சென்னை, டிச.24–- வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டதை அடுத்து, 1,53,571 பேர் இதுவரை பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித் துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித் துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் பணிகள் நிறைவடைந்து கடந்த 19ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக் காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதன்படி, கடந்த 19 முதல் 21ஆம் தேதி வரை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 248 ஆட்சேபனை மனுக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 19ஆம் தேதி வெளியிடப் பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் 26,32,672 பேரும், முகவரியில் இல்லாதவர்கள் 66,44,881 பேரும், இரட்டைப் பதிவுகள் 3,39,278 என மொத்தம் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பின் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக மொத்த எண்ணிக்கையில் 15.18% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
