சஃபாத் அகமது, சிட்னி
மனிதர்கள் வாழும் இடங்களில், சமுதாய மாற்றங் களைச் சாத்தியப் படுத்தப் போவதாய்ச் சொல்லி, கொள்கைகளுடனும் சில முழக்கங்களுடனும் இயக்கங்களும் அமைப்புகளும் தோன்றுவது இயல்பான நிகழ்வு. அப்படி தோன்றும் இயக்கங்களும் அமைப்புகளும் நாளடைவில் தொய்வுகளைச் சந்தித்து, காலவோட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடுவதுமுண்டு. இதற்கு முழுமுதற்காரணமாக, வீரியமற்ற கொள்கைகளும், அக்கொள்கைகளை முழங்கியவர்களே அவற்றைக் கைவிட்டு விட்டது மாக அமைந்துபோனதைக் காணமுடியும். இவற்றிற் கெல்லாம் வேறுபட்டு, துவங்கி நூறு ஆண்டுகளைக் கடந்தும் “சமத்துவம் சகோதரத்துவம்” என்னும் அடிப் படைகளிலிருந்து பிறழாமல், ஆழ்ந்து வேர் பரப்பி பல கிளைகளோடு பரந்து விரிந்து முழு வீரியத்தோடு இயங்கி வருவது தான் “சுயமரியாதை” இயக்கம்.
‘நானும் யார் ஒருவருக்கும் அடிமையில்லை, எனக்கும் எவர் ஒருவரும் அடிமையில்லை” என்னும் கோட்பாட்டுத் தத்துவத்தில் கொடிநாட்டி இயங்கிவரும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டுப் பெருவிழா இந்தியா மற்றும் பல உலக நாடுகளில் நடைப் பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், சுயமரியாதை 100 என்னும் நிகழ்ச்சியை, அங்கு இயங்கி வரும் பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா (Periyar Ambedkar Thought Circle, Australia , PATCA) என்னும் அமைப்பினர் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி கடந்த 07-நவம்பர் 2025 வெள்ளிக்கிழமையன்று, மாலை 6 மணிக்கு பாரமட்டா டவுன் ஹால் அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வை PATCA-வின் தலைவர் டாக்டர் அண்ணா மகிழ்நன் தலைமையேற்று நடத்த, சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் தோழர். அருள்மொழி, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் தலைவர். கார்த்திகேய சிவ சேனாபதி, இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங் களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, புதியகுரல் அமைப்பின் நிறுவனர் தோழர் ஓவியா ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அமெரிக்கா, இந்தியா, இலங்கை மற்றும் சிட்னி வாழ் தமிழர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுப.வீ சுயமரியாதை இயக்கத் தின் தேவை, தோற்றம், வளர்ச்சி குறித்தும், “பெரியார் தோற்றுவிட்டாரா?” என்னும் பொருண்மையில் “பெரியாரும் அவரது கொள்கைகளும் என்றென் றைக்கும் வெற்றிபெறும், நின்று வாழும்” என்றும் பேசி, உதாரணங்களோடு அதை நிறுவியது மக்களை வெகுவாக ஈர்த்தது என்றால் அது மிகையன்று. மேலும், சிறப்புரை ஆற்றிய தோழர் அருள்மொழி “பெரியாரிய அமைப்புகளை கடல் கடந்த நாடுகளில் நடத்துவதில் இருக்கும் சவால்களைப் பற்றியும், கடல் கடந்தும் தேவைப்படுகிற பெரியார் என்னும் போராட்டத்தின் வடிவம்” குறித்தும் பேசினார். மேலும், தோழர் ஓவியா தன் சிறப்புரையில் “பெரியாரிய அமைப்புகள் ஏற்படுத்திய பெண்ணியச் சிந்தனைகள், அதன் தாக்கங்கள்” குறித்தும், கவிஞர் சல்மா “எல்லோருக்குமான இயக்கம் திராவிட இயக்கம், பெண் உரிமைகளைப் பாதுகாப்போம்” என்று பொருள்படவும் பேசினார்கள். கார்த்திகேய சிவசேனாபதி தன் உரையில் “வீழ்த்த முடியாத கொள்கைப் போராளி தந்தை பெரியார், ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் திராவிட இயக்கத்தினரின் பங்கு, எல்லோரையும் உள்ளடக்கிய (Inclusive) சமத்துவ சமுதாயத்தைக் காண வேண்டியதன் அவசியம்” குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்புறச் செய்த PATCA-வின் சிட்னி பொறுப்பாளர்கள் மருத்துவர் ஹாரூண், பொன்ராஜ், மருத்துவர் சசி, தோழர் தேவிபாலா ஆகியோருக்கு PATCA-வின் தலைவர் அண்ணா மகிழ்நன் நன்றி தெரிவித்தார். தோழர் காந்திமதி மற்றும் தோழர் ஷஃபாத் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். முற்போக்குச் சிந்தனை கொண்ட அனைவருக்கும் PATCA களம் அமைத்துக் கொடுப்பதால், PATCAவில் இணைந்து செயல்பட அழைப்பு கொடுத்து, நன்றி அறிவித்தலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
