தந்தை பெரியார் நினைவு நாளான இன்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல் – ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் – பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி! பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல், தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் 52-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஆர்.கிரிராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், நா.எழிலன், த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். (24.12.2025)


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தோழர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிர் அணியினர் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.



அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து கழகத் தோழர்கள் தந்தை பெரியார் படம் ஏந்தி அமைதி ஊர்வலமாக பெரியார் திடல் வந்தடைந்தனர்.
