பீகார் மாநிலம் பாட்னா புறநகர் பகுதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறைகளாக வாழும் நபர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஜனக்ராம் ஓம்கார் என்பவரின் வீடும் இடிக்கப்பட்டது.
ஜனக்ராம் ஓம்கார் அப்பகுதி இளைஞர்களை ஹிந்துத்துவ அமைப்பினரின் அடாவடி நடவடிக்கைகளுக்கு அழைத்துச்செல்லும் முக்கிய நபர் ஆவார், ராம நவமி, கிருஷ்ணாஷ்டமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மசூதிகளில் முன்பாக ஆடவிட்டு அதனைப் படமாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிடுபவர்! இதற்காக ஹிந்து அமைப்பினர் இவருக்குப் பணம் கொடுத்துவருகிறார்கள்.
நடந்துமுடிந்த தேர்தலின் போது பா.ஜ.க.விற்காக பரப்புரை செய்தார். ஹிந்து அமைப்பினரிடையே மிகவும் பிரபலமான ஜனக்ராம் ஓம்காரின் வீடும் நில மாபியாவினரால் இடிக்கப்பட்டது.
திடீரென கடந்த (19.12.2025) வெள்ளிக்கிழமை காலையில் ‘நீங்கள் சட்டவிரோதமாக குடியிருக்கிறீர்கள் உங்கள் வீடு இடிக்கப்படும்’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனை அடுத்து இவர் தனக்குத் தெரிந்த பா.ஜ.க. பெரிய தலைவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார் – பயனில்லை. பகலில் புல்டோசர் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்டன.
பாஜக தலைவர்கள் தனது வீட்டை இடிப்பதில் இருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் பொருட்களை எடுக்காமல் விட்டு விட்டார்; வீட்டுப் பொருட்களோடு புல்டோசர் கொண்டு இடித்துவிட்டார்கள்.
வீட்டில் இருந்த அடுப்பு முதல் உடை வைக்கும் அலமாரிகள் வரை நொறுக்கப்பட்டு விட்டன.
தனது வயது முதிர்ந்த பெற்றோர் மற்றும் மனைவி மற்றும் 2 வயது மகளோடு ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வந்துவிட்டார். வட இந்தியாவில் தற்போது கடுமையான குளிர்காலம் வாட்டி வதைக்கிறது. பொதுவாக ‘மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இது போன்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது.
ஆனால் இங்கு நடப்பதோ மனிதாபிமான மற்ற நடவடிக்கையாக உள்ளது. பீகார் மாநில நிர்வாகம் பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு வாக்களித்த மக்கள்பற்றிக்கூட கவலைப்படாமல் அடுத்த தேர்தலில் மீண்டும் ரூ.10,000 அல்லது அதனையும் விட அதிகம் கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள்.
இதற்கு பீகார் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.
காணொலி ஒன்றில் பேசும் அவர் ‘‘நான் பாஜகவின் முக்கிய பிரமுகரும் இப்பகுதி ஹிந்துத்துவ அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளராகவும் உள்ளேன்.
எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் என் வீட்டில் புல்டோசரைக் கொண்டு இடித்துவிட்டார்கள் குழந்தைக்கான பால் புட்டியைக் கூட எடுக்கவிடவில்லை’’ என்று கூறிய ஜனக்ராம் ஓம்கார் இடிந்த வீட்டின் இடிபாடுகள் முன்பு நின்று, “பிஹார் வர்தா” என்ற செய்தி சேனலின் செய்தியாளரிடம் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டே பேசுகிறார்.
அதே போல சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பீகார் தர்பங்கா மன்சரி பகுதியில் பெண்களுக்குத் ‘தொழில் துவங்குங்கள்’ என்று கூறி தலா 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர், அந்தப் பெண்கள் குடியிருக்கும் பகுதி சட்ட விரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டது என்று சொல்லி இடித்துத் தள்ளியுள்ளனர்.
40 ஆண்டுகளாகக் குடியிருந்திருக்கின்றனர். மின்சாரம், குடிநீர் இணைப்பு, (ரேசன்) குடும்ப அட்டை, ஆதார் அட்டை முகவரி யெல்லாம் இருந்த வீட்டை இடித்துத் தள்ளினர்.
காலங்கடந்தாவது பிஜேபி அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை உணர்ந்து இனியாவது விழித்துக் கொள்ளட்டும்.
