எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களிலேயே
எஸ்.அய்.ஆரை முன்னிலைப்படுத்துவது என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது!
தேர்தல் ஆணையம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு
நியாயக் கூடமாக இருக்கவேண்டும்; நடுநிலையில் கண்காணிக்க வேண்டும்!
ஜெயங்கொண்டம், டிச.24 எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களிலேயே எஸ்.அய்.ஆரை முன்னிலைப்படுத்துவது என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நியாயக் கூடமாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் என்று ஒன்று அமைத்திருப்பதே, அதிகாரத்தைத் தவ றாகப் பயன்படுத்தக் கூடாது. நடுநிலையில் இருந்து அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே அடிப்படையிலே குலைத்து விடக்கூடிய அளவிற்கு இதைச் செய்திருக்கிறார்கள் என்றார் திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
கடந்த 20.12.2025 அன்று கழகப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க ஜெயங்கொண்டத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் அதிக அளவிற்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களே?
செய்தியாளர்: எஸ்.அய்.ஆர். மூலமாக தமிழ்நாட்டில் வாக்காளர்களை அதிக அளவிற்கு நீக்கியிருக்கிறார்களே. அதுபற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: எஸ்.அய்.ஆர். என்ற Special Intensive Revision அமைப்பே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எந்த அளவிற்கு உள்பட்ட ஒன்று என்பது கேள்விக்குரியதாகும். சட்டப்பூர்வமாக, அரசி யலமைப்புச் சட்டப்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எஸ்.அய்.ஆர். என்று சொல்லக்கூடிய Special Intensive Revision என்பதற்கு இடமுண்டா? என்பது சட்ட ரீதியான முதல் கேள்வியாகும்.
இதைத் தொடக்கத்திலிருந்தே எடுத்துச் சொல்லி வந்ததோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிய போதும், இப்பிரச்சினையை எடுத்துச் சொல்லி யிருக்கின்றோம். இச்சட்டம்பற்றி நீதிமன்றத்தில் கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கக் கூடிய ஒன்றுமாகும்.
ஒரு மாத கால அவகாசம் போதுமா?
எஸ்.ஆர். என்பது Special Revision என்பதாகும். எஸ்.அய்.ஆர். என்பது Special Intensive Revision என்பதாகும். இவ்வளவு அவசர அவசரமாக இதனை செய்து முடிக்க முடியுமா? என்ற ஒரு சூழ்நிலையில், இறந்து போனவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் என்று மூன்று வகைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இம்மூன்றையும் செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் போதுமா?
மேலும் அவகாசம் தேவைப்படாதா? இன்றைக்குக் கூட ஓர் ஆங்கிலப் பத்திரிகையில், இதனை செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது? உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதில் நியாயம் இருப்பதால், கொஞ்சம் அனுதாப உணர்வோடு, அதைப்பற்றித் தேர்தல் ஆணையம் சிந்திக்கவேண்டும். இவ்வளவு அவசரப்படுத்தக் கூடாது என்றும், அதற்குரிய கால அவகாசத்தைக் கொடுக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டல் நெறிமுறையைப்போல மிகத் தன்மையாகச் சொல்லியிருக்கிறது.
அதன்படி அவர்கள் செய்யவில்லை என்றால், அடுத்தபடியாக உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான்!
பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்!
அசாமிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற விருக்கின்றது. அங்கே பி.ஜே.பி. ஆட்சி இருக்கிறது. அங்கே எஸ்.ஆர். தான் கையாளப்படுகிறது. அதாவது தீவிரமான பரிசீலனை மட்டுமே! இதனைப்பற்றியும் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.
எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மறு பரிசீலனையே கூடாது, ஆய்வு செய்யக்கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல. மாறாக, வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வமாக அதிகாரத்தை அளித்திருக்கிறதா? என்பது முதல் கேள்வி.
அப்படியே அளிக்கப்பட்டதாக வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும்கூட, அதற்குரிய கால அவகாசம் போதுமானதா? அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோன்று இருக்கலாமா என்பது அடிப்படையான கேள்வியாகும்.
இந்த அடிப்படையான கேள்விகளைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல், வேக வேகமாக இதனைச் செயல்படுத்துகிறார்கள்.
‘‘ஏற்கெனவே, வாக்காளர்ப் பட்டியலில் இருந்த என் பெயர் காணவில்லையே, என்ன காரணம் என்று கேட்டால், நான் இறந்து போனவர்களின் பட்டியலில் இருக்கிறேன்’’ என சொல்கிறார்கள் என்று, மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் வந்து, ‘‘நான் உயிரோடு இருக்கிறேன்’’ என்று முறையிட்டு இருக்கிறார் என்ற செய்தி கடந்த வாரம் வெளிவந்தது.
ஒரு மாதத்திற்குள் இந்தப் பணிகளை செய்து முடிக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் கொடுத்த படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கின்ற கேள்விகளைப் புரிந்து, அதற்குரிய பதில்களை எல்லா குடும்பங்களிலும், எல்லோராலும் நிரப்ப முடியாது. காரணம் என்னவென்றால், அத்தனைக் கேள்விகள் இருக்கின்றன.
‘‘சென்ற முறை எனக்கு வாக்களிக்கக் கூடிய உரிமை இருந்தது. இந்த முறை வாக்காளர்ப் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லையே’’ என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு அந்தச் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்!
ஆகவே, மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில், மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.
இதனுடைய நோக்கம் என்னவென்றால், பீகார் மாடலைப் போல எடுத்துக்கொண்டு, யார் யாரெல்லாம் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்களோ, அவர்களுடைய பெயர்களையெல்லாம் நீக்கிவிட்டு, கடைசியில், அதற்கு மறுப்புச் சொன்னால், ‘‘தேர்தல் ஆணையத்திற்குத்தான் வானளாவிய அதிகாரம் இருக்கிறது. நீதிமன்றங்கள்கூட இதில் தலையிட்டு, உத்தரவுப் பிறப்பிக்க முடியாது’’ என்று அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். இன்னமும், பீகார் வழக்கு முடியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில்தான் எஸ்.அய்.ஆரை கையிலெடுக்கிறார்கள்!
ஆனால், அங்கேயும் தேர்தல் ஆணையம் சொல்வதுதான் முடிவு என்று, அவர்கள் விரும்பிய ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய குறியெல்லாம், பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்கள் அல்ல. அதற்கு உதாரணமாகத்தான், அசாம் மாநிலத்தைச் சொன்னேன். எந்தெந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் ஆளுகின்றார்களோ, அங்கே எஸ்.அய்.ஆரை கையிலெடுக்கிறார்கள்.
பா.ஜ.க.வால் மக்களைச் சந்தித்து, மக்களின் பேராதரவைப் பெற்று, முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதால், இதுபோன்ற குறுக்கு வழியில், ‘‘ஓட்டுத் திருட்டு’’ நடத்துகிறார்கள் என்று ராகுல் காந்தி போன்றவர்கள், டில்லியில் மிகப்பெரிய அளவிற்கு கிளர்ச்சியை நடத்தியிருக்கின்றார்கள்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, பொதுவாக ஆராய்ந்து பார்க்கும்பொழுது, ஏனிந்த அவசரக் கோலம்? என்று உச்சநீதிமன்றமும் கேட்டிருக்கிறது. நேற்று வெளிவந்த பத்திரிகைகளில்கூட இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க இது ஒரு திட்டமிட்ட செயலோ?
இங்கொன்றும், அங்கொன்றும் இறந்து போனவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என்று மட்டுமல்ல, மாறாக, முழுக்க முழுக்க இது ஒரு திட்டமிட்ட செயலோ? என்னுமளவிற்கு விரிவாக வாக்குத் திருட்டைச் செய்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தையும்
அவர்கள் வயப்படுத்தி விட்டனர்!
இதுவரை, சி.பி.அய்., வருமான வரித் துறை, அமலாக்கத் துறைகள் மட்டும்தான் அவர்களுடைய ஏவுகணைகளாக இருந்தன. இப்போது நடைபெறுகின்ற செயல்களையெல்லாம் பார்க்கும்போது, தேர்தல் ஆணையத்தையும் அவர்கள் வயப்படுத்தி விட்ட ஒன்றாக ஆகிவிட்டது.
இப்போது நீதிமன்றத்திலும் தங்களுடைய காவியை அடிக்கலாமா? என்று இன்னொரு கருவியையும் கையாளுகிறார்கள். அதை பற்றி மாலையில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் நான் சொல்லுகிறேன்.
ஆகவே, எஸ்.அய்.ஆர். என்பது ஜனநாயகத்திற்கு அடிக்கின்ற சாவு மணியினுடைய முதல் ஒலி. உண்மையான வாக்குகள் பயன்பட வேண்டும்; தவறான வாக்குகளைப் போடுகின்றவர்களுக்கோ, மற்றவர்களுகோ இடம் கொடுக்கக் கூடாது. இதற்குச் சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்றன என்றால், அதை அவர்கள் பயன்படுத்துவதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஆய்வு செய்யக் கூடாது என்பது எதிர்கட்சிகளுடைய வாதம் அல்ல; இதைக் குறை சொல்லுகிறவர்களுடைய வாதம் அல்ல;
தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நியாயக் கூடமாக இருக்க வேண்டும்!
முதல் கேள்வி மீண்டும் நான் சொல்லுகிறேன், அரசியலமைப்புச் சட்டப்படி எந்தப் பிரிவின் கீழே எஸ்.அய்.ஆர். இருக்கிறது. எஸ்.ஆர். என்பது இருக்கிறது. எஸ்.ஆர். என்பது வேறு; எஸ்.அய்.ஆர். வேறு. இதை அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடத்திய காலத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்துகிறோம். வழக்கு இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாக தேர்தலே முடியப் போகிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வேகம் காட்டுவதனுடைய பின்னணி என்ன? எனவே, அதிகமான வேகம் காட்டி, வேகமாக தேர்தல் நடத்துவது, அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளையே மய்யப்படுத்துவது, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற கேரளா, தமிழ்நாடு, அதே மாதிரி மேற்குவங்கம் மாநிலங்களையே முன்னிலைப்படுத்துவது என்பது இருக்கிறதே, அது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. ஆகவேதான், தேர்தல் ஆணையம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நியாயக் கூடமாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் என்று ஒன்று அமைத்திருப்பதே, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. நடுநிலையில் இருந்து அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே அடிப்படையிலே குலைத்து விடக்கூடிய அளவிற்கு இதைச் செய்திருக்கிறார்கள்.
எனவேதான் இந்த அவசரம் கண்டனத்துக்குரியது – கேள்விக்குரியது –அய்யத்திற்குரியது. மக்கள் மன்றத்திலே இதற்குத் தீர்வு விரைவில் காண வேண்டும். ‘‘நாங்கள்தான் அவகாசம் கொடுத்திருக்கிறோமே, திருத்தம் இருந்தால் சொல்லலாமே’’ என்று தேர்தல் ஆணையம் சார்பில் கேட்கக்கூடும். ஆனால், அந்த அவகாசம் என்பது ஒரு மாதம் போதுமா? மக்கள் மத்தி யிலே இது போதுமா? பொதுவாக இருக்கிறவர்கள் எல்லாம்கூட இது அவசரத்திற்குரிய ஒன்று அல்ல என்பதுதான்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
மிக முக்கியமானது!
இன்னொரு உதாரணத்தை உங்களுக்கு சொல்கி றேன். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் என்றார்கள். ஆனால், இந்த 19 ஆம் தேதி, அந்த 10 ஆண்டுகள் தாண்டி, அதற்கடுத்து இப்போது அதிகமான ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. காரணம், ‘‘கோவிட் வந்து விட்டது; ஆகவேதான், நாங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒத்திப் போடுகிறோம்’’ என்றார்கள். பிறகு, கோவிட் எல்லாம் முடிந்துவிட்டது, இப்போது அதைச் செய்திருக்கிறார்களா? இப்போது கூட எடுக்க முடியாது, 2026 ஆம் ஆண்டுதான் அதற்காக நாங்கள் நிதி ஒதுக்குகிறோம் என்று சொல்கிறார்கள். வீடுதோறும் எடுக்கக்கூடிய, இந்தியா முழுவதும் எடுக்கக்கூடிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மிக முக்கியமானது. சமூக நீதிக்கு சட்டங்கள் வேண்டும் என்று சொன்னால், அந்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றத்திற்குப் போகும்போது, நீதிமன்றத்தில் என்ன கேட்கிறார்கள்? இதற்கு உங்களுக்குப் போதிய ஆதாரம் இருக்கிறதா? அந்தந்த ஜாதிக்காரர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்று கேட்கிறார்களா என்று ஒரு பக்கம் கேட்கிறார்கள். அதற்கு, ‘‘இல்லை, மக்கள் தொகைக் கணக்கெடுக்கவில்லை’’ என்று சொல்லக்கூடிய அளவில், அவ்வளவு மெத்தனம் காட்டக்கூடிய ஒன்றிய அரசும், அமைப்புகளும் எஸ்.அய்.ஆரிலே என்ன இவ்வளவு வேகம்? அதற்கு ஓர் அளவுகோல், இதற்கு ஓர் அளவுகோல் என்று இரட்டை நாக்கு, இரட்டை வேடம். இந்த இரட்டை அளவுகோல் என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
ஆகவேதான், இது திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப் பொறி. இதை மக்கள் மத்தியிலே விளக்கிச் சொல்லி, எச்சரிக்கையாக இருக்கச் செய்யவேண்டும். சில பேர், சில கட்சிகள் அதை ஆதரிக்கிறார்கள். அது கூட்டணி மனப்பான்மையாக இருக்கிறது; இந்த சந்தேகத்தை மேலும் அது வலுப்படுத்துகிறதே தவிர, இந்தச் சந்தேகத்தை களைய முற்படுத்தவில்லை.
