புதுடில்லி,ஏப்.29- காவல்துறையினரின் கண் முன்னே கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமதுவை மருத்துவமனைக்கு ஏன் நடக்க வைத்து அழைத்து வந்தீர்கள்? என்று உத்தரப்பிரதேச பாஜக யோகி அரசுக்கு உச்சநீதி மன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகிய இருவரை யும் பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்முன்னே கடந்த ஏப்ரல் 15 அன்று 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொன்றது. இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை யினர் அழைத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில் வழக்குரைஞர் விஷால் திவாரி என்பவர் உத்தரப்பிர தேசத்தில் அத்திக் அகமது கொலை உள்பட கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை நடந்த 183 என் கவுண்ட்டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 28 அன்று நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு முன்பு நடை பெற்றது. அப்போது உத்தரப்பிரதேச மாநில அரசிடம் நீதிபதிகள் சரமாரி யாக கேள்விகளை முன்வைத்தனர். அதில், அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் ஏன் அனைவரும் காணும்படி மருத்துவமனைக்கு நடக்க வைத்து அழைத்து வரப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்கு அவர்களை ஏன் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல வில்லை? ஜான்சி நகரில் அத்திக் அகமது மகன் ஆசாத் அகமது என்கவுண்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விகாஸ் துபே என்கவுண்ட்டருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி பிஎஸ் சவுகான் கமிட்டியின் காவல்துறை செயல்பாடு குறித்த பரிந்துரைகள்மீது மாநில அரசு இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்து அமல்படுத்தியுள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
உத்தரப்பிரதேச என்கவுண்ட்டர்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசா ரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று மனுதாரர் விஷால் திவாரி கோரினார்.
மாநில அரசு ஏற்கெனவே நீதி விசா ரணைக் குழு அமைத்துள்ளது என்று உத்தரப்பிரதேச அரசு பதிலளித்தது.
ஆனால், அதற்கு மனுதாரர் ‘இதில் மாநில அரசின் பங்கு சந்தேகத்துக்குரியது’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. எந்தச் சூழ்நிலையில் அந்தச் சம்பவம் நடந்தது மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்தி ரத்தில் குறிப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளது.