சென்னை. டிச. 24- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்தநாள் விழா வரும் 26ஆம் தேதி சென்னையில் உற்சாகமாக நடைபெற உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நல்லக்கண்ணுவின் 101ஆவது பிறந்த நாள்
கடந்த 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. அன்று முதல் இன்று வரை நாட்டின் விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சோசலிச சமூகத்தை உருவாக்கவும் இக்கட்சி அளப்பரிய தியாகங் களைச் செய்துள்ளது.
கட்சியின் 100 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாலன் இல்லத் தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன. கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவோடு, எளிமையின் அடை யாளமான மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்தநாள் விழாவும் இணைந்து கொண்டாடப்படும்.
தலைவர்களுக்கு சிறப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 75 வயதைக் கடந்த 100-க்கும் மேற்பட்ட முதுபெரும் தலைவர்கள் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் கட்சியைத் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றிய அமீர் ஹைதர் கானின் 36ஆவது நினைவு நாள் மற்றும் கே.டி.கே.தங்கமணியின் 24ஆவது நினைவேந்தல் நிகழ்வுகளும் இதனுடன் நடைபெறும்.
செந்தொண்டர் அணிவகுப்பு
விழாவின் சிறப்பம்சமாகத் தொண்டர்களின் வீரவணக்க அணிவகுப்பும் நடைபெற உள்ளது. கட்சியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் திரளானோர் பங்கேற்க உள்ளனர்.