‘தூப சக்தி’யினுடைய
ஒரு பிரிவு த.வெ.க.வே!
செய்தியாளர்: தி.மு.க. தீயசக்தி – த.வெ.க. தூய சக்தி என்று விஜய் சொல்லியிருக்கிறாரே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஆமாம், ஏன்னா! தூப சக்தி என்ற ஒன்று இருக்கிறது. தூப சக்தியினுடைய ஒரு பிரிவு த.வெ.க.வே தவிர, வேறொன்றும் இல்லை. ஒரு முகமூடிப் பிரிவு.
தூப சக்தியே தவிர, தூய சக்தி அல்ல. வெறும் தூபமே தவிர, சக்தி என்று விளக்கிக் காட்ட முடியாது. மக்கள் சக்திக்கு முன்னால், இந்தச் சக்திகள் எல்லாம் தோல்வியடையும். மக்கள் சக்தி யார் என்பது, தெளி வாக எல்லோருக்கும் தெரியும். அதனால்தான், இன்னும் கூட ஒன்று சேர முடியாத சக்திகள். முதலில் அவர்க ளுக்குள்ளே ஒன்று சேரவில்லை. ஒருத்தர் அதற்கு விளக்கம் என்ன சொல்றார்?
‘‘தூய சக்தி என்று தானே சொல்கிறார். அவர் தூய சக்தியா? இல்லையா? என்பது, வாங்குகிற பணம் எவ்வளவு? கணக்குக் கொடுத்த பணம் எவ்வளவு? என்று பார்த்தாலே அவருடைய தூய்மை உலகத்துக்குத் தெரியும்!’’ என்று சொல்லியுள்ளார்.
முதலில் தெளிவுபடுத்தியது யார்?
செய்தியாளர்: போலி வாக்காளர்களை வைத்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிருக்காரே அதுகுறித்து உங்களுடைய கருத்து?
தமிழர் தலைவர்: அடிப்படை உண்மையாக இருந்தால், அதைத் தெளிவாக சொல்வார்கள். போலியா? உண்மையா? என்பதை பல இடங்களில் தெளிவாக அதைக் காட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படை சட்டத்தை எதிர்த்து முதலில் தெளிவுபடுத்தியது யார்? திமுக மட்டும்தானா? மேற்கு வங்காளத்துக்காரர்கள் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களா? பொதுவாக இருக்கிறவர்கள், பத்திரிகைக்காரர்கள் சொல்கிறார்களே, அவர்களெல்லாம் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள்? இவர்கள் எல்லாம் பத்திரிகையில் எழுதுகிறார்கள்; எந்தக் கட்சியையும் சாராத ஊடகங்கள் கண்டிக்கின்றன; பொதுவானவர்கள் சொல்லுகிறார்கள்; ஜனநாயகத்திற்கு சாவு மணி அடித்துவிட்டு, பாசிசத்தை, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று சொல்லுகிறார்கள். இது நடந்தால், இதுதான் கடைசியாக நடந்த ஒரே தேர்தல் என்று சொல்லக்கூடிய நிலைதான் ஏற்படும், இதுதான் உண்மை.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கூறினார்.
