மேல்மங்கை, அன்னபூரணி, ஆண்டாள், இந்திராணி, இராதா, இலட்சுமி, தருமாம்பாள் (1890-1959), கண்ணம்மாள், கனகம்மை, குஞ்சிதம் (1909-1961), சத்தியவாணி முத்து (1923-1999), சரஸ்வதி, சிவகாமி, ஞனாம்மாள், தாமரைக்கண்ணி (1911-1971), நாகம்மை (1885-1933), நானாவதி, நீலாம்பிகை (1903-1945), நீலாவதி (1913-1961), பரிபூர்ணத்தம்மை, மணியம்மை (1920-1978), மரகதவல்லி, மலர்முகத்தம்மை (1879-1963), மனோகரம், மிராண்டா, மீனாம்பாள் (1900-1920-க்குக் இடையில்-1992), முத்துலட்சுமி (1886-1968), மூவலூர் இராமாமிர்தம் (1883-1962), ருக்மணி, வீரம்மாள் (1924-2006), ஜானகி, ஜோதி என்ற நீண்ட நெடிய வரிசை (அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது) கொண்ட பெண் ஆளுமைகள் ‘குடிஅரசு’ இதழினை ஒரு அறிவாயுதமாகக் கருதி தங்களின் சுயத்துடன் செயல்பட்டு, பெண்களுக்கான உரிமைகளையும் ஆணாதிக்க சமூகத்தின் எதேச்சியதிகாரத்தினையும் தங்களின் எழுத்து மற்றும் செயல்பாடுகளைக் கொண்டு எதிர்த்து வந்தனர் (குடி அரசு. 08.06.1930).
வழக்கமாக இந்தியச் சூழலில் பெண்கள் அமைப்புகள் தங்களின் செயல்பாடுகளை பெண் விடுதலை, ஆணாதிக்க எதிர்ப்பு, குடும்பம், குழந்தை மற்றும் குழந்தை வளர்ப்பு போன்றவைகளைச் சுற்றியே தகவமைத்துக் கொண்டிருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகபட்சம் சில பெண் ஆளுமைகள் இந்திய அரசியல் விடுதலையினைப் பற்றி பேசியதனைக் குறித்து அறியலாம். ஆனால், சுயமரியாதை இயக்கப் பெண்கள் தங்களின் அறிவுசார் வெளியினை அரசியல், கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம் என பரந்துபட்டு தளங்களில் விரித்திருந்தனர். இதனை சுயமரியாதை இயக்கப் பெண்கள் ‘குடிஅரசு’ இதழில் பயன்படுத்திய கட்டுரைத் தலைப்புகளின் வழி அறியலாம்.
நீலாவதியின் “இந்து மத வீழ்ச்சிக்கும் இதர மத வளர்ச்சிக்கும் உதவி புரிவது பாழும்: தீண்டாமையும்-விதவைகளின் துயரமுமே!.” (‘குடிஅரசு’ – 09.03.1930); “பெண் மக்களும் சுவதேச சமஸ்தானங்களும்” (‘குடிஅரசு’ – 12.07.1931 மற்றும் 28.06.1931); சிவகாமியின் “வைதீகர் கொடுமையும் தீண்டாதார் துயரமும்” (‘குடிஅரசு’ – 24.04.1932); அர்த்தமற்ற சடங்குகளை அடியோடு ஒழியுங்கள்! (‘குடிஅரசு’- 05.06.1932); ஆண்டாளின் “நமக்கு இன்னும் சாதி வேண்டுமா?” (‘குடிஅரசு’ – 22.05.1932 மற்றும் 05.06.1932); குஞ்சிதம் அவர்களின் “இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” (‘குடிஅரசு’ – 31.08.1930); “கோவில் சொத்தை என்ன செய்ய வேண்டும்?” (‘குடிஅரசு’ – 09.10.1932) மற்றும் “கோவில் சொத்தை விற்று தொழிற்சாலை உருவாக்க வேண்டும்” (‘குடிஅரசு’-16.07.1933) போன்றவைகள் நமக்கு உணர்த்துகின்றன.
‘குடிஅரசு’ இதழில் பெண் ஆளுமைகள் முன்வைத்த சமூகப் பிரச்சினைகள் குறித்தான வாதங்கள்
ஜாதிய ஆதிக்க சமூகத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள் தாங்கள் கொண்ட கொள்கையினை குடி அரசு இதழின் வழி எந்தவொரு சமரசமுமின்றி மிக ஆணித்தரமாக முன்வைத்தனர். சுயமரியாதை இயக்கப் பெண்கள் மதம், கோயில், ஜாதி, தீண்டாமை, மொழி அரசியல், போன்ற சமூக விடயங்களைப் பற்றிய மிக நீண்ட வரலாற்றுப் புரிதலும், ஆழமான தெளிவும் கொண்டு இருந்தனர்.
ஜாதி என்ற நிறுவனத்தின் மீது சுயமரியாதை இயக்கப் பெண்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தனர். சமூகத்திலிருந்து உடனே தீண்டாமையை ஒழிக்க வேண்டியது முக்கிய வேலையாகும் என்றார் குஞ்சிதம் (‘குடிஅரசு’- 31.08.1930).
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கை என்னவென்றால் தீண்டாமை, ஜாதிப் பிரிவு என்னும் பேயை நாட்டைவிட்டு அறவே ஒழிக்க வேண்டுமென்பது தான் என்று இந்திராணி குறிப்பிட்டு, எந்த மனிதன் பகுத்தறிவைக் கொண்டு யோசிக்கின்றானோ, அவனே மனிதன் என்று வரையறுத்தார் (‘குடிஅரசு’ – 04.12.1932).
அதேபோல், நவீனகாலத்தில் தேவைப்படுவது என்பது ஒற்றுமையான தூய வாழ்க்கை; ஒருவனுடைய நலத்திற்காக பெரும்பான்மையான ஏழை மக்கள் வருந்தாத வாழ்க்கை; நெற்றி வியர்வை நிலத்தில் விழ கடும் வெய்யிலில் ஒரு நாள் முழுவதும் பாடுபட்டு அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாது வருந்தும் ஏழை தீண்டப்படான் என்று சொல்லப்படும் மக்கள் நம்மோடு சம உரிமை பெறக்கூடிய வாழ்க்கையே வேண்டும். இத்தகைய இன்ப வாழ்விற்குத் தடையாக இருக்கின்ற சாதியை அடியோடு ஒழித்தல் வேண்டும் என்று ஆண்டாள் குறிப்பிடுகின்றார் (‘குடிஅரசு’ – 22.05.1932 மற்றும் 05.06.1932).
டாக்டர் எஸ்.தருமாம்பாள், இந்திராணி, மரகதவள்ளி, நீலாவதி, சிவகாமி சிதம்பரனார்
மேலும், நாயுடு, முதலியார், செட்டியார், ஐயர், ஐயங்கார் போன்ற பட்டங்கள் சாதியைக் குறிக்கிறபடியால் அவைகளை நீக்கிவிட்டு, சாதிய அடையாளங்களைக் குறிக்கின்ற பூணூல் முதலியற்றை அகற்றி விட்டு, பார்ப்பனச் சடங்குகளை அடியோடு ஒழித்தல் வேண்டும். உயர்ந்த சாதி என்று போலி வேடம் போட்டுக் கொண்டு நம் வீட்டில் உண்ணமாட்டேன் என்பவருடன் நாமும் சேர்தல் கூடாது. எந்த இடத்தில் உயர்வு தாழ்வு காட்டப்படுகிறதோ அவ்விடத்திற்கு அடி எடுத்தும் வைக்கக் கூடாது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகின்றார் ஆண்டாள் (மேற்குறிப்பிட்ட நூல்கள்).
கோயில் நுழைவினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, கோயிலைக் கட்டி கொடுத்துவிட்டு அந்தக் கோயிலுக்கு போக முடியவில்லை யென்றால் அதை இடித்துத் தரைமட்டமாக்குவதை விட்டுவிட்டு கோயில் நுழைவுப் போராட்டம் எதற்கு என்ற குஞ்சிதம் அவர்கள் (‘குடிஅரசு’ – 26.06.1932),
உடம்பு நோகாமல் நகத்தில் அழுக்குப்படாமல் என்றைக்கும் சுகமாகவே இருந்துகொண்டு தின்று கொழுத்த ஒரு சோம்பேறிக் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டிருக்கும் இந்தக் கோயில்களை ஒழிப்பதென்றால் அந்த சாதிக்காரர்களுக்கு வயிற்றெரிச்சலாய்த்தானே இருக்கும் என்றார் (மேற்குறிப்பிட்ட நூல்).
