டிசம்பர் 24

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாள்கள் வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இதே டிசம்பர் 24இல் (1973) தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

தொடக்கமாக குறிப்பிட்ட காலம் வரை அவரின் தனி வாழ்க்கைச் சக்கரம் சுழன்றிருந்தாலும், அதற்குப்பின் சொந்த தனி வாழ்க்கை என்று ஒன்று இல்லாமலேயே அனைத்தையும் பொது வாழ்க்கையின் பொதுவுடைமை ஆக்கிய தலைவர் அவர்.

செல்வக் குடியிலே பிறந்து வாழ்ந்து திளைத்தாலும், பொது வாழ்க்கையின் முதல் புள்ளியிலிருந்து எளிமையின் அடையாளமாகவே மாறினார்.

இதுகுறித்து தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் படப்பிடிப்பை எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

‘‘ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெயில் படாது வாழ்ந்தவர்; ஈரோட்டு வேந்தரென விளங்கியவர்.  ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து வறியார் போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு, இரவு, பகல் ஓயாது தேசத் தொண்டிற்காக தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?’’ என்று திரு.வி.க. படம் பிடித்தாரே, இதில் ஒளிரும் ஒவ்வொரு சொல்லும் உண்மையானவை – ஒப்பற்றவை!

பொதுத் தொண்டு என்ற காந்தம் இள வயதிலேயே அவரை  ஈர்த்தது! ஈரோட்டில் ‘பிளேக்’ என்னும் நோய் தொற்றியபோது – இறந்தவர் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கக்கூட பலரும் அஞ்சிய அந்தத் தருணத்தில்கூட தன் வாலிப நண்பர் பட்டாளத்தோடு சென்று பிணத்தை அடக்கம் செய்வது வரை அந்தப் பணியில் ஈடுபட்டார்.

பிறர் நலம் பேணுவது என்பது பிறவியிலேயே அவரின் அணுக்களில் தோய்ந்து விட்டது!

மண்டிக் கடையிலே அவரின் தகப்பனார் அவரை அடைத்தபோதுகூட ஊரார்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்துக்காரராகி விட்டார்.

ஒரு கட்டத்தில் ஈரோடு நகராட்சித் தலைவர் என்கிற அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.

குறைந்த காலமே ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த கால கட்டத்திலேயே (1917–1919) நகர வளர்ச்சியில் முத்திரை பதித்தார்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற ஒன்று அந்தக் கால கட்டத்தில் யாருமே நினைத்துப் பார்க்கவே முடியாது; அதனை அவர் சாதித்துக் காட்டினார்.

குழாய்கள் மூலம் வீடுகளுக்குத் தண்ணீர் கிடைத்த அந்த முன்மாதிரி இந்தியாவிலேயே முதலாவதாகக் கருதப்பட்டது.

கொங்குப்பறைத் தெரு என்றிருந்த பெயரை திருவள்ளுவர் தெரு என்று மாற்றினார்.

காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தில் தீண்டாமை ஒழிப்புப் போன்றவை இடம் பெற்றிருந்த நிலையில், ஈரோட்டில் தாம் வகித்த 29 பதவிகளையும் ஒரு கால் கடுதாசியில் ராஜினாமா செய்து, தூக்கி எறிந்து காங்கிரசில் சேர்ந்தார்.

எந்தப் பணியை எடுத்துக் கொண்டாலும் தன்னைத்தானே முழுக்க அர்ப்பணித்துக் கொண்டவர் அல்லவா – அவரைத் தேடி மாநில காங்கிரசின் செயலாளர், தலைவர் பதவிகள் தேடி வந்தன! அவற்றைப் பதவிகளாக ஒரு போதும் அவர் கருதியதில்லை; மாறாக பணியாற்றக் கிடைத்த பொறுப்பாகவே கருதி, பொறுப்பாகவே பணியாற்றினார்.

காங்கிரசில் இருந்தபோதே சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்; பார்ப்பன வல்லாண்மை எல்லா நிலைகளிலும் கோலோச்சிய கால கட்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு 50 விழுக்காடுக்காகக் கட்சிக்குள்ளிருந்தே குரல் கொடுத்தார்  – போராடினார். அது நிறைவேறாது என்று உறுதியாக தெரிந்த நிலையில் – ஒரு கட்டத்தில் காங்கிரசிலிருந்தே வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை – பகுத்தறிவு – சமத்துவக் கருத்துகளை மக்களிடத்திலே கொண்டு செல்ல ஏடுகளையும், இதழ்களையும் நடத்தினார்.

பண்பாட்டுப் படையெடுப்பான ஹிந்தியை எதிர்த்துப் போர்க்களம் கண்டார்; தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் செய்தார்.

சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தி வைத்த புரோகிதத் திருமணத்திற்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

தனது சீடர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன நிலையில், அந்தச் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கிடைக்கப் பெற்றதைக் கண்டு மகிழ்ந்தார்.

‘அனைவருக்கும்  அனைத்தும்!’ என்பது அவர் கொள்கையாக இருந்தது! ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் அவரின் இரு கண்களாக இருந்தன.

எந்த வகுப்புரிமைக்காக தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கொள்கை இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாகி விட்டது.

தமிழ்நாட்டில் இப்பொழுது 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்றால் அதற்குக் காரணம் அன்று அவர் விதைத்த வித்தாகும்.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை பின்பற்ற முடியாத– ஏற்க முடியாதவர்கள்கூட, அவரின் சமூகநீதிப் பணிக்காக தந்தை பெரியார் என்று போற்றுகின்றனர்!

அவர்தம் முற்போக்குச் சிந்தனைகள் உலகம் தழுவியதாகச் சுழன்றடிக்கின்றன! ஆம் பெரியார் உலகமயமாகி விட்டார்.

அவரின் நினைவு வரலாற்றில் நின்று நிலைக்கும் வண்ணம் திருச்சியையடுத்த  சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் ‘பெரியார் உலகம்’ என்னும் நிர்மாணப் பணிகள் நடந்து வருகின்றன.

அவர் கொள்கை வழி வந்த திராவிட மாடல் அரசு 21 மொழிகளில் தந்தை பெரியார் படைப்புகளைப் பரப்பி வருகிறது. எங்கள் வழி பெரியார் வழி என்று சொல்லும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மணம் வீசிக் கொண்டிருக்கிறது.

பத்து வயதில் தந்தை பெரியார் விரலைப் பிடித்த தலைவர் வீரமணி 93 வயதில், தந்தை பெரியாரின் கொள்கை உலகெங்கும் வேர்ப்பிடித்துப் பலன் கொடுக்க உழைத்து வருகிறார்.

தந்தை பெரியாரின் 52ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று – இயக்கத்தை முன்னிறுத்தி, வலுப்படுத்தி தந்தை பெரியார் காண விரும்பிய உலகத்தைப் படைக்க முன்கை நீட்டுவோம் – முன்னடி எடுத்து வைப்போம்! இதுவே அய்யா நினைவு நாளில் நாம் எடுக்கும் சூளுரை!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *