சிவபாலன் இளங்கோவன்
பேராசிரியர், லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி
தனது மகளின் தற்கொலைக்கு சாட்ஜிபிடிதான் காரணம் – என அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடும் மன அழுத்தத்தில் இருந்த அந்த இளம் பெண்ணுக்கு சாட்ஜிபிடி ஏராளமான ஆறுதலைச் சொல்லியிருக்கிறது, அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக்கூடச் சொல்லியிருக்கிறது. ஆனால், தற்கொலை எண்ணத்தை அந்தப் பெண் வெளிப்படுத்தியபோது, ‘உதவியை நாடு’ எனச் சொல்லவில்லை. மாறாக, ‘அப்படி வருவது இயல்புதான்’ என அதை அங்கீகரித்திருக்கிறது. தற்கொலை செய்து கொள்வ தற்கான ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறது என அந்தத் தாய் சொல்லியிருக்கிறார்.
அந்தச் செயலியின் இயக்குநரோ, “இந்த சம்பவம் கெட்ட வாய்ப்பானதாகவும், அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. இந்த நோக்கத்துக்காக நாங்கள் வடிவமைக்கவில்லை. மக்கள் தவறாகப் பயன்படுத்தியதற்கு நிர்வாகம் எப்படிப் பொறுப்பாக முடியும்?” எனக் கூறியிருக்கிறார். யார் மீது தவறு?
2025 நவம்பர் மாதம்வரை, சாட்ஜிபிடி மீது இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங் களில் பதிவாகியிருக்கின்றன. இளம் வயதினருக்கு வரக்கூடிய எதிர்மறை எண்ணங்களை சாட்ஜிபிடி ஊக்குவிப்பதாகவும், தற்கொலை எண்ணங்களை அங்கீகரிப்பதாகவும் உளவியலாளர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரு கிறார்கள். பெரும்பாலான ஏஅய் சாட்பாட்களும் இப்படித்தான் எதிர்மறை எண்ணங்களை அங்கீகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
“ஏஅய் சாட்பாட்கள் எங்களுக்குச் சக நண்பர் களைப் போல அவ்வளவு துணையாக இருக்கின்றன. எங்களது சுக, துக்கங்களை எந்தவித முன்தீர்மானமும் இல்லாமல் கேட்கின்றன, மனிதர்களைவிட இவை எவ்வளவோ மேல்” எனச் சொல்லும் இன்றைய தலைமுறை யினருக்கு இதன் ஆபத்து புரியவில்லை.
சாட்பாட்கள் முழுமையான மனிதர்களா?
சமீபத்தில் பிரிட்டனில் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. இளம் வயதினரின் அந்தரங்க உணர்வுகளை இந்தச் செயலிகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்ப்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம். எடுத்துக்காட்டாக, இளம் வயது மாணவன் ஒருவன் தனக்குப் பெற்றோரின் மீது வெறுப்பாக இருக்கிறது என்று சொன்னால், இந்தச் செயலிகள் என்ன பதில் சொல்கின்றன, இதே போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதைக் கவனமாகவும், பொறுப்பு டனும் கையாளுகின்றனவா எனப் பார்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான இந்தச் செயலிகள் இவ்விஷயத்தில் அதிர்ச்சியளித்தன. அவ்வளவு செயலிகளும் இது போன்ற எதிர்மறை யான உணர்வுகளைச் சரியென்று அங்கீகரிக்கின்றன. அதைத் தவறென்று செயலிகள் சொல்லவில்லை. எனக்கு ஒருவர் மீது கோபமாக இருக்கிறது,அடிக்க வேண்டும்போல இருக்கிறது எனக் கேட்டால்,எப்படி மாட்டிக்கொள்ளாமல் வன்முறையைப் பயன் படுத்துவது என்கிற ஆலோசனைகளை இந்த சாட்பாட்கள் சொல்கின்றன. தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று கேட்டால் அனைத்து வழிமுறைகளையும் சொல்லித் தற்கொலைக் கடிதம் எழுதிக் கொடுப்பதுவரை இந்தச் செயலிகள் செய்கின்றன.
இந்த சாட்பாட்கள் நம்முடன் மிகவும் இணக்கமாக உரையாடுகின்றன. ஏதாவது கேள்வி கேட்டால், அது மிகச் சிறந்த கேள்வி எனவும், அதை நம்மால் மட்டும்தான் கேட்க முடியும் எனவும் முதலில் பாராட்டி விட்டுத்தான் பதிலுக்கே செல்கின்றன. சக மனிதர் கள்கூட நம்மை இப்படிப் பாராட்டுவதில்லை. ஆனால், சாட்பாட்கள் முழுமையான மனிதர்கள் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சாட்பாட்களின் வழியாகப் பெறுவதெல்லாம் தட்டையான, செயற்கையான ஆறுதல்களே. அதில் எந்த உண்மையான அன்பையும் அரவணைப்பையும் பெற முடியாது. நம் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இயந்திரத்தனமாகப் பாராட்டும் வகையில்தான் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உணர்வுகளை நுட்பமாகக் கையாளும் தன்மை இவற்றிடம் இல்லை.
ஆபத்தான அங்கீகாரம்
இந்த சாட்பாட்கள் செய்வதெல்லாம் ஒரு வகையில் முகஸ்துதியே. நாம் என்ன கேட்டாலும், சொன்னாலும் அதைச் சரி என்று நிறுவும் வகையில்தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு ஆபத்தான, அபத்தமான நிலைப்பாட்டை நாம் கொண்டிருந்தாலும் அதையெல்லாம் இவை அங்கீகரிக்கின்றன.
சில சந்தர்ப்பச் சூழலில் நமக்குள் தோன்றும் எதிர் மறையான எண்ணங்கள் எல்லாம் அந்தச் சூழல் சார்ந்து வெளிப்படுபவையே. சூழல் மாறும்போது அந்த எண்ணங்களும் மாறிவிடும். அதனால், அப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. ஆனால், இயல்பிலேயே இந்த சாட்பாட் களுக்கு உங்களது கருத்துகளுடன் ஒத்துப்போகக்கூடிய தன்மை இருப்பதால் இந்த எதிர்மறையான எண்ணங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. மோசமான மனநிலையில் இருக்கும் ஒருவருடைய இத்தகைய எதிர்மறை உணர்வுகள் அங்கீகரிக்கப்படுவதால், அவர் ஏதேனும் விபரீதமான முடிவை எடுக்கக்கூடிய மனநிலை உருவாகி விடுகிறது.
‘ஏஅய் செயலிகள் தவறு செய்வதில்லை. பொய் பேசுவதில்லை, அவை சொல்லும் அனைத்தும் நியாய மானவையே’ என்கிற பொதுவான நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அது உண்மையல்ல. ஒரு தேடுதல் இயந்திரம்போல வெறும் தகவல்களை எடுத் துத்தருவது மட்டுமே இந்தச் செயலிகளின் நோக்கம் அல்ல. தகவல்களை நமது நோக்கத்துக்கு ஏற்றவாறு உருமாற்றித் தரும் நுட்பம் இந்தச் செயலிகளுக்கு இருக்கிறது.
விழிப்புணர்வு அவசியம்
மனிதர்கள் தனித்துவமானவர்கள், அவர்களுக்குத் தனிப்பட்ட அனுபவங்கள், அற மதிப்பீடுகள் இருக்கின்றன. அதன் வழியாகத்தான் பிற மனிதர்களுக்கு ஆறுதலாக வும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனால், இந்த சாட்பாட்களுக்கு இவை எதுவுமே கிடையாது. எந்தத் தனிப்பட்ட மதிப்பீடுகளும் கிடையாது. அதன் முழு நோக்கமே உரையாடுபவரைத் திருப்திப்படுத்துவது, அவரின் கேள்விகளை, நோக்கங்களை நியாயப் படுத்துவது, உரையாடலை நீட்டிப்பது மட்டும்தான்.
இன்றைய சூழலில், பெரும்பாலான குழந்தைகளும், வளரிளம் பருவத்தினரும் இந்தச் செயலிகளுடன் மிகவும் நெருக்கமாக உரை யாடுகிறார்கள். உற்ற நண்பனாக நினைத்துத் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக்கூடப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், இந்த சாட்பாட்கள் நம் குழந்தைகளின் மனநிலையில் நம்மையும் அறியாமல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து கின்றன என்பதை உணர்ந்து, பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை ஒரு அவசரநிலையாகக் கருதி உடனே இது சார்ந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 23.12.2025
