சென்னை, டிச. 24- சென்னையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான விக்டோரியா பொது அரங்கம் (Victoria Public Hall), சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, நேற்று (23.12.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டது.
விக்டோரியா பொது அரங்கம்
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் பொன்விழா நினைவாக, 1888ஆம் ஆண்டு புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் ராபர்ட் சிசோல்ம் வடிவமைப்பில், நம்பெருமாள் செட்டியாரால் இந்த அரங்கம் கட்டப்பட்டது. இந்தோ-சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் அமைந்த இக்கட்டடம், சென்னை மாநகரின் தொன்மைக்குச் சான்றாக விளங்கி வருகிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், கட்டிடத்தின் பழமை மாறாமல் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன: 48 மீட்டர் நீளம், 24 மீட்டர் அகலம் கொண்ட இக்கட்டடம், 34 மீட்டர் உயரமான கோபுரத்தைக் கொண்டது.
நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் தரைத்தளம் மற்றும் சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையான கூரைச் சீரமைப்பு, உட்புறம் மற்றும் வெளிப்புற மரத்தளங்கள் மற்றும் பாரம்பரிய மரப்படிக்கட்டுகள் புதுப்பிக்கப் பட்டுள்ளன.
தொன்மை மாறாமல் இன்றைய கால பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விக்டோரியா அரங்கு வளாகத்தில் ரிப்பன் வெட்டி அரங்கினைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக சிதிலமடைந் திருந்த இந்த வரலாற்றுச் சின்னம், தற்போது முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீண்டும் தனது பழைய பொலிவைப் பெற்றுள்ளது சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