ஆதிதிராவிடர்கள் கோயிலுள் பிரவேசிக்க வேண்டுமென்பது, “சாமியானது அள்ளிக்கொடுத்து அம்மக்களின் துயரத்தையும், இழிநிலைகயையும் நீக்கிவிடும் என்பதற்காக அல்ல” என்பதை குறிப்பிட்டு, ஏனைய சாதி மக்களைப் போலவே அவர்களும் சமநிலைப் பெறவேண்டும் என்பதற்காகவே என்று சிவகாமி அவர்கள் குறிப்பிடுகின்றார் (‘குடிஅரசு’ – 24.04.1932).
அதுமட்டுமல்லாமல், தீண்டப்படாத சகோதரர்கள் கோயில் பிரவேசம் செய்ய கடினப்படுவதைப் பார்க்கிலும், மக்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யாத அக்கோயில்களை சத்தியாக்கிரக வழி நின்று ஒழிக்க செய்வது பலவகையிலும் நன்மையுண்டு எனக் குறிப்பிட்ட சிவகாமி அவர்கள், கோயிலினுள் சென்றால் பலன் என ஒன்றுமில்லை. அவ்வாறு இருக்கையில் இவ்விதமாகக் கடினப்பட்டு கோயில் நுழைவுக்கு வழிதேட வேண்டுவதைவிட, எல்லா மக்களுக்கும் உதவியற்ற கோயில் என்ற நிறுவனத்தினை ஒழிக்க வழிதேடுவதே சீர்திருத்தம், பகுத்தறிவு எனக் குறிப்பிடுகின்றார் (‘குடிஅரசு’ – 24.04.1932).
அதேபோல், இந்தியாவில் கிறித்தவ ஆலயங்களில் நிகழ்ந்து வந்த சாதியப் பாகுபாடுகளைப் பற்றி எந்தவொரு சமரசமுமின்றி எதிர்த்த சுயமரியாதை இயக்கப் பெண் ஆளுமைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தனித்தனி வழிபாட்டு இடங்கள் இருக்கின்றதையும், பணக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள பாகுபாடுகளையும் குடி அரசு இதழின் மூலம் சாடினர் (‘குடிஅரசு’ – 16.07.1933).
பொதுவாகவே, சுயமரியாதை இயக்கத்தினர் மதம் என்பதை மனித வாழ்க்கையில் ஏற்படும் நலத்திற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சில கட்டுப்பாடுகள் என்றே கருதினர். இம்மாதிரியான மதத்தில் சுயமரியாதைக்காரர்களுக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் கிடையாது என்றதுடன், இத்தகையக் கட்டுப்பாடுகள் எல்லாம் கால, தேச வர்த்தமானத்திற்கு தகுந்தபடி அழிக்கவோ, அல்லது திருத்தி அமைத்துக்கொள்ளவோ முடியும் என்றும், ஆனால் மதமானது கடவுளால் ஏற்பட்டது, தெய்வத்தன்மை பொருந்தியது. அதை அழிக்கவோ, அல்லது மாற்றிக்கொள்ளவோ, மனித வர்க்கத்தால் இயலாது என்று சொல்லும் பொழுதுதான் பகுத்தறிவுக்கு முரண்பட்டதாக இருக்கிறது என்று இந்திராணி குறிப்பிடுகின்றார் (‘குடிஅரசு’ – 04.12.1932).
இவ்வாறு நூற்றாண்டினைக் கொண்டாடும் தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ இதழானது ஒரு சமூகத்தின் பகுத்தறிவுப் பண்பாட்டு முகமாகவும், பெண்களின் கருத்துருவாக்கங்களைத் தாங்கி வந்த வரலாற்றுப் பெட்டகமுமாக இருந்து வந்துள்ளது எனபதை குறிப்பது மிகையாகாது.